Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

குடும்ப பிரச்னை; ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த நபர்! - திருப்பூரில் பரபரப்பு

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக திருப்பூரில் தனியே வசித்து வந்ததோடு, சோமனூர் பகுதியில் உள்ள விசைத்தறிக் கூடம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராஜேந்திரன் அங்கிருந்தவர்களிடம், `என் மனைவி நடத்தை சரியில்லை. இதுசம்பந்தமாக தனியார் தொலைக்காட்சியோட நிகழ்ச்சிக்கு போய் என் பிரச்னையை சொன்னேன். இருந்தும் எந்த நியாயமும் கிடைக்கலை. குடும்பத்துல இருக்கவங்க, சொந்தக்காரங்கன்னு யாருமே என் பிரச்னையை கண்டுக்கலை. என் பொண்டாட்டிகிட்ட இருந்த என் மகளை எப்படியாவது காப்பாத்துங்க’ என புலம்பியபடி இருந்துள்ளார்.

தீக்குளித்த ராஜேந்திரன்

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரன் மறைத்து வைத்து எடுத்து வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீ பற்றியதும் அலறிபடி அங்குமிங்கும் ஓடியவர், கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த புல்வெளியில் உருண்டு புரண்டு கதறியது பார்ப்போரை பதற வைத்தது.

உடனே அங்கிருந்தவர்கள் ராஜேந்திரன் உடலில் எரிந்த தீயை அணைத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். `வலி தாங்க முடியலை. குடிக்க தண்ணி கிடைக்குமா. நான் சாப்பிட்டு மூணு நாள் ஆச்சி’ என ராஜேந்திரன் வலியால் துடித்தார். அதனையடுத்து பலத்த தீக்காயத்துடன் இருந்த ராஜேந்திரனை போலீஸார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் பாலியல் தொல்லை புகார் ஒன்றினை முன்வைத்து இதே கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அந்தப் பெண்ணை காப்பாற்றினர். இந்நிலையில், ஒரே வாரத்திற்குள் மீண்டும் ஒருவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/crime/tiruppur-collector-office-attempt-suicide

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக