மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாக உடைந்த போது, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிக்கு சென்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அடிக்கடி இதனை சிவசேனா சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறது. நேற்று மராத்தி டிவி சேனல் நிருபர் ஒருவர் ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா அமைச்சர் அப்துல் சத்தாரிடம் நேர்காணல் நடத்தினார்.
இதில் அந்த நிருபர், ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ரூ.50 கோடி வாங்கியதாக வந்துள்ள புகார் குறித்து கேட்டதற்கு கடும் கோபமடைந்துவிட்டார். கோபத்தில், சுப்ரியா சுலே பற்றி மோசமான வார்த்தைகளை பேசினார். சுப்ரியாவிற்கு எதிராக அமைச்சர் பேசியதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் மும்பை போரிவலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். தங்களது புகாரில், `அப்துல் சத்தார் நாட்டின் ஒட்டுமொத்த பெண்களையும் அவமதித்துவிட்டார். சுப்ரியாவை அவதூறாக பேசி ஒட்டுமொத்த பெண்களையும் அவமதித்துவிட்டதால் அப்துல் சத்தார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்வதாக’ அதில் குறிப்பிட்டு இருந்தனர். அப்துல் சத்தார் கருத்து சர்ச்சைக்குள்ளானதை தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே அணியில் செய்தித்தொடர்பாளர் தீபக் கேசர்கர், ``இப்பிரச்னைக்காக அப்துல் சத்தார் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம் இப்பிரச்னைக்காக அமைச்சர் பதவியில் இருந்து விலகமாட்டார்” என்று குறிப்பிட்டார். இச்சம்பவத்ததை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் அப்துல் சத்தார் வீட்டிற்கு வெளியில் அவரின் புகைப்படத்தை எரித்து தங்களது எதிர்ப்பை காட்டினர். சிலர் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். தேசியவாத காங்கிரஸ் கட்சியினரின் எதிர்ப்பை தொடர்ந்து அப்துல் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் தெரிவித்த கருத்து யாரையாவது காயப்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஆனால் சுப்ரியா சுலே குறித்து தான் எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வித்யாசவான் கோரிக்கை விடுத்துள்ளார். அப்துல் சத்தார் வேளாண்மைத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் அவுரங்காபாத் மாவட்டத்தில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் சிவசேனாவுக்கு வந்தார். அங்கிருந்து ஏக்நாத் ஷிண்டேயின் அணிக்கு தாவி இருக்கிறார்.
source https://www.vikatan.com/news/politics/attack-on-maharashtra-minister-abdul-sattars-house-after-defaming-sharad-pawars-daughter
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக