திருச்சி பொன்னேரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெலிக்ஸ். 25 வயது இளைஞரான இவர் திருமண மேடை அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வந்தார். பொன்மலைப்பட்டி அருகேயுள்ள மாவடிக்குளம் ஏ.கே.அவன்யூ பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக டெக்கரேஷன் செய்வதற்காக டாடா ஏஸ் வாகனத்தில் டெக்கரேஷன் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். மண்டபத்தின் அருகே வந்து வண்டியை நிறுத்திய போது, 10 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பெலிக்ஸை சுற்றி வளைத்திருக்கிறது. ஏதோ சம்பவம் நடக்கப் போகிறது என்பதை உணர்ந்த பெலிக்ஸ் அங்கிருந்து தப்பியோட, 10 பேர் கொண்ட அந்த மர்மக் கும்பல் அவரை ஓட ஓட துரத்தி சரமாரியாக வெட்டிச் சாய்த்திருக்கிறது. இதில் முகம் சிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பெலிக்ஸ் இறந்து போனார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் திருவெறும்பூர் போலீஸார், திருச்சி எஸ்.பி சுஜித்குமார், டி.ஐ.ஜி சரவணன் சுந்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும், கொலைச் சம்பவம் எப்படி நடந்தது? யார் இதைச் செய்தார்? என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் பெலிக்ஸ் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், 'திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சக்திவேலுக்கும், கொலையான பெலிக்ஸின் அண்ணன் அலெக்ஸூக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 16-ம் மாலை பொன்மலைப்பட்டி கடைவீதியில் சக்திவேலும், சின்ராஜூம் வந்துள்ளனர். அப்போது சக்திவேல் என நினைத்து அவருடைய தம்பி சின்ராஜை அலெக்ஸ் கோஷ்டி வெட்டிப் படுகொலை செய்தது.
இந்தச் சம்பவத்தால் அலெக்ஸ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இருந்தபோதிலும் தன்னுடைய தம்பியின் கொலைக்கு காரணமான அலெக்ஸை பழி வாங்க வேண்டுமென சக்திவேலும் அவருடைய கூட்டாளிகளும் ஸ்கெட்ச் போட்டு வந்துள்ளனர். அந்த ஸ்கெட்சில் தான் எப்படி என்னுடைய தம்பியை இழந்தேனோ அதேபோல அலெக்ஸூம் அவனுடைய தம்பியை இழக்க வேண்டுமென சக்திவேல் கோஷ்டி ஏதாவது செய்திருக்கும்' என போலீஸார் கருதுகின்றனர்.
உண்மையிலேயே இதுதான் காரணமா அல்லது வேறு ஏதாவது முன்பகையா என திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
source https://www.vikatan.com/news/crime/trichy-revenge-murder-shocked-police-investigating
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக