Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

குப்பை குப்பையா வெளில வருதே... ஆரியுடன் சனம் சண்டைபோட்டதன் உளவியல் என்ன?! பிக்பாஸ் – நாள் 37

பிக்பாஸ் வீட்டில் இன்று லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க். தலைப்பு ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’. ஐந்து சீட்டுகளில் பெயர் எழுதி குலுக்கிப் போட்டுத் தேர்ந்தேடுத்து ‘யார் திருடன்’ என்று கண்டுபிடிக்கும் ‘ராஜா ராணி’ விளையாட்டை சிறுவயதில் விளையாடியிருப்போம், அல்லவா? அதே பழைய விளையாட்டின் துருப்பிடித்த நவீன வடிவம் இது.

ஒவ்வொரு சீஸனிலும் இதை தூசு தட்டி கொண்டு வந்து விடுவார்கள். முதல் சீஸனில் ‘வைரத்தை’ திருடும்படி செய்தது நினைவில் இருக்கலாம்.

பிக்பாஸ் டீமில், சமீபத்தில் ‘அபூர்வ ராகங்கள்’, ‘மூன்று முடிச்சு’ என்று பழைய பாலசந்தர் படங்களைப் பார்த்திருப்பார்கள் போல. எனவே இந்த டாஸ்க்கில் உறவுமுறைகளை கன்னாபின்னாவென்று கலந்தடித்து குழப்பியிருந்தார்கள். சனத்தின் மகன் பாலாஜியாம். பாலாஜியின் தங்கை ஷிவானியாம். ஷிவானி மீது ஆஜித்திற்கு ஒரு கண்ணாம்.

ஆம். பிக்பாஸ் எப்போதுமே இது போன்ற குறும்புகளைச் செய்வார். யார் இரண்டு பேருக்கு நடுவில் ஆகாதோ... அவர்கள் டாஸ்க்கில் இணைந்து பேசும்படி டாஸ்க்கை உருவாக்கி அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார். பிக்பாஸிற்கும் பார்வையாளர்களுக்கும் கொண்டாட்டம். சம்பந்தப்பட்டவர்களுக்கு திண்டாட்டம்.

பிக்பாஸ் – நாள் 37

சனத்திற்கும் இன்று அப்படித்தான் ஆகிப் போனது. ‘இனி பேச மாட்டேன்’ என்று பாலாஜி சனத்திடமிருந்து ஒதுங்கிப் போனார். சனமும் அவ்வாறே ஒதுங்கி வந்துவிட்டார். ஆனால் ‘குஷி’ படத்தின் விஜய், ஜோதிகா மாதிரி இருவரும் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்ளாமல் இருந்ததேயில்லை. ஒருவகையான love & hate உறவுமுறையை அவர்கள் பின்பற்றுகிறார்கள் என்று தோன்றுகிறது.

‘பாலாஜியுடன் போய் பேச வேண்டுமா’ என்று இந்த டாஸ்க் முழுவதும் சனம் தயங்கிக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் இது அவருக்கு மன உளைச்சலாகவே மாறி விட்டது. பிக்பாஸிடம் நேரடியாகவே சென்று ‘இந்த டாஸ்க்கை என்னால் சரியாக செய்ய முடியவில்லை’ என்று நேரடியாக முறையிட்டு விட்டார். பிக்பாஸா அதற்கு அசருவார், அவருடைய பிளானே அதுதானே... அவர் எதிர்பார்த்த கலகம் ஆரி x சனம் சண்டையில் வந்து முடிந்தது.

இதற்கிடையில் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். ‘குஷி’ படத்தின் விஜய், ஜோதிகா என்று பாலாஜி x சனத்தைப் பற்றி விளையாட்டாகத்தான் இதுவரை எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் அது உண்மையாக இருக்குமோ? ஏனெனில் பாலாஜியை ‘மகன்’ என்று சும்மா நடிப்பிற்குக் கூட ஒப்புக் கொள்ள முடியாமல் சனத்தின் ஆழ்மனம் தவிக்கிறதோ... தெரியவில்லை... எமக்குப் புரியவில்லை!

ஷிவானியை தங்கை என்று சொல்லி சங்கடம் ஏற்படுத்தும்படியான சூழலை பாலாஜிக்கு பிக்பாஸ் ஏற்படுத்தி விட்டார். ஆனால் ராஜதந்திரியான பாலாஜி இதற்கு அசருவாரா என்ன? உண்மையில் இது அவருக்கு இன்னமும் வசதியாக போய் விட்டது. முன்பெல்லாம் சில சீன்களில் மட்டும்தான் ஷிவானியுடன் நெருக்கமாக அமர்ந்திருப்பார். ஆனால் இப்போதோ ‘அண்ணன்’ என்கிற வேஷத்தில் நாள்பூராவும் ஷிவானியுடன் நெருக்கமாக உலவிக் கொண்டிருந்தார். ஷிவானியும் ‘அண்ணே... எங்க அண்ணே’ என்று பாடிக் கொண்டு பாலாஜியுடன்தான் தொடர்ந்து சுற்றிக் கொண்டிருக்கிறார். (நல்ல ஃபேமிலி!)

உண்மையில் நிஜ வாழ்க்கையிலும் சிலர் உள்ளார்கள். தங்களின் காதல் வெளி உலகிற்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக ‘அண்ணன்’, ‘தங்கை’யாக நடிப்பவர்கள் சிலர் உண்டு.

பிக்பாஸ் – நாள் 37

பிக்பாஸ் செய்திருக்கும் இந்தக் காரியத்தைப் பார்த்தால் விவேக் நடித்திருக்கும் நகைச்சுவைக் காட்சியின் ஒரு வசனம் நினைவிற்கு வருகிறது. ஆனால் இந்தக் கட்டுரையில் குறிப்பிட முடியாது. சென்சார் செய்து விடுவார்கள்.

டாஸ்க்கின் படி ஆஜித், ஷிவானியை காதலோடு பின்தொடர வேண்டுமாம். பாலாஜியைக் கண்டால் தயங்க வேண்டுமாம். ஆனால் அவரோ ‘இவன் கிட்ட எதுக்கு வம்பு?’ என்பது போல கேபியின் தோளில் கைபோட்டு சுற்றிக் கொண்டிருந்தார். இளம் வயது சிறுவர்களுக்கு அதே ஏரியாவில் இருக்கும் ‘அண்ணன்மார்களில்’ எவராவது ஒருவர் ‘ஹீரோவாக’ தெரிவார். இந்தச் சிறுவர்கள் அவர்களிடம் நெருக்கமாகப் பழகுவார்கள். சில்லறை உதவிகள் செய்வார்கள். அவர்கள் செய்வதையெல்லாம் சிஷ்யனின் நிலையில் பின்பற்ற முயல்வார்கள். ஆஜித்தும் பாலாஜியை அப்படி ஒரு ‘அண்ணனாக’ பார்க்கிறார் போல.

ஓகே. என்ன நடந்ததென்று பார்ப்போம்.

காலையில் ஏதோவொரு பாட்டைப் போட்டு எழுப்பி விட்டார்கள். அனிதா செய்திருந்த பாசிப்பருப்பு சாம்பார் ஏராளமாக மிச்சம் இருந்தது போல. எனவே இன்று கிச்சன் கலாட்டா சீன் எதுவும் இல்லை. நேரடியாக டாஸ்க்கிற்குள் வந்தார் பிக்பாஸ்.

அர்ச்சனா பாசமுள்ள பணக்கார பாட்டியாம். அவரை கூடவே இருந்து பார்த்துக் கொள்ளும் பாசக்கார மகள் சம்யுக்தா. சம்யுக்தாவின் மகள் அனிதா. அனிதா பாட்டிக்கு விசுவாசமானவராம். (சம்யுக்தா கணவர் வேடத்திற்கு யாரும் கிடைக்கவில்லை போல).

அர்ச்சனாவின் மூத்த மகன் ஆரி. மிகப் பொறுப்பானவராம். (இதைச் சொல்லவே தேவையில்லை. ஆரி ரொம்ப பொறுப்பா இருந்ததால்தான் வீட்டில் இன்று ஒரு பயங்கர சண்டை நிகழ்ந்தது.)

பிக்பாஸ் – நாள் 37

ஆரியின் மனைவி சுச்சி. மாமியார் மீது பாசமா இருப்பவங்களாம். (என்னங்கடா... கேரக்டர் ஸ்கெட்ச் இது! மாமியார் மீது பாசமா இருக்கிற மருமகள். எந்தவொரு பிரபஞ்சத்துலயும் கிடையாது). இவர்களுடைய மகன் ஆஜித்தாம். வெளிநாட்டு ஆங்கிலம் பேசுகிறேன் என்கிற பெயரில் வாயில் வெண்டைக்காயை அதக்கி குழறிக் கொண்டிருந்தார் சுச்சி.

அர்ச்சனாவின் இளையமகன் சோம். இவருடைய காதலி ரம்யா (அப்படிப் போடு... சோமிற்கு நல்ல சந்தர்ப்பம்). இவர்களின் மகள் மாதிரி நடிப்பவர் கேப்ரியல்லா. இவர்கள் திருடர்களாம். அர்ச்சனாவிடம் உள்ள சொத்து பத்திரத்தை திருட வந்திருப்பவர்களாம். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ‘டார்லிங்’ என்று ரம்யாவைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் சோம். (ரம்யா ஆர்மிக்காரர்களின் காதுகளில் குக்கர் போல புகை வந்திருக்கும்!).

பிக்பாஸின் ‘கேரக்ட்டர் ஸ்கெட்ச்’ திறமை இதிலும் வெளிப்பட்டது. அமுல் டப்பா விளம்பரம் போல் இருக்கும் சோம் மற்றும் ரம்யாவிற்கு ‘திருடர்’ வேடம் தந்து விட்டால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்கிற காரணம் போல.
அர்ச்சனாவின் இன்னொரு பெண் நிஷா. இவர் சயன்டிஸ்ட்டாம். இவர், சக சயன்டிஸ்ட்டான ரியோவை லவ் டார்ச்சர் செய்து திருமணம் செய்து கொண்டாராம். காதலர்களைப் போல் சுற்றிக் கொண்டிருக்கும் பாலாஜி – ஷிவானியை அண்ணன் - தங்கையாக்கி விட்டு நிஜத்தில் அக்கா – தம்பியாக பாசத்துடன் பழகும் ரியோ – நிஷாவை காதல் திருமணம் செய்தவர்களாக காட்டி திரைக்கதையில் பல மாயக்குழப்பங்களை செய்துவிட்டார்கள்.

“என்னது... நிஷா சயின்டிஸ்ட்டா?” என்று அர்ச்சனா அதிர்ச்சியுடன் கேட்க, “ஆமாம். என்னாலயும் நம்பத்தான் முடியல... யு நோ..." என்று ஆங்கிலத்தில் பேசுவதுபோல பேசிக்கொண்டிருந்தார் ரியோ. இவரை, ‘டார்லிங்... டார்லிங்’ என்று அழைத்து இம்சை செய்து கொண்டிருந்தார் நிஷா.

நமக்கே இந்த உறவுமுறை புரியவில்லை என்று பார்த்தால் அர்ச்சனா பாட்டிக்கும் சரியாக புரியவில்லை. "யாரும்மா நீ... இது யாரு பொண்டாட்டியா, பொண்ணா?" என்று அவரும் தன் பங்கிற்கு கூடுதல் கலகத்தை விளைவித்துக் கொண்டிருந்தார்.

பிக்பாஸ் – நாள் 37

இருங்கள்... பாத்திர அறிமுகம் இன்னமும் முடியவில்லை.

அர்ச்சனாவின் இன்னொரு பெண் சனம். எதிலும் முதல் உரிமையை எதிர்பார்ப்பவராம். ரமேஷ் இவரின் கணவராம். பொண்டாட்டி தாசன். இன்றுதான் ரமேஷின் குரலை சற்று நேரம் கேட்க முடிந்தது. நிஷா இவரை ‘மாமா’ என்று அழைத்து கலாட்டா செய்து கொண்டிருந்த போது ஓவர் ஆக்டிங்காக ஏதோ செய்து கொண்டிருந்தார்.

‘நல்ல குடும்பம்டா... ஏறுல பூட்டின எருமைங்க மாதிரி’ என்று கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் சொல்வார். அப்படியாக இவர்கள் திரிந்து கொண்டிருந்தார்கள்.

பாட்டி வைத்திருக்கும் சொத்து பத்திரத்தை திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது டாஸ்க்கின் ஒரு பகுதி. அதையும் மீறி திருடர்கள் தங்களின் கைவரிசையைக் காண்பிக்க வேண்டும்.

**

ஓகே. லெட்ஸ் பிகின்... ‘புஷ்பா புருஷன்’ காமெடி மாதிரி, "ஏ.. இவருதான் நிஷா புருஷன்... ஆப்ரிக்கால லேகியம் விக்கறாரு” என்று ரியோவை தன் மனைவிக்கு அறிமுகப்படுத்தினார் சோம். "எலி மருந்துன்னு சொன்னீங்க” என்று அதற்கு ரம்யா கூடுதல் பங்கம் செய்ய ‘யூ ஆர் இன்சல்ட்டிங் மை ஃப்ரொபஷன்’ என்று குழறி பதிலளித்தார் ரியோ.

சுச்சியை சைக்கிள் முன்னாடி அமர வைத்து ‘ரெக்கை கட்டி பறக்குதய்யா’ என்று அண்ணாமலை பாடலை பாடி சுற்றி வந்தார் ஆரி.

அனைவரும் டைனிங் டேபிளில் இருக்கும் போது முதல் திருட்டுக் கொட்டாக சாகச வேலையில் இறங்கிய கேபி, லாக்கரில் இருந்த தங்கத்தை திருடி வந்தார். பின்னாலேயே வந்த திருட்டுக் குடும்பமான ரம்யாவும் சோமும் அவர்களின் பங்கிற்கு மஞ்சப்பையை திருடி ஒளித்து வைத்தனர்.

பிக்பாஸ் – நாள் 37

ரம்யா சும்மா இருந்திருந்தால் கூட பிரச்னை வந்திருக்காது. ‘உங்க புள்ள கோச்சுக்கிட்டு சாப்பிட மாட்டேன்றாரு’ என்று ஓவர் ஆக்ட் செய்துவிட அர்ச்சனா தன் பிள்ளையை தேடிக் கொண்டு சென்றார். சோமிற்கு இதுவரை எதையும் திருடிப் பழக்கமில்லை போல. அர்ச்சனாவைப் பார்த்ததும் ‘வயிறு கலக்குது’ என்று சமாளித்துக் கொண்டு சென்றார்.

உள்ளே இருந்த தங்கமும் மஞ்சப்பையும் காணாமல் போனதைப் பற்றி அர்ச்சனா பாட்டி பிறகு அலட்டிக் கொள்ளவேயில்லை.

இதற்கிடையில் குட்டி போட்ட பூனை மாதிரி அங்கும் இங்கும் திகைப்புடன் சுற்றிக் கொண்டிருந்தார் சனம். அவர் டாஸ்க்கில் ஈடுபாடின்றி இருப்பதைப் பார்த்து பிக்பாஸ் அழைத்து ‘have fun’ என்று எச்சரித்து அனுப்பினாராம். "‘டாஸ்குதானே... மகனே...’ ன்னு பேசிடு... டாஸ்க் முடிஞ்சதும் பேசாதே" என்று ஆலோசனை தந்தார் ரமேஷ். என்றாலும் இன்று முழுவதும் எரிச்சலான மனநிலையில் இருந்தார் சனம்.

மக்கள் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ரமேஷின் ஷூ ஏறத்தாழ நிஷாவின் முகத்தில் இடிப்பது போல் இருந்தது. இதை ஜாலியாக ஆட்சேபித்தார் நிஷா. முன்பொரு சமயத்தில், தன்னை நிஷா விளையாட்டாக உதைத்ததற்காக மெளனக் கோபம் கொண்டு எழுந்து சென்ற ரமேஷ், ‘இன்னொருவரின் முகத்தில் இடிப்பது போல் ஷூ காலை வைத்திருக்கிறோமே’ என்கிற அடிப்படையான நாகரிகம் கூட தெரியாதவராக இருந்தார்.

இதற்கிடையில் அனிதாவிற்கும் ரியோவிற்கும் இடையில் பயங்கரமாக முட்டிக் கொண்டது. அனிதாவின் டாஸ்க் கேரக்ட்டர் பற்றி ‘உனக்கு விசுவாசமான கேரக்ட்டர்... அதை நல்லா பண்ணு’ என்பது போல் ரியோ ஆலோசனை தர, அதற்கு விளக்கம் தர முன்வந்தார் அனிதா.

பிக்பாஸ் – நாள் 37

'இந்தப் பொண்ணு பேச ஆரம்பிச்சா தொடர்ந்து நியூஸ் வாசிக்குமே’ என்று பயந்தாரோ.. என்னமோ.. ‘நான் செத்தேன்’ என்று சொல்லி ரியோ திரும்பிப் படுத்துக் கொள்ள அனிதாவிற்கு காண்டாகி விட்டது.

அனிதா பேச வரும் போது யாராவது அவரை இயல்பாக தடுத்துவிட்டால் அவருக்குப் பயங்கர கோபம் வந்து விடுகிறது. இதை்ததான் ‘ஸ்பேஸ் இல்லை’ என்று தொடர்ந்து புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார். செய்தி சேனல்கள் 24x7 இயங்குவது உண்மைதான். அதற்காக செய்தி வாசிப்பாளர்களும் அது போல் பேச வேண்டுமென்கிற கட்டாயமில்லை.

அனிதாவின் சிடுசிடு எதிர்வினையால் ‘அப்செட்’ ஆன ரியோ எரிச்சலுடன் பேச இருவருக்கும் வாக்கு வாதம் தொடங்கியது. வாக்குமூல அறையில் இருந்து பத்திரத்தை எடுத்து வந்து அர்ச்சனா காத்திருந்தும் இவர்களின் சண்டை சில நிமிடங்கள் நீடித்தது.

**

பத்திரத்தை பத்திரமாக பூட்டு இல்லாத லாக்கரில் வைத்தார் பாட்டி. அறிவிப்பு முடிந்ததும் பத்திரத்தை எடுப்பது போன்ற பாவனையுடன் பாலாஜி எழுந்து ஓட மற்றவர்கள் ஆட்சேபித்தார்கள். ‘சும்மா லுலுவாய்க்கு’ என்றார் அவர்.

‘நான் செஞ்சது தப்புன்னா... உன் கால்ல கூட விழறேன்’ என்று அனிதாவிடம் ரியோ சொன்னார். இந்த விஷயம் ரியோவைக் கூட அதிகமாகப் புண்படுத்தவில்லை. ஆனால் அதற்காக அக்கா நிஷா பயங்கர கோபம் கொண்டார். "‘மன்னிப்பு கேக்கறேன்’ன்னு சொல்ல வேண்டியதுதானே... அதென்ன 'கால்ல விழறேன்'னு சொன்ன" என்று ரியோவின் தன்மானப்பிரச்னையை தான் சுமந்து கொண்டார். ‘அதையே திரும்பத் திரும்ப சொல்லி பெரிசாக்கிடாத’ என்று தன் வழக்கமான பாணியில் அதைத் தடுத்தார் ரியோ.

“நான் நல்லதுதான் சொன்னேன் ப்ரோ. அந்தப் பொண்ணு புரிஞ்சுக்காம கோபப்படுது... இரண்டு மூணு முறை இந்த மாதிரி ஆயிடுச்சு... ‘அவன்... இவன்’லாம் பேசறாங்க" என்றெல்லாம் கேப்டன் ஆரியிடம் புகாராக அனத்திக் கொண்டிருந்தார் ரியோ.

பிக்பாஸ் – நாள் 37

ஆக... சுரேஷின் இடத்தில் இனி அனிதாவுடன் மல்லுக்கட்ட ரியோ வந்து விட்டார் என்று தோன்றுகிறது.

**

‘ஒத்த ரூபாயும்’ தாரேன்... ஒரு ஒனப்பத்தட்டும் தாரேன்’ பாடல் குஷ்பு மாதிரி நடுநாயகமாக நின்று அர்ச்சனா பாட்டி ஆட மக்கள் சுற்றிலும் கும்மியடித்துக் கொண்டிருந்தார்கள்.

"என்னால இந்த டாஸ்க் பண்ண முடியலை... குழப்பமா இருக்கு" என்று கேப்டன் ஆரியிடம் சனம் சிணுங்கிக் கொண்டிருந்தார். “பாலாஜி கூட பேசப் பிடிக்கலைன்னா... கேரக்டர் படி பையன் மீது கோபம் இருக்கற, பேசாத அம்மான்ற மாதிரி மாத்திக்கோ” என்று ஆரி சொன்னது உண்மையில் ஒரு நல்ல யோசனை. ஆனால் சனத்தால் அதையும் பின்பற்ற முடியவில்லை. மனஉளைச்சலில் பாயைப் பிறாண்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது.

‘அம்மா... நீங்கள் நகைச்சுவை விருந்து நகைச்சுவை ஃபுல் மீல்ஸ்.. நகைச்சுவை பிரியாணி’ என்பது போல் நிஷா, அர்ச்சனாவை புகழ்ந்து கொண்டிருக்க "பாட்டி... உங்களை காமெடி பீஸ்ன்னு சொல்றாங்க" என்று அதைத் திரித்து போட்டுக் கொடுத்தார் அனிதா.

“என்னதான் முழிப்பா இருந்தாலும் ரெண்டு மணிக்கு மேல எல்லாரும் தூங்கிடுவாங்க... அப்ப பீரோவை திருப்பி வெச்சி திறந்து எடுத்துடலாம்” என்று தொழிற்முறை திருடன் போல பாலாஜி சதியாலோசனை செய்து கொண்டிருந்தார். இதை கூடவே இருந்து கேட்டுக் கொண்டு அதை ரம்யாவிடம் சொன்னார் கேபி. “அப்ப... இரண்டு மணிக்கு முன்னாடியே நாம தூக்கிடலாம்" என்றார் ரம்யா. (என் ஸ்வப்னா புத்திசாலிடா!).

பிக்பாஸ் – நாள் 37

“யார் மீதெல்லாம் நம்பிக்கையில்லை" என்று அர்ச்சனா சந்தேகமாக கேட்டுக் கொண்டிருக்க ‘எனக்கு இவ மேலயே நம்பிக்கையில்லை... திருட்டு ராஸ்கல் இவ.. என் மனசையே திருடிட்டா’ என்று ஸ்டைலான ஆங்கில தமிழில் (?!) நிஷாவை கலாய்த்துக் கொண்டிருந்தார் ரியோ. “உங்க மூத்த பையன் முழியே சரியில்லை” என்று சமயம் பார்த்து ஆரி மீது பழிவாங்கிக் கொண்டிருந்தார் சம்யுக்தா. ‘நான் பார்த்துக்கறம்மா’ என்று உணர்ச்சிகரமாக பொறுப்பெடுத்துக் கொண்டிருந்தார், திருட்டுக் கொட்டு சோம்.

இதற்கிடையில் வாஸ்து சரியில்லாத கிச்சன் ஏரியாவில் மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தது. குப்பைத் தொட்டியில் எவரோ சோறு கொட்டியிருந்ததைப் பார்த்த ஆரி, "யாரு கொட்டினது?” என்று கிச்சன் டீம் கேப்டனான சனத்திடம் விசாரித்தார். உண்மையில் சனம்தான் சோற்றைக் கொட்டியிருக்கிறார். ஆனால், ‘இவன் கிட்ட உண்மையைச் சொன்னா... அரைமணி நேரத்திற்கு விவசாயிகள், நாட்டு மாடுன்னு லெக்சர் தருவானே' என்று நினைத்து பயந்தாரோ.. என்னமோ... ஒரு தடுமாற்றத்தில் ‘நான் இல்லை’ என்று சொல்லி விட்டார். பிறகும் ஆரி விடாமல் தோண்டித் துருவ, "ஆமாம்.. நான்தான் கொட்டினேன். இப்ப என்ன ஜெயில்ல போடப் போறீங்களா. போட்டுக்கங்க” என்று நொந்து போய் பதில் சொன்னார் சனம்.

சனத்திற்கு காலையில் இருந்தே ‘மூட்’ சரியில்லை என்கிற விஷயம் ஆரிக்குத் தெரியும். எனவே அதைப் புரிந்து கொண்டு அதிகம் வளர்த்தாமல் போயிருக்கலாம். ‘உங்கப்பா ரொம்ப போலீஸ்காரா இருக்காருடா” என்று ‘கில்லி’ படத்தில் தாமு சொல்வதைப் போல ‘ஓவர் கேப்டனாக’ விளங்கும் ஆரி விடாமல் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தார்.

‘இல்ல ப்ரோ... காலைல இருந்து மூட் சரியில்ல. நான்தான் கொட்டினேன்’ என்று சனமும் முதலிலேயே வாக்குமூலம் கொடுத்திருக்கலாம். சமாளித்துவிட்டு பிறகு வாக்குவாதம் செய்ததால் ஆரியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

‘விடாக்கொண்டன்’ கதையாக இருவருமே இதை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் ஒரு பணியில் நீண்ட காலம் இருந்தால் "எத்தனை வருஷம் குப்பை கொட்டினே” என்று ஜாலியாக கேட்பார்கள். ஆனால் ‘குப்பை கொட்டிய’ இந்தச் சமாச்சாரத்திற்கு இவர்கள் பல வருடங்கள் சண்டை போடுவார்கள் போலிருந்தது. அப்படியொரு மெகா வாக்குவாதம்.

பிக்பாஸ் – நாள் 37

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள ரம்யா – சோம் ஜோடி முடிவு செய்தது போல. அனைவரின் கவனமும் சண்டைப்பக்கம் இருக்க, லாக்கரில் இருந்த பத்திரத்தை ரம்யா எடுத்துக் கொடுக்க தன்னுடைய சட்டையினுள் தட்டுத் தடுமாறி ஒளித்து வைத்துக் கொண்டார் சோம். பின்னால் நின்றிருந்த நிஷாவால் கூட இதைப் பார்க்க முடியவில்லை போல.

சோமிற்கு இதுதான் முதல் திருட்டு போல. அமுல் டப்பா முகத்தில் திகில் வழிய அங்கும் இங்கும் தடுமாறிச் சென்று ஒருவழியாக பத்திரத்தை ஒளித்து வைத்தார். பிறகு கேமராவின் முன்பு அடிக்கடி சென்று ஏதோ உலக பேங்க்கையே வெற்றிகரமாக கொள்ளையடித்தைப் போல ‘பாஸ் வேலையை வெற்றிகரமாக முடிச்சுட்டேன்’ என்று பெருமிதம் பொங்க நம்பியார் கோஷ்டி அடியாள் போல வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

‘யோவ் அமுல் டப்பா... இதுல என்ன பெருமை பீத்தல்... அந்தப் பத்திரத்துக்குள்ள... ஒண்ணுமே இல்ல. அதை திருடினதுக்கே இத்தனை சீன் போடறியே’ என்று பிக்பாஸ் மனதிற்குள் நினைத்திருக்கலாம்.

ஆரியின் இம்சையால் அழுது கொண்டிருந்த சனத்தை கூப்பிட்டு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ஆரி ப்ரோ... ‘நொய்... நொய்’ என்று எதையாவது சொல்லி டார்ச்சர் செய்வதாக’ சனம் கண்ணீர் வடித்துக் கொண்டேயிருந்தார். இதே புகாரை முன்பு சனத்தின் மீது சம்யுக்தா வைத்தது நினைவிற்கு வரலாம். ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று விஜய்ண்ணா இதைத்தான் சொல்லியிருக்கிறார் போல.

லாக்கர் காலியாக இருப்பதை அறியாத அர்ச்சனா பாட்டி, அதற்காக பாதுகாப்பு வியூகத்தை ஆலோசித்துக் கொண்டிருந்தார். “இந்த ஏரியாவுல ஒருத்தர் மட்டும்தான் உக்காரணும்’ என்றெல்லாம் அவர் பேசிக் கொண்டிருக்க ரம்யாவிற்கு உள்ளூற சிரிப்பு பொங்கிக் கொண்டிருந்திருக்கலாம். ‘என்னால சிரிப்பை அடக்க முடியாது’ என்று முன்பே சொல்லியிருந்தார். என்றாலும் இப்போது அடக்கி வாசித்தார்.

பிக்பாஸ் – நாள் 37

ஒரு கட்டத்தில்தான் பத்திரம் பத்திரமாக இல்லாததை பாட்டியால் உணர முடிந்தது. ‘யார் எடுத்தது... மரியாதையா சொல்லிடுங்க’ என்று யாருமே பயப்படாத அன்பான குரலில் பாட்டி விசாரிக்க, ஒன்றுமே தெரியாத பச்சைப் பிள்ளை போல ‘ஆங்..’ என்று ரம்யா அப்போது தந்த எக்ஸ்பிரஷன் ரிப்பீட் மோடில் காண வேண்டிய ஒன்று. ‘மூக்குத்தி அம்மன்’ ட்ரெய்லரில் ‘ஆங்...’ என்று நயன்தாரா சொல்வதை மூன்று விதமாக கட் செய்து போட்டிருப்பார்கள். ரம்யா சொன்ன ‘ஆங்’கையும் அது போல் போட்டிருந்தால் ரகளையாக இருந்திருக்கும்.

பத்திரம் காணாததால் ஒவ்வொருவருமே பரஸ்பரம் மற்றவரை சந்தேகப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தர்கள். விட்டால் லாக்கரையும் பிக்பாஸையும் கூட சந்தேகப்படுவார்கள் போலிருக்கிறது.

Also Read: தெய்வத்திருமகள் அனிதா, ஷிவானியின் அந்த ஜோக், அன்புள்ள ஆல்கஹால் கடிதம்! பிக்பாஸ் – நாள் 36

சோம் எடுத்ததை நிஷா கவனிக்கவில்லையோ என்று முன்னர் நினைத்துக் கொண்டிருந்தோம். ‘சோம்தான் எடுத்தார்’ என்பது போல் இப்போது நிஷா கண்ணைக் காட்ட, சோமையும் சந்தேகப்பட்டியலில் கொண்டு வந்தார்கள்.

சிலருக்கு அவர்களின் இடுப்பில் தொட்டால் கூச்சமோ, கோபமோ வந்துவிடும். நிஷாவிற்கும் அந்த வியாதி இருக்கும் போலிருக்கிறது. ஷிவானி தன்னை சோதனை செய்தபோது நெளிந்து கொண்டிருந்தார்.

பிக்பாஸ் – நாள் 37

எல்லோரும் தூங்கும் சமயத்தில் ‘ஆட்டையைப் போடலாம்’ என்று காத்திருந்த பாலாஜிக்கு செம ஷாக். திருடனுக்குத் தேள் கொட்டியது போல் உள்ளுற விழித்தார். ஆனால் திருடன் அவர் இல்லை. ‘சரி... நீ எடுத்தத அப்புறமா சொல்லு’ என்று ஷிவானி அவரிடம் ரகசியமாக சொன்ன போது ‘லூஸே... நான் எடுக்கலை’ என்பது போல் தலையில் அடித்துக் கொண்டார்.

வீட்டிலுள்ள இண்டு, இடுக்கு, சந்து, பொந்து ஆகியவற்றில் போட்டியாளர்கள் தேடுவதோடு இன்றைய நாள் முடிந்தது. சோம் அதை படுக்கையின் அடியில் ஒளித்து வைத்திருக்கிறார். (யப்பா. எத்தனை பத்திரமான இடம்?!). அதை யாராவது கண்டுபிடிக்கிறார்களா என்பது நாளைக்குத் தெரியும்.

பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு ‘பத்திரம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உஷாராக இல்லாத பாட்டியைத்தான் இந்த வாரம் ஜெயிலில் போட வேண்டும்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/family-and-thieves-task-in-bigg-boss-tamil-season-4-day-37-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக