Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

சென்னை: 3 மாதப் பெண் குழந்தை மீட்கப்பட்டது எப்படி? - தாயின் 18 மணி நேரப் பாசப்போராட்டம்

சென்னை கோயம்பேடு வாழைப்பழ மொத்த வியாபாரக் கடையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் (30) வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சத்யா. இந்தத் தம்பதியினருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும், 3 மாதத்தில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடையின் வாசலில் குடும்பத்தோடு ரமேஷ் தங்கியிருந்தார். இந்தச் சூழலில் நவம்பர் 8-ம் தேதி கடையின் முன், ரமேஷ் மற்றும் அவரின் குடும்பத்தினர் தூங்கினர். 9- ம் தேதி அதிகாலையில் கண்விழித்த பெற்றோர், தங்களின் 3 மாத பெண் குழந்தையைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.

மீட்கப்பட்ட குழந்தையுடன் ரமேஷ், சத்யா

உடனடியாக இருவரும் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் குழந்தையைத் தேடினர். பிறகு கோயம்பேடு காவல் நிலையத்தில் சத்யா புகாரளித்தார். அப்போது பணியிலிருந்து எஸ்.ஐ ஒருவர், அலட்சியமாக செயல்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சமூகவலைதளத்திலும் கருத்துக்கள் பதிவாகின. இதையடுத்து குழந்தையைக் கண்டுபிடிக்க சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்படி துணை கமிஷனர் ஜவஹர் மேற்பார்வையில் கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், ரமேஷ் குடும்பத்தினர் தூங்கிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் சில கேமராக்கள் பழுதடைந்திருந்ததால் கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.

குழந்தை காணாமல்போன நேரத்திலிருந்து சத்யா, எதுவும் சாப்பிடாமல் அழுதுக் கொண்டே இருந்துள்ளார். அவருக்கு கணவர் ரமேஷ் மற்றும் பெண் காவலர்கள் ஆறுதல் கூறியபோதும் அவர் சமதானமடையவில்லை. இந்தச் சமயத்தில் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் பிளாட்பாரத்தில் துணியில் சுற்றப்பட்ட நிலையில் பெண் குழந்தை அழுதுகொண்டிருப்பதாக நேற்றிரவு அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்குச் சென்று பார்த்தபோது, கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து கடத்தப்பட்ட ரமேஷ் - சத்யா தம்பதியினரின் குழந்தை எனத் தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு ரமேஷ், சத்யாவை அழைத்துக் கொண்டு சென்ற போலீஸார், குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கடத்தப்பட்ட குழந்தை

Also Read: மூன்று பேர் கைது; இருவர் தப்பியோட்டம்! - கோவைக் குழந்தைக் கடத்தல் வழக்கு நிலவரம்

குழந்தையைப் பார்த்த மகிழ்ச்சியில் சத்யா, முத்த மழை பொழிந்தார். பிறகு, குழந்தைக்கு பாலுட்டினார். ரமேஷின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது. கண்ணீர் மல்க ரமேஷும் சத்யாவும் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர். அதன்பிறகு அனைவரும் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு வந்தனர். அண்ணாநகர் துணை கமிஷனர் ஜவஹர், குழந்தையை பாசமாக தூக்கி கொஞ்சினார். பிறகு, குழந்தைக்கு அவர் கிஃப்ட் கொடுத்தார். கோயம்பேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசனும் ஒரு கிஃப்ட்டை குழந்தைக்கு வழங்கினார். கோயம்பேடு மார்க்கெட்டில் 9-ம் தேதி அதிகாலையில் கடத்தப்பட்ட குழந்தை, எப்படி அம்பத்தூர் பகுதி வரை சென்றது என போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், ``குழந்தை கடத்தப்பட்டத் தகவல் கிடைத்ததும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் குழந்தையின் போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தோம். அதனால், ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழந்தையை போலீஸார் தேட ஆரம்பித்தனர். இது கடத்தல்காரர்களுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன்

இந்தச் சமயத்தில்தான் திருநங்கை ஒருவர், கோயம்பேடு போலீஸாரிடம் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்தார். குழந்தை கடத்தப்பட்ட இரவில் சந்தேகப்படும்படியாக இரண்டு பேர் சுற்றித்திரிந்ததாகக் கூறினார். அந்தத் தகவலின்படி யார் அவர்கள் என விசாரணை நடத்தினோம். கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து வெளியில் வரும் இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளில் யாராவது குழந்தையுடன் செல்கிறார்களா என கண்காணித்தோம். இந்தச் சமயத்தில்தான் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள 2-வது தெருவில் குழந்தையை மீட்டுள்ளோம். குழந்தையை அங்கு விட்டுச் சென்றவர்களின் சிசிடிவி கேமரா பதிவுகள் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் அவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

Also Read: சென்னை: தாயுடன் படுத்திருந்த 3 மாத குழந்தை கடத்தல்! - அலட்சியமாக செயல்பட்ட எஸ்.ஐ-க்கு மெமோ

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குழந்தையைக் கடத்தியவர்கள், சஞ்சனாவுக்கு மூன்று நேரமும் பால் கொடுத்துள்ளனர். தாயின் அரவணைப்பு இல்லாத குழந்தை அழுதபடியே தூங்கியிருக்கிறது. போலீஸாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்ததால், வேறுவழியின்றி குழந்தையைக் கடத்தல் கும்பல் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் விட்டுவிட்டு சென்றிருக்கிறது. குழந்தை கடத்தப்பட்ட தகவல் கிடைத்ததும் இரண்டு கோணங்களில் விசாரணையைத் தொடங்கினோம். குழந்தையைக் கடத்தி அதை குழந்தை இல்லாதவர்களுக்கு விற்கும் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என்ற கோணத்தில் ஒரு போலீஸ் டீம் விசாரித்தது. இன்னொரு டீம், தமிழகம் முழுவதும் செயல்படும் குழந்தைக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் நெட்வொர்க்கை ரகசியமாகக் கண்காணித்தது.

கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

குழந்தை காணாமல்போன நேரத்திலிருந்து கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வெளியில் சென்ற வாகனங்களின் விவரங்களைச் சேகரித்து விசாரிக்கத் தொடங்கினோம். விசாரணையில் குழந்தையைக் கடத்திய கும்பல் குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. உடனடியாக அந்தக் கும்பலை போலீஸ் டீம் நெருங்கியபோதுதான், வேறுவழியின்றி குழந்தையை விட்டுவிட்டு அந்தக் கும்பல் தப்பியிருக்கிறது. விரைவில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

குழந்தைக் கடத்தப்பட்ட 18 மணி நேரத்துக்குள், அதை மீட்ட போலீஸ் டீமை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-rescued-kidnapped-3-month-old-child-in-18-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக