Ad

சனி, 4 டிசம்பர், 2021

`சம்பளப் பாக்கியை எப்போது தரப் போகிறீர்கள் இம்ரான் கான்?!' - சர்ச்சையைக் கிளப்பிய ட்விட்டர் பதிவு

கொரோனா வைரஸ் பெருந்தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டம் காணச் செய்து விட்டது. கட்டுக்குள் அடங்காத நோய் பரவலால் உயிரிழப்புகள், பொருளாதார சரிவுகள் என கொரோனாவால் உலக நாடுகள் சந்தித்த இழப்புகள் ஏராளம். கடந்த 2 வருடங்களாக அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸின் தாக்கம் சற்றே தணிந்து விட்டது என உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டது தான் தாமதம், டெல்டாவை விடவும் வீரியமிக்க கொரோனாவின் மற்றொரு வேரியன்ட்டான 'ஒமிக்ரான்' தற்போது அச்சுறுத்தத் தொடங்கி விட்டது.

அந்த வகையில், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால், அந்த நாடு கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பண வீக்கம், உலக நாடுகளிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை என பாகிஸ்தான் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான்

இந்த நிலையில், பாகிஸ்தானின் நிதி நிலைமையை அந்த நாட்டின் தூதரக அதிகாரிகள் ஒற்றை ட்வீட்டின் மூலமாக வெளி உலகுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று, செர்பியாவிலிருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் பதிவிடப்படுகிறது.

அந்த ட்வீட்டில், ``முன் எப்போதும் காணாத பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றால் தவித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு, தாங்கள் எப்போது எங்களின் மூன்று மாத சம்பளப் பாக்கியைத் தரப் போகிறீர்கள். ஸ்கூல் ஃபீஸ் கட்டாததால் எங்கள் குழந்தைகள் பள்ளியைவிட்டே வெளியேற்றப்பட்டுவிட்டனர். இது தான் உங்கள் நயா(புதிய) பாகிஸ்தானா?" தூதரக அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை குறிப்பிட்டு, மிகவும் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தனர். தூதரக அதிகாரிகளின் இந்த ட்வீட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஊழியர்களுக்குச் சம்பளம் கூட அளிக்க முடியாத நிலைமையில் பாகிஸ்தான் அரசு இருக்கிறதா எனப் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கினர். அதையடுத்து, அந்த ட்வீட் அடுத்த ஒரு சில மணி நேரங்களில் நீக்கப்பட்டது.

ட்விட்டர் பதிவு

ஆனால், இந்த ட்விட்டர் பதிவு தொடர்பாகப் பாகிஸ்தான் அரசு தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மேலும், ட்விட்டரில் பதிவிட்ட அந்த தூதரக ஊழியர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``என்னை மன்னித்து விடுங்கள் இம்ரான் கான் அவர்களே! இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், செர்பியாவில் செயல்படும் தங்கள் தூதரகத்தின் ட்விட்டர் பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த நாட்டின் பிரதமரை இம்ரான் கானின் ட்விட்டர் பக்கத்தை நிர்வகித்து வரும் அர்ஸ்லான் ரஷீத் என்பவரும் தூதரக ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்தார்.

இம்ரான் கான்

இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் தலைவர் ஷபாஸ் ஷெரீப், ``வேலைவாய்ப்பின்மை, பண வீக்கம் மற்றும் பொருளாதார சீரழிவின் காரணமாக இந்த நாடு இவ்வளவு பெரிய விலையைத் தந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏழை மக்கள் மட்டுமல்ல, ஓரளவு நல்ல வேலையில் இருப்பவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

Also Read: `பின் லேடனை தியாகி எனப் புகழ்ந்த இம்ரான் கான்!' - வாய்தவறிக் கூறிவிட்டதாக பாகிஸ்தான் விளக்கம்



source https://www.vikatan.com/news/international/tweets-from-pak-embassy-in-serbia-criticise-imran-khan-allege-non-payment-of-salary

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக