Ad

புதன், 11 நவம்பர், 2020

விருதுநகர்: `ஒருவரின் இறப்பில்தான் அரசியல் செய்ய வேண்டுமா?’ - கொந்தளித்த முதல்வர் பழனிசாமி!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் துவக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். ரூ.27.51 கோடி மதிப்பிலான 30 திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். 11.35 கோடி மதிப்பிலான 15 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகளின் கீழ் 36 லட்சம் மதிப்பிலான 8,466 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆய்வுக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

திட்டங்களை தொடங்கிவைத்த முதல்வர்

”கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு 40 சதவீதமாக இருந்த நுரையீரல் பாதிப்பு 90 சதவீதமாக அதிகரித்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. துரைக்கண்ணுவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எதை வைத்து குற்றம்சாட்டுகிறார்.

இறப்பில் மர்மம் இருக்கிறது என அவர் கூறியது கண்டிக்கத்தக்கது. வார்த்தையை ஸ்டாலின் கவனமாகக் கையாள வேண்டும். அரசியல் செய்வதற்கு எவ்வளவோ விசயம் இருக்கும்போது துரைக்கண்ணுவின் மரணத்தில் அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. ஒருவரின் இறப்பை வைத்துதான் அரசியல் செய்வது நியாயமா? ஸ்டாலினின் தந்தையார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியும் அதே மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றார்.

எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் சொல்வதைப் பார்த்தால் அவரது தந்தையார் மரணத்தில் சந்தேம் இருக்கிறது என சொல்லத்தான் முடியுமா? கொரோனா காலத்தில் அரசு மேற்கொண்ட பணிகளை குறை சொல்கிறார். கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் முதல் தற்போதுவரை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளதும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணமே அவர்கள்தான். உண்மையான எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் அவர்களின் பணிகளை பாராட்ட வேண்டும். அரசு ஊழியர்களைப் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. குறைசொல்லாமல் இருந்தால் போதும். ஸ்டாலின் மீது உச்சநீதிமன்றத்தில் ஒரு தேர்தல் வழக்கு தொடங்கியுள்ளது.

நலத்திட்ட உதவி வழங்கல்

அந்த வழக்கின் தீர்ப்பு அவருக்கு எதிராக அமைந்தால் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது. எங்களின் திட்டங்களைக் குறைசொல்லி, விமர்சனம் செய்து மக்களிடம் வாக்குக் கேட்பதை நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இன்ன இன்ன திட்டங்களை நிறைவேற்றுவோம் எனச் சொல்லி வாக்கு கேளுங்கள். எதிர்க்கட்சித் தலைவர் என்றால் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுங்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-eps-slams-stalin-in-virudhunagar-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக