Ad

வியாழன், 3 பிப்ரவரி, 2022

அதிமுக-வின் ஒரு தரப்பு சுயேச்சையாக போட்டி? - திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் நடப்பதென்ன?!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் ஒன்று திருவெண்ணெய்நல்லூர். இந்த பேரூராட்சியில் 4,040 ஆண் வாக்காளர்கள், 4,105 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 8,145 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இங்கு அ.தி.மு.க கட்சிக்குள்ளாகவே நீண்ட நாளாக நிலவிவந்த சலசலப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 2000-க்கு முன்பு திருவெண்ணெய்நல்லூர் அ.தி.மு.க நகரச் செயலாளராக இருந்து வந்துள்ளார் சரவணக்குமார். கொளப்பாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நகர செயலாளர்களை மாற்றிய போது இவருக்கு பதிலாக கேசவன் என்பவரை நகர செயலாளராக நியமித்தாராம். அதிலிருந்து தி.நல்லூர் அதிமுக நகர செயலாளராக இருந்து வந்த கேசவன் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உயிரிழந்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ குமரகுரு

Also Read: உட்கட்சி குஸ்தியில் திமுக; அதிருப்தி வாக்குகளை குறிவைக்கும் அதிமுக! - திண்டிவனம் களநிலவரம்?

அதிலிருந்து அந்த பகுதிக்கு நகர செயலாளர் நியமனம் செய்யப்படாமல் இருந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும் இப்பகுதியில் நகர செயலாளர் இல்லாமலே தேர்தல் பணிகள் நடந்துள்ளது. இந்நிலையில், அதிமுக-வில் மாவட்ட ஜெ.பேரவை துணைச் செயலாளராக இருந்து வந்த சரவணக்குமாருக்கும், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் காண்டீபன் ஆகிய இருவருக்கும் இடையே நகர செயலாளர் பதவியை பிடிப்பதில் போட்டி இருந்து வந்துள்ளது. இந்நிலையில், நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்னதாக காண்டீபனை தி.நல்லூர் நகர செயலாளராக அறிவித்துள்ளது கட்சி தலைமை. இந்த அறிவிப்பால் அப்செட்டான சரவணக்குமார் தரப்பு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லையாம்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், சரவணக்குமார் தலைமையில் 12 வார்டுகள் வரை அவரின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விழுப்புரம்: நேர்காணலில் மனைவி, மகன்; செஞ்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரா அமைச்சர் மஸ்தான் மகன்?

இது தொடர்பாக சரவணக்குமாரிடம் பேசினோம். "நான், 1996ல் அதிமுக சார்பில் நின்று முதன் முதலில் கவுன்சிலர் ஆகினேன். அதற்கு அப்புறமாக தி.நல்லூர் நகர செயலாளராக இருந்தேன். 2002ல அம்மா, நகர செயலாளராக கேசவன் என்பவரை நியமித்தார்கள். அதில் எனக்கு வருத்தமில்லை. 2001 போல தான் காண்டீபன் அதிமுக உள்ளே வந்தாரு. 2006-ல அவருக்கு 6வது வார்டுல போட்டியிட வாய்ப்பு கிடைச்சது. ஆனா, அவர் நிக்காம வெளியேறி அமைச்சர் பொன்முடி தம்பியுடன் இணைந்து ஒப்பந்த பணிகளை செய்ய ஆரம்பிச்சிட்டாரு. 2011 வரைக்கும் அவர் கட்சி பக்கமே வரல. ஆனா அவருக்கு சொசைட்டி தலைவர் பதவி குடுத்துட்டாங்க. இருந்தாலும், நான் கட்சிக்காக வேலை செய்து கொண்டுதான் வந்தவன் தான்.

அதிமுக தலைமை

எதேர்ச்சையா கேசவன் டிசம்பர் 2019 ல இறந்துட்டாரு. ந.செ பதவி காலியா இருந்தபோது எனக்கு கேட்டதுக்கு 'பாக்கலாம்' அப்படினு மா.செ குமரகுரு அண்ணா சொல்லிட்டாரு. தி.நல்லூர் பகுதி, திருக்கோவிலூர் தொகுதியில் இணைக்கப்பட்ட போது, மோகன் அங்க நின்னு ஜெயிச்சாரு. அம்மா, அவரை அமைச்சராகவும் மா.செ- வாகவும் ஆக்கினாங்க. கட்சிக்கு கட்டுபட்டு அவர்கூட பயணித்தோம். குமரகுரு அண்ணா உளுந்தூர்பேட்டை தொகுதியில இருந்தாரு. அப்புறம் குமரகுரு அண்ணாவையே மா.செ-வாக அறிவிச்ச போது மீண்டும் அவருடன் தான் பயணிச்சோம். அப்படி இருந்தும் இப்போ நகர செயலாளர் பொறுப்பை காண்டீபனுக்கு கொடுத்துட்டாங்க. 'ரெண்டு பேருக்கும் வேண்டாம' புது ஆளுக்கு கொடுங்க என்றோம். ஆனா, கேக்கல. இப்போ, 'கட்சிக்காக இந்த தேர்தலில் வேலை செய்யுங்க. நீங்களே கூட சேர்மனாக இருங்க' என்று கூறி காண்டீபன் நேர்ல வந்து பேசினாரு. நீங்க ந.செ-வாக இருக்கும் போது என்னால வேலை செய்ய முடியாதுனு சொல்லிட்டேன். இப்போ, கட்சி இல்லாம சுயேச்சையாக நிக்கலாம்னு இருக்கோம். மக்கள் முடிவு பண்ணுவாங்க, தங்களுக்கு யார் வேண்டும் என்று.." என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க காண்டீபனை தொடர்பு கொண்டோம். "கட்சி இரு தரப்பாக எல்லாம் பிரியவில்லை. சுயேச்சையாக நிற்கிறேன் என்றால் அவர்கள் கட்சிக்குள் வர மாட்டார்கள். 2003-ல இருந்து நான் மா.செ தரப்பில் தான் இருக்கிறேன். அவங்க தான் இடையில பணம் சம்பாதிக்க முன்னாள் அமைச்சர் மோகன் பக்கம் போனாங்க. கட்சி என்பது எல்லாரையும் பாக்குறதுதான், சம்பாதிச்சுகிட்டு போவதற்கு இல்லை.

Also Read: கடலூர்: `பட்டியல் வெளியாவதற்கு முன்பே மனுத்தாக்கல்’ – தலைமைக்கு 'ஷாக்' கொடுத்த திமுக நகரச் செயலாளர்

எம்.பி தேர்தல் போது கூட அமமுக-வுக்காக ஓட்டு கேட்டாரு அவரு. இப்போது நடக்கவுள்ள தேர்தலுக்கு கட்சிக்காக ஓட்டு கேளுங்கள் என்று நான் அவரிடம் இரண்டு முறை நேர்ல பேசியபோது, "பாஜக கூட்டணில இருக்காங்க. இரட்டையிலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டா மக்கள் போட மாட்டாங்க"னு சொன்னாரு அவர். அவரது சுயநலத்துக்காக தேவை இல்லாமல் பேசுகிறார்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/in-thiruvennainallur-town-panchayat-election-admk-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக