சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் பழனி. இவருக்கு சொந்தமாக ஆடுகள் உள்ளன. இவர் வளர்த்து வந்த ஒரு ஆடு, கடந்த அக்டோபர் 9-ம் தேதி திருட்டுப் போனது. இதுகுறித்து பழனி, மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் ஆட்டைத் தேடிவந்தனர்.
உதவி கமிஷனர் அருள்சந்தோஷமுத்து, இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் ஆடு திருட்டு குறித்து விசாரித்தனர். விசாரணையில் ஆடுகளைத் திருடும் இளைஞர்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்தன.
இதுகுறித்து மாதவரம் போலீஸார் கூறுகையில் ``சென்னைப் புறநகர் பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடப்பட்டு வந்தன. ஆனால் அதுதொடர்பாக பலர் காவல் நிலையங்களில் புகார்கள் அளிப்பதில்லை. பழனி அளித்த புகாரின் பேரில் மாதவரம் மஞ்சம்பாக்கம் ரிங் ரோடு பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அப்போது சொகுசு காரில் வந்த இளைஞர்கள் இருவர், சாலையில் படுத்துகிடந்த ஆட்டை தூக்கிக் காருக்குள் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அதைப்பார்த்தும் அவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. உடனே அவர்களை மடக்கிப் பிடித்தோம். பின்னர் இருவரையும் மாதவரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம். விசாரணையில் அவர்களின் பெயர் நிரஞ்சன்குமார் (36), லெனின்குமார் (32) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். நிரஞ்சன்குமாரின் தந்தை சினிமா படத்தயாரிப்பாளர். லெனின்குமார் பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவந்துள்ளனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. `நீதான் ராஜா' என்ற படத்தை சமீபத்தில் எடுத்திருக்கின்றனர். அந்தப்படத்தில் நிரஞ்சன்குமாரும் லெனின் குமாரும் நடித்திருக்கின்றனர்.
படத்தைத் தயாரிக்க பணம் தேவைப்பட்டதால் ஆடு திருட்டு சம்பவத்தில் இருவரும் ஈடுபட்டியிருக்கின்றனர். இதற்காக சொகுசு கார் மற்றும் மினி லாரி ஆகிய வாகனங்களை சொந்தமாக வாங்கியிருக்கின்றனர். அதில்தான் ஆடுகளைத் திருடி சென்னையில் விற்றுவந்திருக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக ஆடு திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இதையடுத்து இருவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளோம். ஆடுகளைத் திருட பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.
ஆடு திருட்டு வழக்கில் நடிகர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-actor-and-his-brother
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக