Ad

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

``ஆளுநர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாக செயல்படுகின்றனர்" – கடுகடுக்கும் நாராயணசாமி!

தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் பல்வேறு விவாதங்களை எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `தமிழகத்தில் நீட் மசோதாவை அந்த மாநில கவர்னர் திருப்பி அனுப்பியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறதே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், ``நீட் மசோதாவை தமிழக கவர்னர் திருப்பி அனுப்பி இருப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது.

முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ரவி

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு, சட்டமன்றத்தில் சட்ட வரையறையை ஏகமனதாக, அறுதி பெரும்பான்மையுடன் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் அதை பல மாதங்கள் வைத்திருந்ததே தவறு.

அந்த சட்ட வரையறையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியிருக்க வேண்டும். அப்படி அவர் அனுப்பாதது தவறு. அது மட்டுமல்ல, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் இதுபற்றி கருத்தை வெளியிட்டுள்ளார். துணைநிலை ஆளுநருக்கு சட்ட வரையறையை திருப்பி அனுப்ப அதிகாரம் இருக்கிறது என கூறியிருக்கிறார். மாநிலங்களை பொறுத்தவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திற்கு ஆளுநர் விளக்கம் கேட்கலாமே தவிர, அதை திருப்பி அனுப்பக் கூடாது.

Also Read: நீட் மசோதா விவகாரம்: சட்டவிதிகளை மீறினாரா ஆளுநர் ரவி?

அந்த சட்டத்திற்கு விளக்கத்தை பெற்று அப்படியே குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டியது தான் ஆளுநரின் கடமை. அதை தமிழக ஆளுநர் மீறியிருக்கிறார். குறிப்பாக பா.ஜ.க மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜெண்டுகளாகவும் ஆளுநர்கள் செயல்படுகிறார்கள். அது இப்போது தெளிவாக தெரிகிறது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/puducherry-former-minister-narayanasamy-slams-as-governors-are-acting-as-the-spies-in-central-government

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக