நேற்றைய கட்டுரையின் இறுதியில் சொல்லியிருந்தபடி இந்த வார விசாரணை சபையில் தீவிரமாக விவாதிக்கக்கூடிய விஷயங்கள் என்று பெரிதாக எதுவும் இல்லை. பிரதானமானது. ‘மணிக்கூண்டு டாஸ்க்’தான்.
தாமதமாக எழுந்து வந்து தனது அணிக்கு தோல்வியை வாங்கித் தந்த பாலாஜியை கமல் அழுத்தமாக கண்டிக்காமல், வழக்கம் போல் வலிக்காமல் தடவி விட்டுச் சென்றார். ‘நாதஸ் திருந்திட்டான்.. அவனே சொன்னான்’ என்கிற நகைச்சுவை வசனம் போல ‘பாலாஜி... இப்ப தலையெல்லாம் படிய வாரி, கோபத்தைக் குறைச்சுட்டு ஜெபமாலை உருட்டி நிறைய மாறிட்டார்ல’ என்கிற புகழுரை வேறு. விட்டால் உலக அமைதிக்கான நோபல் பரிசிற்கு பாலாஜியை கமல் பரிந்துரை செய்வார் போலிருக்கிறது.
கோபத்தில் கதவை எட்டி உதைத்த ரியோவை அடிக்கோடிட்டு கண்டித்த அளவு கூட பாலாஜியின் பக்கம் கமல் வரவில்லை. ‘கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும்’ என்கிற பழமொழியெல்லாம் சரிதான். ஆனால், அதுவே அனைத்து தவறுகளையும் நியாயப்படுத்தி விடும் மருந்தாகி விடாது.
ஓகே.. 48-ம் நாளில் என்ன நடந்ததென்று பார்ப்போம்.
‘போக்கிரி’ விஜய்யின் உடையலங்காரத்தை நினைவுப்படுத்துவது போன்ற ஸ்டைலான அவுட்ஃபிட்டுடன் வந்தார் கமல். பொதுவாக இவரது உடையை உருவாக்குவதில் பட்டனுக்கே அதிக பட்ஜெட் செலவாகும் போலிருக்கிறது. ‘சட்டை மேலே எத்தனை பட்டன்’ என்பது போல் அநாவசிய பொத்தான்கள் நிறைய இருக்கின்றன.
‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்கிற அருமையான வாக்கியத்துடன் நிகழ்ச்சிக்குள் வந்தார் கமல். “நேரத்தைக் கணிக்கும் விளையாட்டு உள்ளே நடந்தது. நவீன வசதிகள் இருக்கும் இப்போதைய காலத்தில் நேரத்தை அறிவது எளிது. ஆனால் இவை இல்லாத சமயத்தில் மனித குலம் எப்படி இயங்கியிருக்கும்? நம் உடம்பிற்குள்ளேயே ஓர் அகத் தாளம் (Circadian rhythm) இருக்கிறது. இரவு, பகலைக் கண்டுபிடிக்கிறது’ என்று பொழிப்புரை வழங்கி விட்டு ‘'வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாமா?'’ என்று அழைத்துச் சென்றார் கமல்.
இயக்குநர் சுந்தர்ராஜன் தொடர்பான நகைச்சுவைக் காட்சி ஒன்று உண்டு. சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒருவனை தடுத்தி நிறுத்தி ஒரு பேப்பரை தருவார் அவர். அவன் அதில் எதையோ தேடி வாசிக்க முற்படும் போது ‘அதுல ஒண்ணுமில்ல. கீழே போட்ரு’ என்பார். கமல் அறிமுகப்படுத்திய வெள்ளிக்கிழமை நிகழ்வுகளும் இப்படித்தான் இருந்தன.
‘டங்காமாரி ஊதாரி’ என்கிற ரகளையான பாடலுடன் பொழுது விடிந்தது. ‘அழுக்கு மூட்டை மீனாட்சி.. மூஞ்சைக் கழுவி நாளாச்சு’ என்ற வரி ஒலித்த போது கேமரா ரம்யாவைக் காட்டியதை மாபாதகம் எனலாம். டவலை உதறி உதறி உடம்பைத் துடைப்பது போல தன் தலைமுடியைத்தானே உதறி நடனம் ஆடினார் சுச்சி.
வேகமான தாளத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் பாடலின் இடையில் மெதுவாகச் செல்லும் ஒரு நாதஸ்வர ஒலித்துணுக்கை அருமையாக இணைத்திருப்பார் ஹாரிஸ். இந்த போர்ஷன் வரும் போது, ‘குனித்த புருவமும் கோவைச் செவ்வாயில்’ என்று தளபதி ‘ஷோபனா’ போல கையில் விளக்கேந்தியபடி சனம் சில நடன அசைவுகளைச் செய்ய விழி பிதுங்கி பார்த்தார் ரியோ.
‘கலக்கி’யை பங்கிட்டுச் சாப்பிடும் போது அர்ச்சனாவிற்கும் சோமிற்கும் ஓர் ஊடல் எழுந்து உடனே அடங்கியது. சாப்பாட்டு விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் கோபப்படும் அர்ச்சனா, சோம் விளையாட்டுக்காக எதையோ சொன்னதைக் கேட்டு ‘மூட்அவுட்’ ஆனார். ஆனால் இந்தத் தீயில் தனது உற்சாக சிரிப்பை போட்டு உடனே அணைத்தார் சோம். இந்த முயற்சியில் அவருக்கு புரையேறிக் கொண்டது.
உலகப் பிரசித்தி பெற்ற அந்த வட்டமேஜை மாநாடு தொடங்கியது. ஆம்... அனிதாவும் ஆரியும் பேச அமர்ந்தார்கள். ‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா’ பாடலில் வரும் மம்முட்டி, பானுப்பிரியா போல அவர்கள் தொடர்ந்து பேசியும் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. அப்புறம் மூளையை கசக்கிக் கொண்டு பார்த்ததில் ஆரி கேப்டனாக இருந்த போது நடந்த விவகாரம். (யப்பா.. டேய். இது போன சீஸன்ல நடந்ததாச்சே?!).
உரையாடலின் இறுதியில் ‘SORRY’ என்று மேஜையில் எழுதி அனிதா கையெழுத்திட பேச்சு வார்த்தை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ‘இந்த வாரம் நான் போயிடுவேன்’ என்கிற டிப்ரெஷனில் அனிதா இருக்கிறார்.
அகம் டிவி வழியே வந்த கமலை ‘ஸ்மார்ட்டா இருக்கீங்க... சார்’ என்று ஹவுஸ்மேட்ஸ் ஐஸ் வைக்க ‘தென்னிந்தியாவுலயே இதுதான் சிறந்த முறையில் ஆடை அணிந்திருக்கும் வீடு’ என்று அவர்களை பதிலுக்கு குளிர வைத்தார் கமல். ‘குழாயடிச் சண்டை மிகப் பிரமாதம்’ என்று அர்ச்சனாவையும் நிஷாவையும் பாராட்டி விட்டு ‘வருங்காலத்தில் நீருக்குகாகத்தான் உலகப் போர் நடக்கும்’ என்பது போல லோக்கல் விஷயத்தை இன்டர்நேஷனல் லெவலுக்கு கமல் இணைத்து எடுத்துச் சென்ற போது ‘நோட் பண்ணுங்கப்பா. நோட் பண்ணுங்கப்பா’ என்று பிரமிப்பாக இருந்தது.
கறுப்பு வெள்ளை திரைப்படக் கால பிளாஷ்பேக்கிற்கு சென்ற கமல் எம்.ஜி.ஆர் உடனான தனது தனிப்பட்ட அனுபவங்களையும், எம்.ஆர். ராதாவும் எம்.ஜி.ஆரும் அசந்தர்ப்பமான தருணத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த விஷயத்தையும் பகிர்ந்தார். ‘கண்ணாடி உடையும் படி விளையாடாதே’, ‘கடுமையான சண்டை ஏற்பட்டாலும் பிறகு நட்பாகி விட வேண்டும்’ என்பதே தனது பிளாஷ்பேக் அனுபவங்களின் மூலம் போட்டியாளர்களுக்கு கமல் சொல்ல வரும் செய்தி.
"மணிக்கூண்டு டாஸ்க்கில் ஒரே ஒரு நிமிட வித்தியாசத்தில் மூன்று மணி நேரத்தை ரியோ அணி கணித்தது வியப்பான சமாசாரம்" என்று பாராட்டிய கமல், மூன்று சுற்றிலும் திறம்பட செயல்பட்ட அர்ச்சனா குழுவையும் பாராட்டினார்.
அடுத்ததாக பாலாஜி அணிக்கு வந்தார். என்ன சொல்ல? வழக்கம் போல் கமல் சிரிக்க, பவ்யமான முக பாவனையுடன் அதற்கு பாலாஜியும் சிரிக்க… ‘சொன்னா கேட்டுக்குவான். நல்ல பையன்’ என்று இதைக் கடந்து வந்தார் கமல். புன்னகையால் மழுப்பி ரம்யா சில விஷயங்களை போட்டுக் கொடுக்க முயன்றும் அது எடுபடவில்லை. ‘கேமோட ஸ்பிரிட்டை நீங்க கெடுக்காம இருந்தா உங்க டீம்மேட்டுகளும் சந்தோஷமா இருப்பாங்க. நீங்க முன்னேறுவதற்கும் அது ஒரு வாய்ப்பு’ என்பதுதான் பாலாஜியைப் பற்றி கமல் சொன்ன சுருக்கமான விமர்சனம்.
‘'நீங்க என்ன சுச்சி சொல்றீங்க?” என்று அவரின் பக்கமாக வந்த கமல், நீர்க்கடிகை என்னும் முறையில் தமிழர்கள் நேரத்தைக் கணித்தார்கள் என்பதையும் விஸ்வரூபம் திரைப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்றில் இதைப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். (நேற்றைய நாளின் துவக்கத்தில் கூட நீர் சொட்டும் காட்சி ஒன்று இடம்பெற்றிருந்தது).
‘பாலாஜியோட கேமை இம்ப்ரூவ் செய்ய ஏதாவது யோசனை இருக்கா?” என்று கமல் இதர ஹவுஸ்மேட்களிடம் கேட்ட போது “சின்ன டாஸ்க்னா சுறுசுறுப்பா பண்ணிடுவான்.. பெரிய டாஸ்க்-னாதான் பொறுமை இருக்க மாட்டேங்குது’ என்கிற சரியான பாயின்டைப் பிடித்தார் ரமேஷ். ‘ஓவரா சிந்திக்காம சாதாரணமா சிந்திச்சாலே போதும்...’ என்று ஸ்மார்ட்டான பதிலைச் சொல்லி வியக்க வைத்தார் ஆஜீத்.
ஓர் இடைவெளி விட்டு கமல் வந்த போது ஆரி வம்படியாக வந்து மாட்டிக் கொண்ட சம்பவமும் நடந்தது.
“இந்த முறை நாமினேஷன் சமயத்துல பிக்பாஸ் ரகசியம் காக்காம சில பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டாரு… ‘காதல் கண்ணை மறைக்குதே’ என்கிற புஸ்வாணமும் அதில ஒண்ணு” என்ற கமல் பிறகு ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ஒரு டாஸ்க் தந்தார். தற்செயல் தேர்வில் வரும் புகைப்படத்தில் உள்ள போட்டியாளரைப் பற்றிய ரகசியம் ஒன்றை, எடுத்தவர்கள் சொல்ல வேண்டும்.
‘அந்தப் பேப்பர்ல ஒண்ணும் இல்ல. கீழே போட்டுடு’ என்பது மாதிரியே இந்த டாஸ்க்கும் நடந்து முடிந்தது. "பத்து மணிக்கு மேலதான் சனத்திற்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் பொங்கிட்டு வரும்", "ரம்யா soft hurt பண்ணுவாங்க", "பாலாஜி பார்க்கத்தான் பயமுறுத்தறா மாதிரி இருக்கானே.. தவிர அவன் ஒரு குழந்தை” (அனிதாக்கா சொல்லிய அருள்வாக்கு) "நைட்டெல்லாம் அத்தானுக்கு virtual லெட்டர் எழுதி இம்சை செய்யும் நிஷாக்கா", "சாமிற்கு ஜப்பான் பத்தி ஃபுல்லா தெரியும்", "ஷிவானி வாயைத் திறந்து பேச ஆரம்பிச்சா மூட மாட்டான்ற ரகசியம் எனக்கு மட்டும்தான் தெரியும்'’ என்பது போன்ற உப்பு பெறாத விஷயங்கள் மட்டுமே வெளியே வந்தன.
"ரமேஷ் ப்ரோவுக்கு எல்லாப் பிரச்னையும் பத்தி நல்லாத் தெரிஞ்சாலும் அதுல கலந்துக்க மாட்டாரு" என்றார் சனம். கமல் தயாரித்த ‘பேசும் படம்’ திரைப்படத்தில் காது கேட்காத ஒரு தாத்தா வருவார். அலுவலகத்தில் நடக்கும் அனைத்து வம்புகளையும் சர்ச்சைகளையும் அவர்தான் ஓனர் கமலுக்கு சொல்லி விடுவார். இது படத்தின் இறுதியில்தான் தெரியும். அப்படியொரு ‘காது கேட்காத தாத்தவாக’ ரமேஷ் பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார் போலிருக்கிறது.
‘ரியோ கடிப்பாரு சார்’ என்கிற அசைவ ரகசியமும் இதில் வெளியே வந்தது. ஒருவர் மொக்கை ஜோக் அடித்தால் ‘கடிக்காதீங்க’ என்பார்கள். ரியோ தனது நகைச்சுவையோடு உண்மையிலேயே கடிக்கிறார் போலிருக்கிறது.
'‘சரி.. இந்த சமாச்சாரத்திற்கு இடையில ‘காதல் கண்ணைக் மறைக்குது’ மேட்டரை விட்டுட்டீங்க.. யார் அதை சொன்னது-ன்ற விஷயம் இன்னமும் ரகசியமாவே இருக்கு’’ என்று கமல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆரி கையைத் தூக்கித்தானே மாட்டிக் கொண்டு விட்டார். கமலாக வாயைக் கிண்டி கண்டுபிடிப்பதற்கு முன்னால் தாமே சொல்லி விடுவோம் என்று ஆரி நினைத்திருக்கலாம். "நான் ஒத்துக்கவே சொல்லலை'’ என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தார் கமல்.
"ஆரியும் லவ் மேரேஜ் பண்ணவர்தானே.. அப்புறம் ஏன் இப்படி சொல்லணும்.. என் கிட்டயே நேரா கேட்டிருக்கலாமே.. லவ்வா.. இல்லையான்னு.. கடைசி வரைக்கும் அவர் ஒத்துக்கவே இல்லையே..." என்றெல்லாம் பிறகு அனிதாவிடம் அனத்திக் கொண்டிருந்தார் பாலாஜி. ஆரியும் தானாக வந்து பேசியிருக்கலாம். பவ்யத்துடன் பக்கத்திலேயே உலாவிக் கொண்டிருந்தாரே... தவிர அவரும் வந்து பேசவில்லை. பாலாஜியும் சென்று பேசவில்லை.
"ஓர் ஆணும் பெண்ணும் பேசிட்டு இருந்தா அது லவ்வா?" என்று பாலாஜி கேட்பதில் நியாயமுள்ளது. ‘ஷிவானியின் மீது காதல்’ என்று யாராவது ஜாடையாக சொன்னால் அவர் கோபப்படுவதும் ஒருவகையில் சரியே.
ஆனால் - ‘மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்’ என்பதை உருவாக்குவது நம்முடைய நடத்தைதான். நட்பில் உள்ளவர்களுக்கும் காதலில் உள்ளவர்களுக்கும் இடையிலான உடல்மொழியில் நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. எல்லாவற்றிற்கும் லாஜிக் பேசும் பாலாஜிக்கு இது தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
‘ரகசியம் டாஸ்க்’கில் எவ்வித ரகசியமும் வெளிவராததால் இன்னொரு டாஸ்க்கை கையில் எடுத்தார் கமல். கையுறை, அட்டைக்கத்தி ஆகிய இரு விஷயங்களை ஒவ்வொரு போட்டியாளரும் தேர்ந்தெடுத்து மற்றவருக்கு தர வேண்டும். கையுறை என்றால் பலமான போட்டியாளர். அட்டைக்கத்தி என்றால் பலவீனமான போட்டியாளர் என்று பொருள்.
இந்த டாஸ்க்கில் பாலாஜிற்கு நிறைய கையுறைகள் கிடைத்தன. நான் முன்பே சொன்னதுதான். இந்த சீஸனின் தவிர்க்க முடியாத போட்டியாளராக பாலாஜி விளங்குகிறார். இந்தக் கதையின் வில்லனும் அவரே... ஹீரோவும் அவரே. உடல் சார்ந்த டாஸ்க்குகளில் சிறந்து செயல்புரியும் பாலாஜி, இன்னொரு பக்கம் சர்ச்சைகளின் நாயகனாகவும் விளங்குகிறார். பிக்பாஸின் எடிட்டிங் டீமிற்கு அவர்தான் தங்கச் சுரங்கம். இந்த சீஸனில் அனைத்து நாட்களிலும் அவர்தான் நீக்கமற நிறைந்திருக்கிறார். ஒரேயொரு நாளில் மட்டும்தான் அவர் வரும் காட்சிகள் குறைவு என்பதாக நினைவு.
பாலாஜிக்கு அடுத்தபடி ரியோவிற்கு அதிக கையுறைகள் கிடைத்தன. இது ‘குரூப்பிஸம்’ மூலமாக அவருக்கு கிடைத்த தகுதி என்றாலும் ரியோவும் ஒரு சிறந்த போட்டியாளர்தான். ஆரிக்கு கிடைத்த கையுறைகளுக்கு காரணம் இருக்கிறது. எந்த கு அதிகம் தங்க முடியாத அனிதா மற்றும் சனம் போன்றோர்களால் அவருக்கு கிடைத்தது.
அட்டைக்கத்தி வாங்குவதில் ரமேஷ் முன்னணியில் நின்றதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நிஷாவிற்கு இது அதிகம் கிடைக்க ஆரம்பித்தது. நிஷாவிற்கு தருவது பாதுகாப்பானது என்று தந்தவர்கள் நினைத்து விட்டார்களா என்று தெரியவில்லை.
ரமேஷோடு ஒப்பிடும் போது நிஷா நிச்சயம் சிறந்த போட்டியாளர். ஆனால், அவர் பல சமயங்களில் ரியோவிற்கு கேடயமாக மாறி விடுகிறார். நட்பு என்கிற பெயரில் ரமேஷிற்கு அடிமை போல் நடந்து கொள்கிறார். பாசம் என்கிற பெயரில் அர்ச்சனாவிடம் வீழ்ந்து கிடக்கிறார். இவற்றிலிருந்து வெளியே வந்தால் நிஷா பிரகாசிக்கக்கூடிய ஒரு போட்டியாளராக மாறுவார். வேல்முருகனைப் போல நிஷாவிற்கு தாழ்வு மனப்பான்மை ஒரு பிரச்னையாக இருக்கிறதா என்று தெரியவல்லை.
சனம், அர்ச்சனா, ஆஜீத், கேபி, சோம் ஆகியோருக்கு இரண்டில் எதுவுமே கிடைக்கவில்லை. அதற்காக இவர்கள் பொருட்படுத்தத் தேவையில்லாத போட்டியாளர்கள் என்பது பொருள் இல்லை. இறுதிவரைக்கும் தாக்குப் பிடிக்கக்கூடிய போட்டியாளர்களாக இவர்கள் இருக்கப் போவதில்லை என்பது மட்டும் சூசகமாக தெரிகிறது.
" 'வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?’ என்று நேற்றும் இன்றும் அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று உறுதிப்படுத்திக் கொள்வது உங்கள் கடமை" என்கிற பொதுநலச் செய்தியை கமல் நினைவுப்படுத்தியது சிறப்பு.
தேர்தல் நாளன்று, "என் பேர் லிஸ்ட்ல இல்லைன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாங்க சார்... இதுல ஏதோ சதியிருக்கு'’ என்று புலம்புவதை விடவும் முன்எச்சரிக்கையாக வாக்காளர்கள் இருப்பது நல்லது. ஏனெனில் இது நம் வருங்கால தலையெழுத்தை தீர்மானிக்கக்கூடிய அரசியல் சமாச்சாரம்.
அடுத்ததாக எவிக்ஷன் பட்டியலில் இருந்த அனிதா, சாம், பாலா, சுச்சி, ஆரி, சோம் மற்றும் ரியோவை தனியாக அமரச் சொன்னார் கமல். இதர போட்டியாளர்கள் இவர்களில் ஒருவரைக் காப்பாற்றலாம் என்கிற ஜாலியான சாய்ஸை கமல் தந்தார்.
ரம்யாவும் ஆஜீத்தும் சம்யுக்தாவின் பெயரை முன்மொழிந்தார்கள். ‘சோம்’ என்றார் அர்ச்சனா. ‘பாலா மற்றும் அனிதா’ என்றார் சனம். (பாசம் போகலையே!) ‘ரியோ மற்றும் சோம்’ என்றார் ரமேஷ். அதையே வழிமொழிந்தார் நிஷா. ரியோவின் பெயரை கேபி முன்மொழிய ‘சம்யுக்தா மற்றும் பாலாஜி’ என்றார் ஷிவானி. (ஆச்சரியமே இல்லை!).
இந்த விளையாட்டு வெளியேற்றுபவரை தீர்மானிக்காது என்றாலும் வருங்காலத்தில் கலகம் நடப்பதற்கு இவை உதவி செய்யும். யார், யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். தங்கள் பெயரை முன்மொழியாதவர்கள் மீது கோபமும் வருத்தமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்படலாம். அதனால் சண்டைகள் நடக்கலாம். இதுதான் பிக்பாஸின் பிளானும்.
“ஓகே.. இருவரைக் காப்பாற்றலாம்’ என்று முடிவு செய்த கமல், குத்துச்சண்டை கையுறைக்குள் ஒளிக்கப்பட்டிருந்த சீட்டுக்களின் மூலம் ஆரி மற்றும் ரியோவைக் காப்பாற்றினார். ‘வாக்களித்த மக்களுக்கு நன்றி. பொறுப்புணர்ச்சி அதிகமாகுது’ என்று ஆரி சொல்ல ‘இப்படியே இருந்துக்கறேன். இதுதான் மக்களுக்கு பிடிச்சிருக்கு போல’ என்று வித்தியாசமாக நன்றி சொன்னார் ரியோ.
ஆக... மீதமிருப்பவர்களில், வெளியேறப் போகிறவர் எவர் என்பது நாளைய நிகழ்ச்சியில் தெரிந்து விடும். வெளிவந்திருக்கும் தகவல்களின் படி சுச்சிதான் நாளை வெளியேறுகிறார் என்று தெரிகிறது. அவர்தான் குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
"பிக்பாஸ் வீட்டில் மாற்றங்களை நிகழ்த்தப் போகிறேன்'’ என்று பாசிட்டிவ்வாக உள்ளே நுழைந்த சுசித்ரா "தானே மாற்றங்கள் அடைந்து வெளியேறுவது'’ பரிதாபமான விஷயம்.
சுச்சி அடிப்படையில் நேர்மையானவர். பல திறமைகள் உள்ளவர். முகத்திற்கு எதிராக பட்டென்று உண்மைகளைப் பேசி விடுபவர். இதனால்தான் இதே அலைவரிசையில் இயங்கும் பாலாஜியை அவருக்குப் பிடித்திருந்தது. எனவே அவருடன் நெருங்கிய தோழமையை வளர்க்க முயன்றார். அதற்கு தடைக்கல்லாக இருந்த ஷிவானியின் மீது அவருக்கு பொறாமை வந்தது. ஆனால், பாலாஜி ஷிவானிக்கே முன்னுரிமை தந்தார். இது போன்ற விஷயங்கள் சுச்சிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தின.
சுச்சி செய்த காரியங்கள் பார்வையாளர்களுக்கு எரிச்சலையும் சிரிப்பையும் ஏற்படுத்தி அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து விட்டன. ஒருவகையில் சுச்சி வெளியே செல்வது அவருக்குத்தான் நல்லது.
என்ன நடக்கிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/kamal-saved-a-few-bigg-boss-tamil-season-4-day-48-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக