தமிழகத்திலிருந்து மஞ்சள் கடத்திச் சென்ற கடத்தல்காரர்கள், இலங்கை கடற்படையினரிடம் சிக்கிய நிலையில், கொரோனா அச்சத்தின் காரணமாக விடுவிக்கப்பட்டனர். நாட்டுப்படகுடன் விடுவிக்கப்பட்ட அவர்களிடம் உரிய விசாரணை நடத்தும்படி தமிழக அதிகாரிகளிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் கடும் தட்டுப்பாடு நிலவிவரும் சமையல் மஞ்சளான விரலி மஞ்சள் இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி இலங்கையிலுள்ள கடத்தல்காரர்கள், தமிழகக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழகம் மற்றும் இலங்கையில் மஞ்சள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் அவ்வப்போது போலீஸாரிடமும், கடற்படையினரிடமும் சிக்கிவந்தாலும், மஞ்சள் கடத்தல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சுமார் 5,700 கிலோ மஞ்சளை இலங்கைக் கடற்படையினர் கைபற்றியிருக்கிறார்கள். இலங்கையின் வடமேற்கு கடற்படையினர் ரோந்து சென்றனர். இந்த ரோந்தின்போது இலங்கை குதிரமலை துடுவ பகுதியில் சர்வதேசக் கடல் எல்லையினுள் சென்ற இந்தியப் படகிலிருந்து இலங்கைப் படகுக்கு மஞ்சள் மூடைகள் ஏற்றிக்கொண்டிருப்பதைக் கண்டனர். இதையடுத்து அந்தப் படகுகளை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது, 78 சாக்குகளில் சுமார் 3,218 கிலோ சமையல் மஞ்சள் சிக்கியது.
இது தொடர்பாக தமிழகப் படகிலிருந்த தூத்துக்குடி மாவட்டம், கீழவைப்பார் பகுதியைச் சேர்ந்த கிங்பன், புருனோ, யஷ்வந்த், சுபாஷ் மற்றும் இலங்கையை சேர்ந்த இருவரிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மஞ்சள் மூடைகள் தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டுவந்தது தெரியவந்தது. இதையடுத்து மஞ்சள் மூட்டைகளைக் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் நான்கு பேரையும் படகுடன் விடுவித்தனர். இலங்கையைச் சேர்ந்த இருவரை விசாரணைக்காக இலங்கை சிலாவத்துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் கல்பிட்டி முகத்துவாரப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 1,256 கிலோ விலையுயர்ந்த உலர்ந்த மஞ்சளையும், துடுவ கடற்கரைப் பகுதியில் 1,237 கிலோ உலர்ந்த மஞ்சளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலங்கையைச் சேர்ந்த படகு மற்றும் 695 கிலோ மஞ்சளையும் போலீஸாரிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படையினர் எஞ்சிய மஞ்சளைக் கடற்படையின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இந்தநிலையில் கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக விடுவிக்கப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த மஞ்சள் கடத்தல்காரர்கள் நான்கு பேர் குறித்து விசாரணை நடத்தும்படி தமிழக பாதுகாப்பு அதிகாரிகளிடம் இலங்கை கடற்படையினர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
Also Read: பாம்பன்: படகுடன் சிக்கிய 1,000 கிலோ மஞ்சள்! - கடத்தல் கும்பலைத் தேடும் போலீஸார்
source https://www.vikatan.com/news/crime/5-tons-of-turmeric-seized-by-sri-lankan-navy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக