Ad

புதன், 4 நவம்பர், 2020

"விகடன் விருது விழாவில் நடந்தது என்ன... விகடன் எனக்கு ஃப்ரெண்டா?!"- பார்த்திபன் தொடர் - 22

விகடன் விருதை நீங்கள் நிராகரித்தபோது சிலர் 'சரிதான்' என்றார்கள். சிலர் 'இதுதான் பார்த்திபன்' என்றார்கள். அதன் பிறகு இப்போது மீண்டும் விகடனோடு இணைந்திருப்பதால் 'என்ன இது பார்த்திபன்' என்கிறார்கள்... இந்த விமர்சனத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

கோ.ராஜசேகர், தர்மபுரி

''தர்மபுரியில் இருந்து வந்திருக்கும் இந்த கேள்வி விகடனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இந்தக் கேள்வியை தவிர்க்கணும்னு ஆரம்பத்திலிருந்தே யோசிச்சோம். ஆனால், இது தவிர்க்கவே முடியாத கேள்வி ஆகிடுது. இதை எப்படி நான் புரிய வைக்கிறதுன்னு தெரியல. அடிக்கடி நான் சொல்ற மாதிரி பிரிஞ்சாலும் காதல்தான். கட்டிப் பிடிச்சிக்கிட்டே இருந்தால் மட்டும் காதல் இல்லை. பிரியும்போது கூட ஒரு வகையான காதல் இருக்கும். யாரையும் நோகடிக்காமல், அழவைக்காமல், வருத்தப்படவைக்காமல்... அவங்க மேல நமக்கு இருந்த மரியாதை மரியாதை தானே. ஏதோ ஒரு பிரச்னை இருந்தது. அதனால அவங்க மேல இருந்த மரியாதையை நாம மாத்திக்க முடியாதுல்ல. இது விவாகரத்து ஆனதுக்கு அப்புறம்கூட நான் மனப்பூர்வமாக நினைக்கிற விஷயம். எந்த உறவும் உறவுதான். அந்த நேரத்தில் அது உண்மைதான். அதுக்கப்புறம் சில சில மாற்றங்கள், சில சில விஷயங்கள் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

எனக்கும் விகடனுக்கும் ஆன உறவு மிக நீண்ட ஒரு உறவு. எனக்கு யாராவது சின்ன உதவி செஞ்சாக்கூட மனசுல அதை நான் பெருசா எடுத்துப்பேன். விகடன் பாலசுப்ரமணியம் சார் எனக்கு செய்த உதவிகள் காலத்தால் மறக்க முடியாது. இது பத்திரிகைக்கு அப்பாற்பட்ட விஷயம். என்னுடைய கோபம்கூட அந்த பத்திரிகை மேல எனக்கு இருந்த அன்புனாலதான். அதை தான் நான் நிறைய தடவை புரியவைக்க முயற்சி பண்றேன். அன்பு இல்லைனா சில விஷயத்தை சீக்கிரமா கடந்து போய்விடலாம். அன்பு இருக்கும் போது அதை கடந்து போறது ரொம்ப கஷ்டம். நான் சில பேர் மேல பெரிய மரியாதை வெச்சிட்டேன்னா, அந்த மரியாதையை எப்பவும் மாத்திக்க மாட்டேன்.

விகடன்ல இருந்து இப்படி ஒரு கேள்வி பதில் தொடர் பண்ணித்தரமுடியுமான்னு கேட்கும்போது அவங்ககிட்ட ஸ்ட்ராங்கா ஒரு விஷயத்தை சொன்னேன். 'நான் விகடன்கிட்ட இருந்து என்னைக்கும் விருது வாங்க மாட்டேன். அது கன்ஃபர்மான விஷயம். ஆனா, இந்த கேள்வி பதில் நான் செஞ்சு தரேன்'னு சொல்லிட்டு கிட்டத்தட்ட 25 வாரத்தை நாம நெருங்கிட்டோம். சில விஷயங்கள் மனசுல தங்கிடும். அதுல ஒண்ணு விருது. அதுல எனக்கு நடந்ததை நான் மிகப் பெரிய அநீதியாதான் நினைக்கிறேன். நம்ம வீட்டு பிள்ளையை நாமளே பாராட்டலைன்னா, வேற யார் பாராட்டுவா?! இந்தக் கேள்விக்கு எனக்கு பதிலே தெரியல. இன்னமும் அவங்களோட கேள்விக்கு நான் பதில் சொல்லிட்டே இருக்கேனே தவிர, என்னுடைய கேள்விகளுக்கு அவங்க இன்னும் பதில் சொல்லல. பிரிவிலும் ஒரு காதல். அந்த மாதிரி தான் என்னுடைய பதில்கள். அதைத் தொடர்ந்து ஆராதிக்கிற ஆமோதிக்கிற, குதூகலிக்கிற, கொண்டாடுகிற உங்களைப்போன்ற ரசிகர்கள் இருக்கும்போது, இதுவும் விகடனிடம் இருந்து வந்த விருதுபோலவே நான் நினைக்கிறேன்.''

அன்பின் பார்த்திபனுக்கு வணக்கம். உங்களுடைய உழைப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். மீடியா மட்டுமல்ல நீங்களும் கூட உங்களிடம் முதல் படமாக 'புதிய பாதை' படத்தைத்தான் சொல்கிறார்கள். ஆனால், இதற்கு முன்பாகவே 'தாவணி கனவுகள்' படித்தில் நீங்கள் ஒரு காட்சியில் அல்ல, படம் முழுக்கவே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தீர்கள். அப்படியிருக்கும்போது அதுதானே உங்கள் முதல் படம்? ஹீரோவாக நடிக்காததால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாதா?!

கண்ணன், Ras Al Khaima

"நான் அதை கணக்கில் எடுத்துக்கிட்டேன்னு வெச்சிக்கோங்களேன், இதுவே வேற மாதிரியான விமர்சனமாவும் இருக்கும். 'அவங்கங்க 100 படத்துக்கு மேல ஹீரோவா நடிச்சிருக்காங்க, நீங்க துக்கடாவுக்கு நடிச்சது, பக்கோடாவுக்கு நடிச்சதையெல்லாம் கணக்குல சேர்த்துக்கிறீங்களே'ன்னு சொல்லியிருப்பாங்க. எண்ணிக்கையிலும் உங்களுக்கு அவ்ளோ பெரிய விருப்பமானு கேட்கலாம். மேல இருந்து வரும் மழைத்துளி ஒரு செடி மேல விழும்போதுதான் அதோட சத்தம் நமக்கு கேட்கும். அதுவரைக்கும் அந்தத் துளி எங்கிருந்து ஆரம்பிக்குதுன்றதே நமக்குத் தெரியாது. 'புதிய பாதை' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற, நானே மிக தைரியமாக கதாநாயகனாகவும் நடித்தப் படம். 'தாவணிக் கனவுகள்' படத்தில் எனக்கு நல்ல பேர் கிடைச்சது. நிறைய நல்ல நல்ல விமர்சனங்கள். 'யார் கண்டது பின்னாளில் ஒரு பாக்யராஜா என்னவோ' அப்படினுகூட ஒரு விமர்சனம். எனக்கே ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்.

'தாவணிக்கனவுகள்' என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான படம். ஏன்னா நான் சினிமாவில் நடித்து பெரிய ஆளாவேனா என்கிற குழப்பத்தை என் அப்பாவுக்கு தவிர்த்தப் படம் 'தாவணிக் கனவுகள்'. இவன் 'பொழச்சுக்குவான்'னு எங்க அப்பாவுக்கு நம்பிக்கை கொடுத்தப்படம். இப்போது இரண்டு தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள்ன்னு எண்ணற்ற விருதுகள் வாங்குவான், இப்படி ஒரு மழைக்காலை வேளியில் கண்ணன் போன்ற விகடன் வாசகர்களுக்கு பதில்கள் சொல்லுவான்னு அவருக்குத் தெரியாது. ஆனால், இதெல்லாம் நடக்கும்கிற ஒரு நம்பிக்கை 'தாவணிக்கனவுகள்' மூலமாக கிடைச்சது. 'தாவணிக் கனவுகள்' படத்துக்கு முன்னாடியே நான் துண்டு துண்டு வேஷங்கள்ல நடிச்சிருக்கேன். ஏகப்பட்ட நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். நாடகங்கள்ல என்னோட வசனம் மட்டும் இல்ல, எல்லாருடைய வசனங்களையும் மனப்பாடம் பண்ணி வைப்பேன். அங்க இருந்து இங்க வந்து சேர்ந்த நிலைமையை நினைக்கும்போது இப்பவும் எனக்கு ஆச்சர்யமா இருக்கு. 'தாவணிக் கனவுகள்' என் வாழ்க்கையில் மிக மிக முக்கியமான படம். இந்தப் படத்தை என் பட்டியலில் சேர்க்க முடியுமான்னு நிச்சயமா நான் பார்க்குறேன்."

பார்த்திபன்

நீங்கள் அதிக டேக் வாங்கி நடித்தப்படம், நடித்தக் காட்சி எது?!

சீனு, கரூர்

'' 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் அநேகமான காட்சிகள் எல்லாமே அதிக டேக் வாங்கி நடித்தக் காட்சிகள்தான். அதுக்கு காரணம் ஆக்டர் சரியா நடிக்கலைன்னோ, நான் சரியா நடிக்கலைன்னோ, அங்க கேமரா ஆங்கிள் சரியாயில்லைன்னோ எந்தக் காரணமும் இருக்காது. அந்த காட்சிகள் எடுக்கும் போது கிட்டத்தட்ட 5000 பேர் அங்க இருப்பாங்க. அதுல 1000 நடிகர்கள் இருப்பாங்க. இவங்க எல்லாருடைய ஒருங்கிணைப்பில் அந்த ஷாட் சரியா அமையலைனா, ஒரு சின்ன ஸ்கிராட்சா இருந்தாக்கூட திரும்ப ஒன் மோர் டேக் எடுப்பாரு இயக்குநர். அதனால எல்லாருமே நிறைய டேக் வாங்க வேண்டியது இருந்தது. குறிப்பா எனக்கும் ரீமாசென்னுக்கும் இருந்த காதல் காட்சிகள் நிறைய டேக் போச்சு. கோ ஆர்டினேஷன் மிஸ் ஆகும். 'நெல்லாடிய நிலமெங்கே' பாட்டு நிறைய ரீடேக் போச்சு. நான் சரியா பண்ணா, ரீமாசென் சரியான ரிதம்ல இறங்கமாட்டாங்க. அது மிஸ் ஆகும். அது லாங் ஷாட்டா இருந்தாக்கூட தப்புன்னு நமக்குத் தெரியும்போது அதை அப்படியே வெளியேகொண்டு வரக்கூடாதுன்னு ரீடேக் எடுப்பார். உள்ளுக்குள்ள ஒரு தவறு நடந்தது நமக்கு தெரிஞ்சதுக்கு அப்புறம் அதை அப்படியே ஆடியன்ஸுக்கு கொண்டுபோய் கொடுக்க வேண்டாம்னு செல்வராகவன் நினைப்பார். இதை நான் அவர்கிட்ட இருந்துதான் தெரிஞ்சுகிட்டேன். நான் ரொம்ப பர்ஃபெக்‌ஷன் பார்ப்பேன். ஆனா எனக்கு பட்ஜெட் கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனா, அவர் அதையெல்லாம் பார்க்காமல் எடுத்ததால்தான் அந்தப் படம் இன்னமும் பேசப்படுகிறது. என்னை பாலிஷ் பண்ணிக் கொள்வதற்காக நான் நிறைய டேக் வாங்கினேன்.''

சார், ஒரு பாலசந்தர், ஒரு பாரதிராஜா, ஒரு ஷங்கர், ஒரு பார்த்திபன்.... மறந்துட்டனே ஒரு பாக்யராஜ்! இந்த லிஸ்ட்ல நிறைய பேர் இல்லையே ஏன்... வாய்ப்புக்கு பஞ்சமா இல்லை ரசிகர்கள் மாறிட்டாங்களா?

ரங்கராஜன், புது டெல்லி

பார்த்திபன்

'' 'ஓ மறந்துட்டேனே பாக்யராஜ்'... அவ்ளோ சீக்கிரம் மறக்க கூடியவரா அவர். அவர் ஏற்படுத்தின சாதனைகள் சாதாரண விஷயமே இல்லை. நீங்க சொல்ற லிஸ்ட்ல பாலசந்தர் சார், பாரதிராஜா சார், பாக்யராஜ் சார், மிஸ்டர் ஷங்கர் இவங்க எல்லாருக்குமே வாய்ப்பு கிடைச்சது பெரிய ஆள் ஆயிட்டீங்கான்னு நினைக்காதீங்க. எனக்குத் தெரிஞ்சு வாய்ப்புகள் அவ்வளவு சாதாரணமா கிடைக்கிறதில்லை. நாமதான் செதுக்கணும், நாமதான் வாய்ப்புகளை ஏற்படுத்தணும். தொடர்ந்து ஒரு மனுஷன் ஜெயிக்கிறது அதிர்ஷ்டத்தால் முடியாது. நான் உள்பட எல்லாருரின் வளர்ச்சியிலுமே கடினமான உழைப்பு உழைப்பு இருக்கு. எனக்கு அடிக்கடி ஒரு கேள்வி இருக்கும்... 'இந்தப் பயணம் எதை நோக்கியது?'. இப்ப 'இரவின் நிழல்' அப்படின்னு ஒரு படம் பண்றேன். இந்தப் படத்தோட மாபெரும் வெற்றி எனக்கு என்ன கொடுக்கும், ஏன் இவ்வளவு போராடுறோம்னா நீங்க சொல்ற இந்த லிஸ்ட்ல நீடிச்சு நிக்கிறதுக்கு இவ்வளவு போராட்டம் தேவைப்படுது. அதனால வாய்ப்புகள் அவ்வளவு வேகமாக வந்துடாது."

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Also Read: குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/from-vikatan-awards-to-filmmaking-parthiban-answers-readers-questions-part-22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக