கோவாவில் காங்கிரஸ் கட்சி கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போது வெறும் 2 எம்.எம்.எல்.ஏ.க்களுடன் தேர்தலை சந்திக்கிறது. அது போன்ற ஒரு நிலை காங்கிரஸ் கட்சிக்கு மேகாலயாவிலும் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை 17 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் 12 பேர் கடந்த முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியின் பலம் வெறும் 5 ஆக குறைந்துவிட்டது.
ஷில்லாங் மக்களவை உறுப்பினர் வின்சென்ட் என்பவரை காங்கிரஸ் தலைமை கடந்த செப்டம்பர் மாதம் மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முகுல் சங்மா தனது ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார். அனைவரும் சேர்ந்து தான் இம்முடிவை எடுத்ததாகவும், மக்களுக்கு எந்த வகையில் சிறப்பான முறையில் சேவை செய்யலாம் என்பதை ஆய்வு செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேரமுடிவு செய்ததாக முகுல் சங்மா தெரிவித்தார். இது நடந்து சில மாதங்களே ஆன நிலையில் இப்போது எஞ்சியிருக்கும் 5 எம்.எல்.ஏ.க்களும் ஆளும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் சேருவதாக அறிவித்துவிட்டனர்.
அவர்கள் மேகாலயாவில் உள்ள அரசுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி அம்பரீன் லிங்டோ தலைமையில் 5 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்து போட்டு முதல்வர் கே.சங்மாவிடம் கொடுத்துள்ளனர். அதோடு அதன் நகலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அனுப்பி இருக்கின்றனர். இது தொடர்பாக லிங்டோ கூறுகையில், ``அரசின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் 5 பேரும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளோம். மக்களின் நலனை குறிப்பாக எங்களது தொகுதியின் நலனை கருத்தில் கொண்டு அரசுக்கு ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இதனால் மேகாலயாவில் இப்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
Also Read: கோவா தேர்தல் கள நிலவரம்! - சவாலில் பா.ஜ.க... தெம்பில் காங்கிரஸ்... சிதறடிக்கும் ஆம் ஆத்மி...
மேகாலயாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை பெறத் தவறியது. இதனால் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
கோவாவில் ஏற்பட்ட அதே நிலை மேகாலயாவில் ஏற்பட்டுள்ளது. இப்போது கோவாவை எப்படியாவது விட்டுக்கொடுத்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் மிகவும் போராடிக்கொண்டிருக்கிறது.
source https://www.vikatan.com/news/politics/meghalaya-congress-counts-down-from17-to-0-in-three-months
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக