திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 7-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அச்சிறுமியின் தாயார் சிறுமியைத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அப்போது சிறுமியைச் சோதனை செய்த மருத்துவர்கள் அச்சிறுமி 3 மாத கர்ப்பமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மருத்துவமனைக்குச் சென்ற காவல்துறையினர் அச்சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அதில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பாரதி நகரைச் சேர்ந்த ரம்யா, (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அப்பா இறந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் அருகில் உள்ள லிட்டில் ஃபுளவர் மேனிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்துவிட்டு தற்போது படிப்பை மேலே தொடராமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
கடந்த 2018 -ம் ஆண்டு 11 -ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது கோகுல கண்ணன் என்ற சகமாணவனுடன் நட்பு ஏற்பட்டு, பின்னர் தீவிரக்காதலாக மாறியதாகவும், கோகுல கண்ணன் கடந்த அக்டோபர் மாதம் 2 -ம் தேதி தனக்கு 100 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கிக்கொடுத்ததுடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி எல்லை மீறியதாகவும் அதனால் தான் கர்ப்பமாக உள்ளதாக அச்சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கோகுல கண்ணன் மீது இந்தியத் தண்டனைச்சட்டம் 450 மற்றும் போக்ஸோ சட்டம் 2012 இன் கீழ் வழக்கு பதிவு செய்து மாணவனை காவல்துறையினர் வலைவீசித் தேடிவந்தனர். கோகுல கண்ணன் பேசிய எண்களைத் தொடர்பு கொண்ட போது அவையனைத்தும் பயன்பாட்டில் இல்லை எனத் தெரியவந்தது. இதனால், ஆவணங்கள் கிடைக்காமல் திணறிய காவல்துறையினர் சிறுமியும், கோகுல கண்ணனும் படித்ததாகக் கூறப்பட்ட பள்ளிக்குச் சென்று ஆவணங்களைச் சோதனை செய்ததில் கோகுல கண்ணன் என்ற பெயரில் யாரும் படிக்கவில்லை என உறுதியானது.
இதனால் காவல்துறையினரின் சந்தேகம் சிறுமி மீது திரும்பியது. அச்சிறுமியிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தான் கூறிய அனைத்தும் பொய் என்றும் தனது இந்த நிலைக்கு காரணம் தன்னுடன் 9 -ம் வகுப்பு வரை படித்து விட்டு பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்ட யுவராஜ் தான் என காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
மேலும் சிறுமி சொன்ன தகவல் காவல்துறையினரைக் கிறுகிறுக்க வைத்தது. 8 -ம் வகுப்பு படிக்கும் போதே யுவராஜ் தன்னிடம் அவனது காதலைத் தெரிவித்ததாகவும் ஆயினும் தான் அதனை நிராகரித்ததாகவும் தெரிவித்த சிறுமி, யுவராஜ் தனக்கு அடிக்கடி 100 ரூபாய் சாக்லேட் வாங்கி கொடுத்ததால் அவனது காதலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, காதலன் யுவராஜை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
source https://www.vikatan.com/news/crime/trichy-minor-girl-issue-lover-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக