Ad

திங்கள், 2 நவம்பர், 2020

கொரியா மேல் ஏன் கோபம், சவுதியுடன் ஏன் நட்பு... ட்ரம்ப்பின் உலகமும், அரசியலும்! ட்ரம்ப் தொடர் - 10

இப்படிப்பட்ட ஒரு மனிதர் இருக்கிறார், ஒரு அதிபரின் வாரிசு இருக்கிறார் என்று பெரிதாக யாருக்குமே தெரியாது. 2009-க்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. 2011-ல் நாட்டை ஆண்ட அவர் தந்தை இறந்துபோக, தமிழ் சினிமாவைப்போல் திடீரென நாட்டிற்கே சுப்ரீம் லீடராகிறார். பார்க்க பால்வடியும் முகத்துடன் இருந்த அவர் வயதில் சிறியவர். அந்த நாட்டிலேயே இல்லாதபோதும், அதிபரின் மகன் என்பதுதான் அனுபவம், தகுதி, எல்லாமுமே... 'இவரால் ஒரு மாதம் கூட ஆட்சியில் தாக்குப் பிடிக்க முடியாது, ஏன் ஒருவாரம் கூட முடியாது' என உலகம் மட்டுமல்ல, உள்நாட்டு மக்களும் நினைத்தார்கள்.

'மேற்கு நாடுகளில் படித்து, அங்கேயே இருந்தவருக்கு நம் நாட்டைப் பற்றி என்ன தெரியும்... குறிப்பாக இந்நாட்டின் அரசியலைப்பற்றி சிறிதாவது உணர்வாரா' என்றார்கள். ஆனால், தன் அதிகாரம் எப்படிப்பட்டது என அனைத்து அனுமானங்களையும் தகர்த்து வாயடைக்க வைத்தது அந்த வாரிசு. அவரின் செயல்கள் ஒவ்வொன்றும் திக்குமுக்காடச் செய்தது. அந்நாட்டு மக்களை மட்டுமல்ல, மொத்த உலகையும்..! அவர் பெயர் 'கிம் ஜாங் உன்.'

The Interview (2014)

'தி இன்டர்வியூ' (The Interview) என்ற ஹாலிவுட் படம் கொலம்பியா பிக்சர்ஸால் தயாரிக்கப்பட்டு 2014-ம் ஆண்டு வெளியானது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை நேர்காணல் எடுக்கத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வாய்ப்பு கிடைக்கும். பேட்டியெடுக்கப்போகும் நிருபரைச் சந்திக்கும் சிஐஏ அதிகாரி, கிம்மை கொலை செய்ய உத்தரவிடுவார். கிம், வட கொரியா, சிஐஏ, அமெரிக்காவின் பொருளாதாரத் தடை என நிஜ சம்பவங்களின் தொடர்புகளோடு நகரும் படத்தில் இறுதியில் கிம் கொல்லப்படுவார். அமெரிக்க உளவுத்துறை நிறுவனமான சிஐஏ, மற்றொரு நாட்டின் அதிபரைக் கொலை செய்ய முயலும் நிகழ்வு இவ்வளவு வெளிப்படையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

கொல்லக்கூடிய அளவுக்கு அமெரிக்காவுக்கும் கிம்முக்கும் அப்படி என்னப் பகை, திரைப்படமாக எடுத்துக் கொண்டாடும் அளவிற்கு உலக மக்கள் இதில் உடன்படுகிறார்களா, கிம் ஜாங் உன் - ட்ரம்ப் சந்திப்பு ஏன் நடந்தது?!

இரண்டாம் உலகப்போருக்கு முன்புவரை ஜப்பானின் சர்வாதிகார ஆதிக்கத்திலிருந்தது கொரியா. நேச நாடுகள் வென்ற பிறகு சோவியத் யூனியனும், அமெரிக்காவும் ஜெர்மனியைப்போல் கொரியாவையும் பங்கு போட்டனர். 38-வது அச்ச ரேகையிலிருந்து வடகொரியா, சோவியத் ஆளுகையின் கீழும், தென்கொரியா அமெரிக்க ஆளுகையின் கீழும் பிளவுபட்டது. தெற்குப்பகுதி 'குடியரசு கொரியா' என்ற நாடாகி சிங் மன்றி என்பவர் அதிபராகவும், வடக்கு 'மக்கள் ஜனநாயகக் கொரிய குடியரசு' என்ற நாடாகி 'கிம் சங்' அதிபராகவும் பொறுப்பேற்றார்கள். ஸ்டாலினின் ஆதிக்கம், அமெரிக்காவின் வர்த்தகம் என ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி 1950-ம் ஆண்டு தொடங்கிய இரு நாடுகளுக்கு இடையேயான கொரியப் போர் மூன்றாண்டுகள் நீடித்தது. நிலையான தீர்வைப்பெறாத போரின் விளைவு தொடர் பிரச்னைகளை உருவாக்கியது.

அதிபர் கிம் ஜாங் உன்

வடக்கு கொரியா இடதுசாரிய அரசியல் சார்பு கொண்ட நாடாக இருந்தது. அது தென் கொரியாவை அபகரிக்க முயல்கிறது என அப்போது சென்ற அமெரிக்க ராணுவம் இன்றுவரை தென் கொரியாவில் முகாமிட்டுள்ளது. அதனால் கொரிய நாடுகளுக்கு இடையேயான உரசல் வட கொரியா - அமெரிக்கா பகையாக உருவெடுத்தது. சோவியத் யூனியன் சிதைவு, சந்தைப் பொருளாதாரத்தை ஏற்ற சீனா, கூடவே கடும் பஞ்சம் என 90-களில் தனிமைப்படுகிறது வட கொரியா. தங்கள் பாதுகாப்புக்காக அணு ஆயுத பரிசோதனை என இறங்கும் வட கொரியா மீது பொருளாதாரத் தடை போன்ற அமெரிக்கப் பகை தீவிரமடைகிறது. ஒவ்வொரு நாளும் வட கொரியாவைத் திட்டுவதை வழக்கமாக வைத்திருந்த ஜார்ஜ் ஜுனியர் புஷ் ஒரு கட்டத்தில் பிரச்னைக்குத் தீர்வு காணச் சமாதான ஒப்பந்தங்களை நிறைவேற்றினார்.

கிம் பற்றி அறிமுகப்படுத்தும் ஒவ்வொருவரும் மலேசிய விமான நிலையத்தில் கொல்லப்பட்ட அவர் சகோதரரிலிருந்தே தொடங்குவார்கள். ரசாயன திரவம் உடலில் வீசப்பட்டு கொடூரமாகக் கொலையுண்ட கிம்மின் சகோதரர் 'கிம் ஜாங் நம்' இறப்பிற்கு கிம்மின் அதிகார ஆசை காரணமாகக் கூறப்படுகிறது. தன் மூர்க்கத்தனமான அதிகாரத்தால் வட கொரியாவைச் சர்வாதிகார நாடாகவும், அணு ஆயுத சோதனை மூலம் உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கிறார் என்பதாகவும்தான் கிம்மின் இன்றைய தோற்றம் இருக்கிறது. வட கொரியாவின் முதல் அதிபரும் தனது தாத்தாவுமான 'கிம் இல் சங்'ன் நூற்றாண்டை முன்னிட்டு புவியை ஆய்வு செய்யும் சேட்டிலைட் அனுப்பபோவாதாக 2012-ல் அறிவித்தார் கிம். சேட்டிலைட் தொழிற்நுடபத்திற்கு பின்னால் ஆயுத ஏவுகணை சோதனைக்கு கிம் தயாராவதாக அச்சப்பட்டது அமெரிக்கா. வட கொரியாவுக்குக் கொடுக்கும் உணவு உதவிகளை நிறுத்தினார் ஒபாமா. தொடர்ந்து, மேற்கு கறைகளை நோக்கி ஏவுகணை தயாராக உள்ளது, அமெரிக்க வளைகுடாக்களைத் தகர்ப்போம் என கிம் பேசியதால் வட கொரியா மீது நிர்வாகத்தடையை முயற்சி செய்தார் ஒபாமா.

ட்ரம்ப் - கிம் ஜாங் உன்

ட்ரம்ப் வந்த பிறகு அவருக்கும் கிம்முக்கும் இடையே ஏவுகணையை விட வார்த்தைப்போர் வலிமையாக இருந்தது. "ஒட்டுமொத்த அமெரிக்காவையும் சொற்ப நிமிடத்தில் தகர்த்துவிடும் அணு ஆயுதத்தின் பட்டன் என் மேசையின் மேல் உள்ளது. இது அச்சுறுத்தல் அல்ல, இதுதான் உண்மை" என்றார் கிம். மற்ற நாட்டுப் பிரச்னைகளில் தானே ஆஜராகும் அமெரிக்காவிற்கு, தன்னை ஒருவன் மிரட்டுகிறான் என்றால் எப்படியிருக்கும்..? ஆங்கிரி பேர்டானார் ட்ரம்ப். "இதுவரை உலகம் பார்க்காத கோபத்தையும் கொதிப்பையும் பார்க்கப் போகிறது" என்றார். "அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்காக மொத்த வட கொரியாவையும் அழிக்கவும் தயங்க மாட்டேன்" என்றார். ஆனால், போகப்போகக் காட்சிகள் மாறின. தான் எல்லோரிடத்திலும் நட்பை எதிர்பார்க்கிறேன் என்றார் கிம். எதிராளியான தென்கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டார். ட்ரம்ப்பைச் சந்திக்க ஆர்வத்தோடு இருப்பதாக மனம் திறந்தார். அன்றைய நிலைக்கு ஆச்சர்யமும், சரித்திரப் புகழும் கொண்ட ட்ரம்ப்- கிம் சிங்கப்பூர் சந்திப்பு நடைபெற்றது. அணு ஆயுத சோதனையை நிறுத்திக்கொள்வதாக வாக்குறுதி கொடுத்த கிம், பத்திரிகையாளர்கள் முன்பு ஒரு அணு ஆயுத சோதனைக் களத்தைத் தகர்த்தார். ட்ரம்ப் - கிம் இரண்டாம் சந்திப்பு வியட்நாம் 'ஹனோய்' சம்மிட்டிலும், மூன்றாம் சந்திப்பு கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் முதன்முறையாக ஆட்சியிலிருக்கும் அமெரிக்க அதிபர் வட கொரியா வந்து சந்திப்பதாகவும் அமைந்து சிறப்புப் பெற்றது. ட்ரம்ப் வட கொரியா வந்ததை நம்ப முடியாத ஆச்சர்யமாக மகிழ்ந்தார் கிம்.

வட கொரியா எங்களை அச்சுறுத்துகிறது என அமெரிக்க ஊடகங்கள் சொன்னால், அமெரிக்கா எங்களை அச்சுறுத்துகிறது என வட கொரிய ஊடகங்கள் சொல்கின்றன. "வட கொரியா இதுவரை எந்த நாட்டின் மீதும் அத்துமீறி நுழைந்ததும், போர் புரிந்ததும் கிடையாது. அப்படியிருக்கையில், அமெரிக்கப் படைகளிலிருந்து சிறிய நாடான தன்னை காத்துக்கொள்ளவே அணு ஆயுத சோதனையில் இறங்குகிறது" என்கிறார்கள் உலக அரசியல் நிபுணர்கள். மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டுவிடுமோ என்று பயந்த பார்வையாளர்களுக்குக் குழப்பமான மூன்று சந்திப்புகள் மட்டுமே நடந்துள்ளது.

ட்ரம்ப்பின் முடிவுகள் பல விஷயங்களில் ஒன்றுக்கொன்று முரணாக, விநோதமானவை என்பதை அறிவோம். முன் ஏற்றதைப் பின் மறுப்பார், பின் ஏற்பதை முன் மோசமாகப் பேசியிருப்பார். இரட்டை கோபுர தாக்குதல் சமயங்களில் சவுதி அரேபியாவின் விமர்சகராக இருந்தவர், தேர்தல் பிரசாரத்தில் சவுதி அரச குடும்பத்துடன் நெருக்கம் காட்டினார்.

ஜமால் கஷோகி

ஒரு படுகொலை ஒரு நட்பு!

ட்ரம்ப் - சவுதியின் கூட்டால் அமெரிக்காவிற்கு இருந்த சிறிய நற்பெயரை முடிவுக்குக் கொண்டு வந்தது பத்திரிகையாளர் 'ஜமால் கஷோகியின்' படுகொலை. 'வாஷிங்டன் போஸ்ட்' நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் கஷோகி, சவுதி அரேபிய அதிகார மட்டங்களுடன் தொடர்பிலிருந்தவர். இளவரசர் முகமது பின் சல்மானின் தீவிர விமர்சகர். சவுதியில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தவர், அமெரிக்காவில் குடியேறினார். கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று தனது திருமணம் தொடர்பான ஆவணங்களைப் பெறத் துருக்கி இஸ்தான்புலில் உள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்றார் கஷாகி. சென்றவர் திரும்பவில்லை. கஷாகி சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானின் ஆணைப்படி படுகொலை செய்யப்பட்டார் எனத் துருக்கி அரசு குற்றம் சாட்டியது. சவுதி அரசு இதனை மறுத்தது. ஐநா மற்றும் உலக நாடுகளின் கண்டனங்கள் எழுந்தது. ஐநா விசாரணை ஆணையத்தில் துருக்கி அரசு சமர்ப்பித்த 45 நிமிட ஆடியோ, படுகொலைக்கு முக்கிய ஆதாரமானது. விஷயம் உலகளவில் பரபரக்க, 'தூதரக அதிகாரிகளுடன் நடந்த மோதலால் கஷோகி கொல்லப்பட்டார்' என சவுதி அரசு ஒப்புக்கொண்டது.

Also Read: "உலகம் அழிவைச் சந்தித்தால் என்ன?" இஸ்லாமிய வெறுப்பும், அமெரிக்க அக்கறையும்! - ட்ரம்ப் தொடர் 9

ஆனால், "சவுதி இதனைச் செய்திருக்காது, எனது முழு ஆதரவையும் சவுதிக்கு தருவேன்... எப்போதும் அவர்களுக்குத் துணை நிற்பேன்" என ட்ரம்ப் ஆரம்பம் முதலே தன் நட்பை விட்டுக்கொடுக்கவில்லை. இதனைக் கேட்ட ட்ரம்ப்பின் சொந்த கட்சியினரே செனட் சபையில் கொதித்தெழுந்தனர். "நாங்கள் ஒருபோதும் இதை எதிர்பார்க்கவில்லை" என்றார்கள். "கஷோகியின் மிருகத்தனமான படுகொலையைக் குறைத்து மதிப்பிடவோ, கடந்து சென்றுவிடவோ முடியாது. இந்த கொடுஞ்செயலுக்கு சவுதியை கண்டித்து, கடும் தடைகளை விதிக்க வேண்டும்" என்று அவையில் பேசினார் குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் வேட்பாளர் மிட் ரோமே. குறிப்பாக, "கஷோகியின் படுகொலையில் இளவரசர் முகமது நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளார்" என்று சிஐஏ அறிக்கை வெளியிட்டது. இருந்தும், சவுதிக்கு எதிராகச் சிறு துரும்பைக் கூட அசைக்க மறுத்தார் ட்ரம்ப்.

Trump

ஓர் உலகம் ஒரு நட்பு!

ட்ரம்ப் அதிபரான பிறகு மேற்கொண்ட முதல் பயணத்தில் சவுதி அரேபியாவும் ஒன்று. அப்பயணத்தின் மூலம், 450 பில்லியன் டாலர் அமெரிக்காவில் முதலீடு செய்ய சவுதி ஒப்பந்தம் செய்தது. மேலும், அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 110 பில்லியன் டாலருக்கு ஆயுதப் பரிவர்த்தனை செய்தது. தொடரும் இந்தப் பொருளாதாரமே, சவுதியின் செயல்களுக்கு ட்ரம்ப்பை இணங்க வைக்கிறது. இதன்மூலம் தமக்குக் கிடைக்கும் பணம் மற்றும் அதிகார பலம் காரணமாக மத்திய கிழக்கில் அமெரிக்கா எது செய்தாலும் சவுதியை உடன்பட வைக்கிறது. 'வியட்நாம், ஈராக்கில் அமெரிக்கா செய்ததைத்தான் இன்று ஏமனில் சவுதி செய்கிறது என்பதால் ஆச்சர்யப்பட எதுவுமில்லை' என ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

நவ பழைமைவாதியான ட்ரம்ப்பும், அடிப்படைவாத பழைமைவாத நாடான சவுதியும் வர்த்தகத்தின் வழியே நட்பைப் பேணுவது, போரை ஆதரிப்பது, பாதுகாப்பு பற்றிப் பேசுவது அவர்கள் கூறுவது போல் உலகத்தின் நன்மைக்கானது என நாமும் நம்புவோம்!


source https://www.vikatan.com/government-and-politics/international/donald-trumps-stand-on-north-korea-and-saudi-arabia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக