ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் ஒற்றுமை யாத்திரையில் ஆரம்பத்திலிருந்தே கலந்து கொண்ட தஞ்சாவூரை சேர்ந்த காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர், மாகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவரின் உடலுக்கு ராகுல்காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இச்சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தஞ்சாவூர் கீழவாசல் பூமால்ராவுத்தன் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (60). இவர் சிறுவயதிலிருந்தே தன்னை காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணித்து கொண்டவர். திருமணம் செய்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி பணியே முழுநேர வேலையாக கொண்டவர். தஞ்சாவூர் மாவட்ட சேவாதளத்திலும், காங்கிரஸ் கட்சியில் மாநகரத்தில் பொறுப்பு வகித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை நடத்தப்பட்ட யாத்திரையில் ஒன்றை கூட தவறவிட்டதில்லை. யாத்திரை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பார். அதனாலேயே அவரின் பெயரான கணேசனுடன் யாத்திரை ஒட்டிக்கொண்டது. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொடங்கி தொண்டர்கள் வரை அனைவரும் யாத்திரை கணேசன் என்றே அவரை அழைப்பார்கள் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ஒற்றுமைக்காக ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் நடைபயணத்தில் ஆரம்பத்திலிருந்தே பயணித்த கணேசன், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட விபத்தில் சிகிச்சை பலனிக்காமல் யாத்திரை கணேசன் உயிரிழந்த சம்பவம் காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இது குறித்து தஞ்சாவூர் காங்கிரஸ் கட்சியினர் கூறுகையில், ``யாத்திரை கணேசன், குமரி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற நடைபயணங்கள், சில மாதங்களுக்கு முன்பு நடந்த வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை வரை அனைத்திலும் கலந்து கொண்டவர். இந்திய ஒற்றுமைக்காக ராகுல் காந்தி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய பாதயாத்திரையில் கலந்து கொண்ட கணேசன் தொடக்கத்திலிருந்தே சென்று வந்தார்.
தீபாவளி பண்டிகை சமயத்தில் மட்டும் மூன்று நாட்கள் தஞ்சாவூருக்கு வந்துவிட்டு, மீண்டும் பாத யாத்திரையில் பங்கேற்க சென்று விட்டார். அப்போதே நிர்வாகிகள் சிலர் ரொம்ப தூரம் போக வேண்டாம் கணேசா என்றனர். தூரம் முக்கியமல்ல ராகுல்காந்தி யாத்திரை முடிக்கும் இடம் வரை நான் போகணும் என கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே பாதயாத்திரை நடைபெற்றது. இரவு 8 மணியளவில் யாத்திரை குழுவினர் தங்கியிருந்த இடத்தில் சாப்பிட்டு விட்டு, வெளியே வந்த கணேசன் மற்றும் தொண்டர் ஒருவர் மீது அந்த வழியாக சென்ற லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இதையறிந்த ராகுல்காந்தி உண்மையான விசுவாசியை இழந்து விட்டோம் என கூறி இரங்கல் தெரிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சி கொடி போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த யாத்திரை கணேசன் உடலுக்கு ராகுல்காந்தி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து மற்றவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
யாத்திரை கணேசன் உடலை தஞ்சாவூருக்கு ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உடல் தஞ்சாவூர் வந்ததும் கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கபடும். அவருடைய இழப்பு காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்றனர்.
source https://www.vikatan.com/news/politics/yathra-ganshan-died-in-jodo-yatra-rahul-gandhi-says-party-lost-true-cadre
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக