`விரைவில் என்னுடைய நிலைப்பாட்டை அறிவிப்பேன்' என நடிகர் ரஜினி கூறிய பிறகும் சர்ச்சை அலைகள் ஓய்வதாக இல்லை. ` ரஜினியைத் தனிக்கட்சி தொடங்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஆடிட்டர் குருமூர்த்தி. இதற்கு ரஜினி தரப்பிலிருந்து உரிய பதில் வரவில்லை' என்கின்றனர் மக்கள் மன்ற நிர்வாகிகள்.
Also Read: `அறிக்கை என்னுடையது அல்ல; தகவல்கள் உண்மை!’ - மௌனம் கலைத்த ரஜினி
`சட்டமன்றத் தேர்தலையொட்டி தனிக்கட்சி தொடங்குவார் ரஜினி' என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அதற்கேற்ப, மாநிலம் முழுவதும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, நிர்வாகிகளுடன் உரையாடல் எனப் பரபரப்பாக இயங்கி வந்தார் நடிகர் ரஜினி. கூடவே, சினிமா படப்பிடிப்புகளிலும் தீவிரமாகப் பங்கேற்று வந்தார். இந்நிலையில், கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் மக்கள் மன்றப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. ஏற்கெனவே, உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ரஜினி, கொரோனா பரவல் காரணமாக வெளியுலகில் தலைகாட்டுவதையே தவிர்த்து வந்தார். இதன் காரணமாக, `அண்ணாத்த' படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.
`தனிக்கட்சி எப்போது?' எனத் தொண்டர்கள் தரப்பில் இருந்து தொடர்ந்து கேள்விகள் வந்ததால், `ரஜினிகாந்த்' பெயரில் சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று வெளியானது. அந்தக் கடிதத்தில், `என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்புக்குரிய என் ரசிகர்களும் மக்களும்தான் எனக்குக் கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் - அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
Also Read: திருச்செந்தூர்:`ரஜினி பேச்சில் உண்மை இருக்கிறது; நியாயம் இருக்கிறது!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
இந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. 2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர்பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016-ம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்குச் சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரிலுள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்.
கொரோனா தொற்று எப்போது முடியும் எனத் தெரியாத நிலையில், எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். `இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்' என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலானதால், அதற்கு ரஜினியே, ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்தார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், `அந்த கடிதத்தில் கூறப்பட்ட மருத்துவர்கள் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மை. தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்' எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, அரசியலுக்கு ரஜினியை அழைக்கும்விதமாக சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
இந்தநிலையில், நேற்று மாலை நடிகர் ரஜினியை, ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர்கள், `` ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ஆடிட்டர் குருமூர்த்தி வந்திருந்தார். பின்னர், அரசியல் தொடர்பாக தீவிர விவாதம் நடந்தது. நடப்பு அரசியல் குறித்து சில விஷயங்களை குருமூர்த்தி பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசுகையில், ` உங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்வதற்கு பா.ஜ.க தயாராக உள்ளது. நீங்கள் தனிக்கட்சி தொடங்கினால், அதனைப் பதிவு செய்வதற்குத் தேர்தல் ஆணையமும் தயாராக உள்ளது. எந்தவித தயக்கங்களும் உங்களுக்குத் தேவையில்லை. நீதிமன்ற உதவிகளும் வந்து சேரும். பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதும் வைக்காததும் உங்கள் விருப்பம். ஆனால், நிச்சயமாக நீங்கள் தனிக்கட்சி தொடங்கி, களத்துக்குள் வர வேண்டும். பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும் என்ற எந்த நிர்பந்தங்களும் உங்களுக்கு இல்லை' என விவரித்தவர், அ.தி.மு.க-வில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது தொடர்பாகவும் சில கருத்துகளைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, `அ.தி.மு.க-வை நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வந்திருந்தால் இங்கு இரண்டாவது இடம் கிடைத்திருக்கும். இப்போது நீங்கள் வந்தால் 2024 தேர்தலில் பா.ஜ.க-வுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பிரதமரும், தமிழர் உணர்வுகளை மையப்படுத்தியே பேசி வருகிறார்' என்றார். ஆடிட்டர் கூறிய தகவல்களை முழுமையாகக் கேட்டுக் கொண்ட ரஜினி, `யோசித்துச் சொல்கிறேன்' என வழக்கம்போல பதில் கூறிவிட்டார்" என்றனர் விரிவாக.
அதேநேரம், ரஜினி அரசியலுக்கு வருவதை அவரது குடும்பத்தினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. `சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவரும் சூழலில் அரசியலில் களமிறங்குவது சரியானதாக இருக்காது. அதிலும், கொரோனா காலத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு, செய்தியாளர் சந்திப்பு எனக் களமிறங்கினால், உடல்நலனில்தான் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, எதைப் பற்றியும் யோசிக்காமல் சற்று ஓய்வெடுங்கள்' எனக் குடும்பத்தினர் உறுதியாகக் கூறிவிட்டனர்.
இதன் காரணமாக, ட்விட்டரில் பதிவை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினி. இருப்பினும், `தேர்தல் காலம் நெருங்குவதால் தி.மு.க-வின் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்த பல வகைகளிலும் பா.ஜ.க முயன்று வருகிறது' எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
source https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-rajini-and-auditor-gurumurthy-meeting
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக