Ad

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

புதுச்சேரி: நாராயணசாமி வீட்டில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கு! – 7 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு

புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இணை அமைச்சராக பதவி வகித்தார். 29 ஜனவரி 2014 அன்று புதுச்சேரி எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு எதிரில் நின்றிருந்த காருக்கு அடியில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. அந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA - National Investigation Agency) தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த திருசெல்வம் (எ) குமார், தங்கராஜ் என்ற தமிழரசன், கவியரசன் (எ) ராஜா, காளைலிங்கம் (எ) காளை, கார்த்திக் (எ) ஆதி ஜீவா, ஜான் மார்ட்டின் (எ) இளந்தனால்ஆகிய 6 பேரை கைது செய்தது.

கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு

இவர்களில் திருச்செல்வம் சேலம் சிறையிலும், தங்கராஜ் சென்னை புழல் சிறையிலும், கவியரசன், காளைலிங்கம், ஜான் மார்ட்டின் உள்ளிட்டவர்கள் கடலூர் சிறையிலும், கார்த்திக் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். கடந்த 7 வருடங்களாக புதுச்சேரி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்கில், 54 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு இருதரப்பின் வாதமும் நிறைவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதற்காக தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதையொட்டி நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மதியம் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் தோன்றிய தலைமை நீதிபதி செல்வநாதன், குற்றம் சுமத்தப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததுடன், மாலை 3 மணிக்கு தீர்ப்பின் விவரம் தெரிவிக்கப்படும் என்றார். அதன்படி 3 மணிக்கு மீண்டும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தோன்றிய தலைமை நீதிபதி, திருசெல்வம், கவியரசன், காளைலிங்கம், கார்த்திக், ஜான் மார்ட்டின் ஆகிய 5 பேருக்கும் தலா 7 ஆண்டுகளும், தங்கராஜுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். அந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. மேலும், திருசெல்வத்திற்கு 3,000/ ரூபாயும், மற்ற 5 பேருக்கு தலா 3,500/- ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞரான திருநாவுக்கரசு என்.ஐ.ஏ தரப்பில் ஆஜரானார்.

அப்புறப்படுத்தப்படும் வெடிகுண்டு

தீர்ப்பையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``என் வீட்டு வாசலில் பைப் வெடிகுண்டு வீசப்பட்டு திரி எரியாததால் அது வெடிக்கவில்லை. இது தொடர்பாக புதுச்சேரி காவல்துறை வழக்கு பதிவு செய்தது. அந்த வெடிகுண்டை வெடித்து பார்த்தபோது அது மிக சக்திவாய்ந்த வெடிகுண்டு என நிரூபனமானது. மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் இந்த வழக்கை எடுத்து விசாரித்து 6 பேரை கைது செய்தார்கள். அவர்கள் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என ஊர்ஜிதம் செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு நடந்து வந்தது. என் வீட்டின் அருகில் கைப்பற்றப்பட்ட பைப் வெடிகுண்டு வெடித்திருந்தால் எங்கள் வீடு மட்டுமல்லாமல் அதற்கு அருகில் உள்ள 10 கட்டடங்கள் அனைத்தும் தரைமட்டமாகும் அளவுக்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்று மத்திய உள்துறை இணை அமைச்சராக இருந்த சுஷில்குமார் ஷிண்டா கூறியிருந்தார்.

அந்த சமயத்தில் எனக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இப்படி தமிழ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத உறுப்பினர்களாக இருந்து திட்டமிட்டு என்னை கொலை செய்வதற்காக இந்த வெடிகுண்டு வீசப்பட்டு இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் நான் வீட்டில் இல்லாததாலும், வெடிகுண்டு வெடிக்காததாலும் மிகப்பெரிய ஆபத்தில் இருந்து நானும், இந்தப் பகுதி மக்களும் தப்பித்தார்கள். என் வீட்டு முன் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு வழக்கில் புதுச்சேரி தலைமை நீதிபதி தீர்ப்பை இன்று வழங்கி இருக்கிறார்.

Also Read: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்தவருக்கு 3 ஆண்டுக்குப் பிறகு ஜாமீன்!

6 பேரும் குற்றவாளிகள் என்று அறிவித்து, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ஒருவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். தீவிரவாதிகள் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும். இந்த நாடு அமைதியாக இருக்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்திலும், புதுச்சேரியிலும் அமைதி நிலவ வேண்டும். தீவிரவாத கும்பலுக்கு இங்கு இடமில்லை என்பதை காட்டுவதற்கு மட்டுமில்லாமல், தீவிரவாதிகளுக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பானது மிகப்பெரிய படிப்பினையாக அமைந்துள்ளது” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/judgement-after-sever-years-over-the-pipe-bomb-in-narayanasamys-home-in-puducherry

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக