Ad

வியாழன், 5 நவம்பர், 2020

`இந்த மாதிரி பல நாடகங்களைப் பார்த்துட்டோம்!' - வெடிக்கும் சீமான்

..முருகன் நடத்திய திருவிளையாடலைக் கேட்டிருப்போம், திரையில் பார்த்து இருப்போம். ஆனால், முருகனை வைத்து தமிழக அரசியல் நடக்கும் திருவிளையாடல்கள்தாம் அண்மைக்கால பரபரப்பு. `வெற்றிவேல் யாத்திரை'யை பா.ஜ.க அறிவித்ததும் பற்றிக்கொண்டது சர்ச்சை. `முருகனை நாங்கள்தான் முதலில் முன்னெடுத்தோம்' என மேடைக்கு மேடை முஷ்டி முறுக்கிப் பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

சீமான்

"முருகனை பா.ஜ.க கையில் எடுத்தால், நீங்கள் ஏன் கொதிக்க வேண்டும்?"

"பா.ஜ.க-வுக்கு இங்கு எந்த அரசியலும் இல்லை. கேரளாவில் ஐயப்பனைத் தொட்டுப்பார்த்தாங்க. ஒண்ணும் ஆகலை. இப்போ இங்க முருகனைக் கையில் எடுக்கிறாங்க. அதேபோல் ஒன்றும் ஆகாது.

எங்கள் தமிழின மூதாதையன், தமிழின் அடையாளம்தான் முருகன். அதனால்தான் நாங்க `வீரத்தமிழர் முன்னணி' ஆரம்பித்து `திருமுருகப் பெருவிழா'வை ஆண்டுதோறும் அறுபடை வீடுகளிலும் `வேல் விழா' நடத்திக் கொண்டாடுகிறோம்."

"உங்கள் அரசியல் வேறு அவர்கள் அரசியல் வேறு தானே?"

"நிச்சயம் வேறுவேறுதான். ஆனால், ஆரியமும், திராவிடமும் வெவ்வேறு இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. நான் முருகன், வேல் என்று சொன்னதும் கேலி செய்த திராவிட முன்னேற்றக் கழகமும், அதில் இருக்கும் தலைவர்களும் தற்போது பா.ஜ.க, முருகனையும், வேலையும் தொட்டதும் வரவேற்கிறாங்க. `முரசொலி'யில் பாராட்டி தலையங்கமே எழுதுறாங்க. அப்படின்னா.. நான் வளரக்கூடாது என்ற புரிதல் அவங்க ரெண்டு பேருகிட்டயுமே இருக்கு."

சீமான்

"உங்களை ஏன் இருவரும் சேர்ந்து எதிரியாக நினைக்கணும்?"

``நாங்க பெரிய சக்தியா வளர்ந்துவிடக்கூடாது என்பதுதான் அவங்க நோக்கம். நான் ஆடுமாடு வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, தற்சார்புப் பொருளாதாரம்னு சொன்னபோது கேலி பண்ணாங்க. `அய்யயோ... இவன் ஆடுமாடு மேய்க்கச் சொல்றான். மறுபடியும் வேளாண்மை பார்க்கச் சொல்லுறான்'னு கத்திக் கதறினாங்க. ஆனால், கர்நாடகாவில் வேலைபார்த்த ஒருவர் தற்சார்புப் பொருளாதாரம் சொன்னதும், அதைத் தலைப்பு செய்தியாகப் போடுறாங்க. அதைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். அவர்களுக்குப் புதிய சிந்தனையோ, புதிய கோட்பாடுகளோ எதுவுமில்லை. எந்த அரசியல் அதிகமாக ஈர்க்கப்படுகிறதென்று சர்வே எடுக்கறாங்க. நான் முன்னெடுக்கும் அரசியல் வரவேற்புக் கிடைக்குது. மக்கள் பெருமளவு ஆதரவு தருகிறார்கள். அதை ஒட்டி அரசியலில் நகர முடியுமான்னு பார்க்கிறாங்க. ரஜினிக்குச் சண்டைக் காட்சியில் ஒருவர் டூப் போட்டு நடித்தால், அவர் ரஜினியாக முடியுமா? அப்படி தமிழகத்தில் எங்களைப் பார்த்து காப்பி அடிக்கும் கட்சி, டூப் போடும் கட்சி பா.ஜ.கதான்."

"முருகன் உங்களுக்கு மட்டும்தான் சொந்தம் என்கிறீர்களா?"

"முருகனை உளமாரப் போற்றுவது நாங்கள்தான். நாங்கள் மட்டும்தான். இத்தனை ஆண்டுகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, குருநானக் ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, தெலுங்கு வருடப்பிறப்பு, ஓணம்னு எல்லாவற்றுக்கும் விடுமுறை இருக்கு. ஆனால், எங்களுடைய இறை... எங்கள் மூதாதையன் பிறந்த நாளான திருமுருகப் பெருவிழாவுக்கு அரசு விடுமுறை இல்லை. ஜெயலலிதா அம்மையார் இருந்தபோதும் கேட்டோம்; விடுமுறை விடவில்லை. ஐயா எடப்பாடி பழனிசாமிகிட்டயும் விடுமுறை கேட்டிருந்தோம். `விடுமுறை விடுறோம்'னு சொல்லி இருந்தார். ஆனால், விடவில்லை. உளராம முருகனை நேசித்தால் இவர்கள் பெற்றுக் கொடுத்து இருக்கணுமே.

நான் வருவதற்கு முன்பே பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி எல்லாம் இருந்தாங்களே? அப்ப ஏன் முருகனைக் கையில் எடுக்கவில்லை. நான் பத்து வருஷமாகத்தானே கட்சி வைச்சு இருக்கேன். முருகனைப் பற்றி எட்டு வருடங்களாக பேசிட்டு இருக்கேன். ஆனால், இந்த ஆறு மாசமாகத்தான் முருகன் அவர்கள் கண்ணுக்குத் தெரியுறாரா? வெறும் வாக்கு அரசியலுக்காக முருகனை எடுக்கிறாங்க. ஆத்மார்த்தமாக முருகனை இவர்கள் வழிபடவில்லை. வழிபடவும் மாட்டார்கள்."

சீமான்

``வேல் யாத்திரை முடியும்போது தமிழகத்தில் பா.ஜ.க பெரிய எழுச்சி பெற்றிருக்கும் என்று சொல்கிறார்களே..."

சத்தமாகச் சிரிக்கிறார். ``ஒண்ணுமே ஏற்படாது. ஒருவர் கந்தசஷ்டி கவசத்தைத் தவறாக பேசினார்னு சொன்னாங்க. பேசினவர் யார்னு பார்த்தால் அவர் ஆர்.எஸ்.எஸ்-காரர். அவரே சொல்கிறார் `நான் ஆர்.எஸ்.எஸ்-ல இருந்துதான் இங்க வந்தேன்'னு. அப்ப இவர்களே பிரச்னை உருவாக்குகிறார்களென்று தெளிவாகப் புரியுது. இவர்களே ஆள் அனுப்பிப் பேச வைக்கறாங்க. பேசினதுக்கு அப்புறம்.. `ஆங்.. முருகனைப் பற்றி பேசுறாங்க.. முருகனைத் தப்பா பேசிட்டாங்க... புண்படுத்திட்டான்'னு கதறிக் குதிக்க வேண்டியது.

இந்த கந்தசஷ்டிப் பிரச்னை இவ்வளவு எழுச்சி பெறக் காரணமும் நாங்கதான். எட்டு ஆண்டுகளாக `முருகன்... முருகன்...'னு பேசிட்டு இருக்கோம். நீங்க எங்களைக் கேலி செய்தபோது கூட நாங்கள் முருகனை விடவில்லையே? முருகன் வலுவாக இளைய தலைமுறையிடம் போய் சேர்ந்துவிட்டார். அதனால்தான் இந்த பிரச்னை பெரிதானது. பா.ஜ.க-வுக்கு எல்லாமே அரசியல் லாபம்தான். ஒருவேளை முருகனால் தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டாலும், எனக்குத்தான் லாபமாகுமே தவிர பா.ஜ.கவுக்கு அது போகாது."

Also Read: 47 வேட்பாளர்கள்... சென்னையில் சீமான்? - களத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சி! #TNElection2021

"தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க.. இந்த யாத்திரையால் கலவரம் நடக்கும் என்கிறார்கள்... ஆனால், நீங்கள் தி.மு.க வரவேற்பதாகச் சொல்கிறீர்களே..."

"தி.மு.க நிலைப்பாட்டை திருமாவளவன் மறுப்பாரா என்ன? இவங்க ஒப்பந்தம் என்னன்னா, இருவருக்கும் பொது எதிரி நான்தான். என்னை ஒழிக்கணும் அவ்வளவுதான். ரொம்ப எளிமையா சொல்லுகிறேன் தம்பி. தமிழ்நாட்டு முதலமைச்சர் கூட மோடியிடம் உடனே பேச முடியாது. ஆனால், ஸ்டாலின் ஐயா எடுத்ததும் மோடி கூட உடனே போன்ல பேசுவார். அது எப்படி? அந்த அளவுக்கு நெருக்கமாக இருக்காங்க தம்பி. வெளியில் எதிரி மாதிரி நாடகம் போடுறாங்க. இந்த மாதிரி பல நாடகத்தை நாங்க பார்த்துட்டோம் தம்பி..." சிரிக்கிறார்.

சீமான்

"தி.மு.க கூட்டணியில்தான் காங்கிரஸ் இருக்கிறார்கள். அப்புறம் எப்படி பா.ஜ.க-வுடன் மறைமுகக் கூட்டணி வைக்க முடியும்?"

"நீங்க அவங்க நுண் அரசியலைக் கவனிங்க. இந்தியாவில் நடப்பது எல்லாமே பாலிசி சேஞ்ச் இல்லை.. பார்ட்டி சேஞ்ச்தான். காங்கிரஸும், பா.ஜ.க-வும் வேற வேற கட்சி கிடையாது. அவங்க ராமர் கோயிலை இடிப்பாங்க, நீ இடிக்க அனுமதி கொடுப்ப... அவர் ராமர் கோயில் கட்டுவாரு. நீ வாழ்த்து செய்தி சொல்லுவ... நீ நீட்டைக் கொண்டுவருவ, அவன் செயல்படுத்துவான். நீ ஜி.எஸ்,டி, சி.ஏ.ஏ கொண்டு வருவ, அவன் உடனே செயல்படுத்துவான். ரெண்டு கட்சிக்கும் என்ன மாறுதல் இங்க இருக்கு? வெளியுறவுக் கொள்கை, கல்விக் கொள்கை எல்லாமே ஒன்றுதான். அப்படி இருக்கும்போது தி.மு.க கூட்டணியில் யார் இருந்தால் என்ன? இருவருக்கும் ஒரே கொள்கைதான். ஆனால், வேறு வேறு கட்சிகள் மாதிரி நடிப்பாங்க. அதை நாமும் நம்ப வேண்டுமா என்ன?"

Also Read: “முருகன் யாருக்குச் சொந்தம்?”

``தேர்தலுக்குத் தயாராகிவிட்டீர்களா?"

``தமிழக அரசியல் கட்சிகளில் முதலில் தயாரானது நாங்கள்தான். 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடப்போகிறோம். மக்கள் எங்களை முழுதாக நம்ப ஆரம்பிச்சுட்டாங்க. இளைஞர்கள் எங்கள் பக்கம் வரத்தொடங்கிட்டாங்க. எத்தனை பேர் வேண்டுமானாலும் எங்களை எதிர்க்கட்டும்... மக்கள் ஆதரவுடன் ஒற்றை ஆளாக நாங்கள் எதிர்ப்போம். சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்.."



source https://www.vikatan.com/news/politics/seeman-talks-about-bjps-murugan-strategy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக