Ad

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

அதிக சிம்கார்டு வைத்திருப்பவரா நீங்கள்? அரசின் இந்த அறிவிப்பை கவனித்தீர்களா...

‘பேட்டரியே இல்லாத செல்லுக்கு எதுக்கு டூயல் சிம்?’ என்ற நகைச்சுவைக்கு ஏற்ப, ஒரு நபருக்கு எதுக்கு அதிகப்படியான சிம்கார்டுகள் என்ற கேள்வியை எழுப்பி புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது மத்திய அரசு.

ஊருக்கு ஒரு தொலைப்பேசி, தெருவுக்கு ஒரு தொலைப்பேசி, வீட்டிற்கு ஒரு அலைபேசி என்று தொழில்நுட்ப வசதி மக்களிடம் பரவத் தொடங்கி தற்போது ஒரு நபரே இரண்டு மூன்று மொபைல் போன் வைத்திருக்கும் சூழ்நிலை வந்துவிட்டது. அலுவலக பயன்பாட்டிற்கு ஒரு மொபைல், ‘பர்சனல்’ பயன்பாட்டிற்கு ஒரு மொபைல் என மக்கள் தங்கள் வசதிக்கேற்ப மொபைல் போன் பயன்பாட்டை அதிகரித்துவிட்டனர். இது தற்போது ஒரு புதிய சிக்கலை அவர்களுக்குக் கொண்டுவந்துள்ளது.

Sim Card
இந்திய தொலைத்தொடர்புத் துறை புதிய கட்டுப்பாடு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் பெயரில் அதிகபட்சமாக 9 சிம்கார்டுகளை மட்டுமே இனி வைத்துக்கொள்ள முடியும். அதுவும் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளவர்கள் 6 சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி.

ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை வைத்து எத்தனை சிம்கார்டு வேண்டுமானாலும் வாங்கலாம் என்பதால் பொதுமக்கள் பலர் தங்களது பெயரில் நிறைய சிம்கார்டுகளை வாங்குகின்றனர். அதிலும் சிலர் இலவசமாக சிம்கார்டு வாங்கி அதை ஒரு மாதம் மட்டும் இலவசமாகப் பயன்படுத்தி அப்படியே அதனைத் தூக்கி எறிந்து விட்டு இன்னொரு சிம்கார்டு வாங்கி மீண்டும் இன்னொன்று என மாறிக் கொண்டே இருப்பார்கள். இதனைத் தடுக்கும் வகையில் தற்போது இந்த கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

இதன்மூலம் 9-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு முதலில் எச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்படும். அவை அந்த வாடிக்கையாளரால் சரிபார்க்கப்படாத பட்சத்தில், இந்த இணைப்புகளுக்கான வெளிச்செல்லும் (அவுட்கோயிங் கால்) அழைப்புகள் 30 நாட்களுக்குள் நிறுத்தப்படும். பின்னர் உள்வரும் (இன்கமிங் கால்) அழைப்புகள் 45 நாட்களுக்குள் துண்டிக்கப்படும். அதற்குள் பொதுமக்களே தங்களுக்குத் தேவையான சிம்கார்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை டி-ஆக்டிவேட் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Telecom Tower

அதிகப்படியான சிம்கார்டு பயன்பாட்டாளர்களைச் சரிபார்த்து பின்பு அவற்றைக் குறைப்பதன் மூலம் பணமோசடி குற்றங்கள், தொல்லைத் தரும் அழைப்புகள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும் என்ற எண்ணத்தில் இந்தியத் தொலைத் தொடர்பு துறை இந்த கட்டுப்பாட்டை அறிவித்திருக்கிறதாம்.



source https://www.vikatan.com/business/telecom/govt-makes-big-decision-on-keeping-multiple-sim-cards

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக