Ad

ஞாயிறு, 6 நவம்பர், 2022

ஆன்லைன் கேமிங் மோசடி: சீனாவின் இந்திய இயக்குநர்களுக்கு அமலாக்கத் துறை வலை

இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது. கூடவே சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதும் அதிகரித்துவருகிறது. இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் இணையதளங்கள் வழியாகப் பலவிதமான மோசடிகளும் நடந்துவருகின்றன.

குறிப்பாக, ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாகப் பல ஆயிரம் கோடி அளவில் மோசடிகள் நடப்பதாகத் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இதில் சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிகமாக ஈடுபட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

ஆன்லைன் மோசடி

மத்திய அரசு ஏற்கெனவே பலவிதமான சீன நிறுவனங்களின் செயலிகள் இந்தியாவில் செயல்படுவதற்குத் தடை விதித்திருக்கிறது. ஆனாலும், புதிது புதிதாக நிறுவனங்கள் உருவாவதோடு, தொடர்ந்து புதுப் புது மோசடிகளிலும் ஈடுபடுகின்றன. அதைத் தொடர்ந்து சமீபத்தில் கடன் வழங்கும் சேவை மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூலித்து பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டுவதும், கடனைச் செலுத்தாதவர் களைத் தனிப்பட்ட முறையில் தகாத வழிகளில் மிரட்டுவதும் இதனால் பல தற்கொலை சம்பவங்களும் நடந்தேறின. இதுபோன்ற சீன கடன் செயலிகள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் ஆன்லைன் கேமிங் மூலமாக நடக்கும் மோசடிகளை அமலாக்கத்துறை தீவிர விசாரணைக்கு உட்படுத்திவருகிறது. ஆன்லைன் கேமிங் மோசடி மூலமாக சுமார் ரூ.4,000 கோடி அளவுக்கு மோசடி பரிவர்த்தனைகள் நடந்திருக்கலாம் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது.

அமலாக்கத்துறை மேலும் கூறியிருப்பதாவது, ``சீன நிறுவனங்கள் ஆன்லைன் கேமிங் மூலமாக இந்தியாவில் ரூ.4,000 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் 1,800-க்கும் மேலான கணக்குகள் சந்தேகத்துக்குள்ளாகியிருக்கின்றன. இந்தக் கணக்குகளில் நடந்துள்ள பரிவர்த்தனைகள் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன.

பணம்

லிங்க்யூன் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், டோக்கிபே டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே ரூ.1,146 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளன.

இந்த சீன நிறுவனங்களின் மோசடி வேலைகளில் சில இந்திய இயக்குநர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இந்த மோசடிகளில் ஈடுபடுபவர்கள் அவர்களின் உள்நாட்டு வருவாயைப் பெறுவதற்கும், ஹவாலா மூலம் பண மோசடி செய்வதற்கும் காரணமாக இருக்கின்றனர்.

மோசடி நிறுவனங்கள்

இந்த மோசடி வழக்குகள் தொடர்பாக சீனாவைச் சேர்ந்த யான் ஹாவ், கிரிப்டோ வர்த்தகர் நைசர் சைலேஷ் கோத்தாரி, இந்திய இயக்குநர் தீரஜ் சக்கார், தீபக் நய்யார் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளது.



source https://www.vikatan.com/business/finance/chinese-companies-involved-in-rs-4000-cr-fruad-in-online-games

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக