தெற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இது வலுப்பெற்று புயலாக உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. நிவர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் புயல், நாளை மறுதினம் (25-ம் தேதி) மாமல்லபுரத்துக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்றும், அப்போது சென்னை, புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், கடல் பகுதிகளில் சூறாவளியும் வீசும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி இந்தப் புயல் சென்னையில் இருந்து 740 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 700 கி.மீ தொலைவிலும் நிலைபெற்றிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் அதீத கனமழை பெய்யும் என்றும், இன்று பிற்பகல் அல்லது மாலையில் இருந்து சென்னை மற்றும் டெல்டா பகுதிகளில் மழை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புயலை எதிர்கொள்வதற்காக அரக்கோணத்தில் இருந்து தரைவழி மார்க்கமாக தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, கடலூர், சிதம்பரம், புதுச்சேரி பகுதிகளில் முகாமிட்டிருக்கின்றனர். கடலில் பலத்த காற்று வீசத் தொடங்கியிருப்பதால், 26-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருப்பதுடன் புதுச்சேரி, கடலூர், பாம்பன், எண்ணூர் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது.
Also Read: `தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் நிவர்!’ - கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
``புதுச்சேரி, கடலூர், மரக்காணம் பகுதிகளில் புயல் கரையைக் கடந்தால் அந்தப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். ஆனால், காற்றின் வேகம் இன்னும் கணிக்கப்படவில்லை. 100 கிலோமீட்டாரா அல்லது 120 கிலோமீட்டரா என்பது இன்று உறுதி செய்யப்பட்டுவிடும். தற்போதைய சூழலில் வடமாவட்டங்கள் முழுவதிலுமே கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிமாக இருக்கிறது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது. புயல் மேற்கு நோக்கி நகரும்போது இன்று மாலையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற உள்மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கும்” என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
புதுச்சேரியில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வழக்கமாக 3 அடி உயரத்திற்கு எழும் அலைகள் தற்போது 10 அடி உயரம் வரை எழுந்திருக்கின்றன. கடலோரப் பகுதியில் நேற்று முதலே போலீஸார் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை காரணமாக புதுச்சேரி விசைப்படகு மீனவர்களுக்கு நேற்று முதல் மீன்வளத்துறை சார்பில் டீசல் வழங்கப்படவில்லை. இதனால் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் அனைத்தும் அந்தந்தப் பகுதிகளின் கரையோரம் பாதுகாப்புடன் நிறுத்தப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு மீன்வளத்துறை கொடுத்த அறிவிப்பின் அடிபடையில், கடலுக்கு சென்ற மீனவர்கள் பெரும்பாலானவர்கள் திரும்பிவிட்டனர். மீதமுள்ள சிலரையும் கரைக்கு அழைத்துவரும் முயற்சியில் கடலோரக் காவல் படை இறங்கியிருக்கிறது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு முகாமிட்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/disaster/2cyclone-nivar-precautionary-measures-taken-in-tn-coastal-districts-and-puducherry
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக