Ad

திங்கள், 2 நவம்பர், 2020

சிவகங்கை: லட்சக்கணக்கில் மதிப்பு! - வெட்டிக் கடத்தப்படும் மரங்கள்... துணை போகும் அதிகாரிகள்?

சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மணல் கொள்ளை நடைபெறுகிறது என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டனர். மணல் கொள்ளைக்கு அடுத்த படியாக மரங்கள் வெட்டிக் கடத்தல் செய்வதாக பொதுமக்களும், விவசாயிகளும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

வெட்டப்படும் மரங்கள்

இந்நிலையில் மதகுபட்டி அருகே உள்ள அம்மன் பட்டி, சொக்கநாதபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக மரம் வெட்டப்படுவதாகவும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் துணை போவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த நடராஜன்..., ``சொக்கநாதபுரம், அம்மன் பட்டி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நாட்டு இன மரங்கள் அடியோடு சாய்க்கப்படுகிறது. குளத்தை தூர்வாருவதாக பழமையான மரங்களை வெட்டிச்சாய்க்கின்றனர். சாலையோரங்களில் நம்பர் போட்டு குறித்த மரங்கள் கூட வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. தற்போது வீரபாண்டி ஊரணியில் 15 லட்சம் மதிப்புள்ள 80 வருட பாரம்பரிய மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

கண்மாயில் மரங்கள் வெட்டப்பட்டு தடயம் அளிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் கடத்துபவர்களுக்கு சில ஆயிரங்களில் அபராதம் விதிப்பதால் யாரோ ஒரு கூலியின் பேரில் தண்டத் தொகை வசூலிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தப்ப விடப்படுகிறார்கள். உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை தண்டத் தொகை வசூலிப்பது என்பது குற்றவாளிகளை காப்பாற்றும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே நடைபெறுகிறது.

தலையாரி முதல் தாசில்தார் வரை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை. அதனால் தொடர்ந்து மரங்களை வெட்டும் பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயன் இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீது அவர்களுக்கு துணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இது குறித்து சொக்கநாதபுரம் பகுதி வி.ஏ.ஓ விவேக்கிடம் பேசியபோது.., ``கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. பட்ட மரங்கள் என ரசீது போட்டு பச்சை மரங்கள் வெட்டியுள்ளனர். இது குறித்து ஆர்.ஐ இடம் புகார் தெரிவித்த போது அவர் மேல் இடத்திற்கு பார்வேட் செய்திருப்பார். மேலும் இது நெடுஞ்சாலைத்துறை கீழ் வருவதால் இந்த விசயத்தில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நான் பணிக்கு சேர்ந்து 2 மாதங்கள் தான் ஆகுது. எனவே வீரபாண்டி ஊரணி மரங்கள் குறித்து எனக்கு தெரியவில்லை” என்றார்.

மரங்கள்

இது குறித்து காளையார்கோயில் பகுதி பி.டி.ஓ..., ``வீரபாண்டி ஊரணியில் மரம் வெட்டியது குறித்து ஆவணங்களை பார்த்தால் தான் சொல்லமுடியும். அங்குள்ள மரங்களை வெட்ட வி.ஏ.ஓ, மற்றும் ஆர்.ஐ தான் அனுமத்தித்துள்ளனர். இருந்தாலும் ஆவணங்களை பார்த்த பின் விரிவான தகவல் தருகிறேன்” என்றார்.

சிவகங்கை தாசில்தாரிடம் பேசியபோது.., ``சொக்கநாதபுரம் அம்மன்பட்டி பகுதியில் மரங்கள் வெட்டுவது குறித்து அப்பகுதி ஆர்.ஐயை கண்காணிக்க சொல்லியுள்ளேன். பச்சை மரங்கள் வெட்டுவது தெரியவந்தால் உடனே காவல்நிலையத்தில் புகார் அளிக்க சொல்லியுள்ளேன்” என்றார்.

அம்மன்பட்டி, சொக்கநாதபுரம் பகுதியில் தொடர்ந்து மரம் வெட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் விசாரணை ஒருபக்கம் இருந்தாலும் நீதிமன்றம் தலையிட்டுஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/social-activists-fight-against-cutting-of-trees-in-sivaganga

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக