அமெரிக்காவிலிருந்து திரும்பிய சித்தார்த், இனி சென்னையில் வேலை செய்யப்போவதாகச் சொல்கிறான். உடனே அபியின் அண்ணன் சேது, ``சென்னைக்கு அபியையும் குழந்தைகளையும் கூட்டிட்டுப் போயிடுங்க” என்று நியாயமான யோசனையைச் சொல்கிறார். சித்தார்த்தின் அக்காவோ, ``அபியும் குழந்தைகளும் இங்கேயே இருக்கட்டும், வார இறுதியில் சித்தார்த் வந்து பார்க்கட்டும்'' என்று இந்தக் காலத்தில் யாருமே யோசிக்காத - யாருமே ஏற்றுக்கொள்ளாத போன நூற்றாண்டு யோசனையைச் சொல்கிறார்!
``நீங்க மட்டும் உங்க புருஷனோட இருப்பீங்க. அபி இந்த ஊரிலேயே இருந்து காலம் தள்ளணுமா? படிச்சவளா இருந்தும் எதையும் எதிர்த்துக் கேட்காததால, எல்லாத்தையும் நீங்களே முடிவு செய்யாதீங்க. அபியின் விருப்பத்தையும் கொஞ்சம் கேளுங்க” என்று சேது பொரிகிறார். இப்படிக் கேட்காவிட்டால், எல்லோரும் சேர்ந்து அபியை அந்த ஊரிலேயே தங்க வைத்துவிடுவார்கள் என்கிற பயம் சேதுவுக்கு மட்டுமல்ல; நமக்கும் வருகிறது. வழக்கம்போலவே எல்லோரும் அதிர்ச்சியடைகிறார்கள். சித்தார்த் கோபத்துடன் அபியையும் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதாகச் சொல்கிறான்.
அடுத்து வரும் நிகழ்காலக் காட்சியில் அமெரிக்காவிலிருந்து அபியின் குழந்தைகள் பேசுகிறார்கள். பாட்டி, தாத்தாவிடம் பேசுவதற்கு ஆசையாக இருப்பதாகவும் அம்மா சீக்கிரம் வர வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அவளும் விரைவில் வந்துவிடுவதாகக் குழந்தைகளைச் சமாதானம் செய்கிறாள்.
ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கு வரும் அபியை, சித்தார்த் வரவேற்கிறான். எதிர்பாராத காட்சி என்பதால், அபியைப் போலவே நமக்கும் இது அதிர்ச்சியாகவே இருக்கிறது. சேதுதான் அபி வரும் விஷயத்தைச் சொன்னதாகவும், `ஏதாவது உதவி வேண்டுமென்றால் கேள்' என்றும் சொல்லிவிட்டுச் செல்கிறான். `நான் வரும் விஷயத்தை ஏன் சித்தார்த்துக்குச் சொன்னே' என்று சேதுவிடம் கேட்கும் அபி, க்வாரன்டீன் முடிந்து ஊருக்கு வருவதாகச் சொல்கிறாள். தனிமை அவளை மீண்டும் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.
கடற்கரையை ஒட்டிய அழகான அப்பார்ட்மென்ட். பால் காய்ச்ச குடும்பமே வருகிறது. அக்கம்பக்கத்தில் பழக நினைக்கும் அபியை, சித்தார்த் தடுக்கிறான். அபியை மட்டுமல்ல, குழந்தைகளும் அதைச் செய்யக் கூடாது, இது செய்யக் கூடாது என்று எப்போதும்தான் நினைக்கிற மாதிரியே எல்லோரும் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.
அப்பாவின் நடவடிக்கைகள் குழந்தைகளையும் பாதிக்கின்றன. இப்படியொரு குணத்துடன் இருக்கும் ஒருவனோடு காலம் முழுவதும் வாழ்வது என்பது பொறுமையின் சிகரமான அபியால் மட்டுமல்ல, யாராலும் முடியாது.
கடந்த இரு எபிசோடுகளும் ஜெட் வேகத்தில் சென்று, அடுத்தடுத்த காட்சிகளில் எதிர்பாராத திருப்பங்களைக் கொடுக்கின்றன. இனி என்ன நடக்கப்போகிறது?
இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!
- எஸ் சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-for-episode-11
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக