Ad

சனி, 4 டிசம்பர், 2021

` `மாநாடு' டைம் லூப், `நண்பன்' தேஜாவு; இருக்கு, ஆனா இல்ல!' - இதை எப்படி புரிந்துகொள்வது?

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் Time loop வகைமையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

உலக அளவில் டைம் லூப் கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் டைம் லூப் என்றால் என்ன என்பது குறித்தும், புதிதாகக் காணும் ஒன்று நமக்கு ஏற்கெனவே பரிட்சயப்பட்டதாகத் தோன்றுகிற `தேஜாவு' (Déjà vu) குறித்தும் இக்கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

டைம் லூப் என்பது உண்மையல்ல... ஃபேன்டஸியே!

``டைம் லூப் என்பது ஒரு வகையான ஃபேன்டஸிதானே தவிர அதற்கு எந்த அறிவியல்பூர்வமான ஆதாரமும், காரணமும் இல்லை” என்கிறார் பெங்களூருவில் வசிக்கும் திரைக்கதை எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ்.

கருந்தேள் ராஜேஷ்

``டைம் லூப் என்பது கதை அல்லது சினிமாவின் மையக் கதாப்பாத்திரம் கால வளையத்துக்குள் சிக்கிக்கொள்வதுதான். பெரும்பாலும் அந்தக் கால எல்லை ஒரு நாளாகத்தான் இருக்கும். ஒரே நாள் திரும்பத் திரும்ப நிகழ்வதுதான் டைம் லூப். அந்த நாள் முடிந்த பிறகு மீண்டும் அதே நாள் தொடங்கும். தான் ஏற்கெனவே எதிர்கொண்ட சம்பவங்களை மீண்டும் எதிர்கொள்ள நேரிடும். இதுதான் டைம் லூப் என்கிறை வகைமையின் சாரம். அதை நாம் எவ்வளவு சுவாரஸ்யப்படுத்துகிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது.

டைம் லூப் திரைப்படங்கள்...

1993-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான `கிரவுண்ட்ஹாக் டே' (Groundhog Day) திரைப்படம்தான் டைம் லூப் வகைமையில் வெளிவந்த முதல் திரைப்படம் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 1947-ம் ஆண்டே `Repeat Performance' என்கிற திரைப்படம் டைம் லூப் கான்செப்ட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உலக அளவில், டைம் லூப் மீதான பெரும் கவனத்தை ஈர்த்த திரைப்படம் என்று வேண்டுமானால் `கிரவுண்ட்ஹாக் டே' திரைப்படம்தான்.

அத்திரைப்படத்தில் ஒரு பத்திரிகையாளர் ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்வதற்காகச் செல்வார். அது முடிந்து திரும்பி அவர் தூங்கி எழும்போது மீண்டும் அதே நாளில் எழுவார். முதலில் அது, புதிதான ஒன்று பரிட்சயப்பட்டது போன்று தோன்றும் `தேஜாவு' என்றுதான் நினைப்பார். ஆனால் அந்நாள் திரும்பத் திரும்ப நிகழும்போதுதான் அவர் தான் ஒரு கால வளையத்துக்குள் சிக்கிக் கொண்டிருப்பதை உணர்வார். ஒரே நாளில் திரும்பத் திரும்ப வாழ்ந்து சலிப்புத்தட்ட, அவர் எதிர்ப்படும் மனிதர்களையெல்லாம் கொலை செய்வார். மலை மீதிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வார். என்ன செய்தாலும் அந்நாள் மீண்டும் தொடங்கத்தான் போகிறது, தான் கொன்றவர்கள் மீண்டும் உயிருடன் வரத்தான் போகிறார்கள் என்பதனால்.

டாம் க்ரூஸ் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான `எட்ஜ் அஃப் டுமாரோ' (Edge of Tomorrow) திரைப்படமும் டைம் லூப் வகைமையைச் சார்ந்ததுதான். புதிதாக ஓர் ஊருக்குச் சென்று இறங்கும் நாயகன் அந்த ஊரில் ஏலியன் தாக்குதலில் இறந்து விடுவான். அந்த நாள் மீண்டும் தொடங்கும், மீண்டும் ஒரு ஏலியனிடமிருந்து தப்பித்து இன்னொரு ஏலியனிடம் சிக்கி இறப்பான். கால வளையத்துக்குள் தான் சிக்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து, அதை கதாநாயகர்கள் எப்படி கையாளப்போகிறார்கள் என்பதுதான் இவ்வகைமை திரைக்கதைகளின் சவால்.

Wormhole

Also Read: மாநாடு - சினிமா விமர்சனம்

கால வளையம்(Time Loop), மற்றும் காலப் பயணம் (Time Machine Travel):

காலப் பயணத்துக்கான (Time Machine Travel) அறிவியல் சாத்தியம் இருக்கிறதா என்பதையும், Wormhole-ஐ உருவாக்கி அதன் வழியாக காலப் பயணத்தை சாத்தியப்படுத்த முடியுமா என்பதையும் அறிந்துகொள்ள இன்றைய அறிவியல் அதை நோக்கி வேலை செய்து கொண்டிருக்கிறது. காலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ஒரு காரணம் தேவை. காலப் பயணம் செய்யும் கருவி ஒருவருக்குக் கிடைக்கும்போதுதான் அது சாத்தியப்படும்.

ஆனால் கால வளையம் (Time Loop) திரைப்படங்களைப் பொறுத்தவரை அது ஏன் நிகழ வேண்டும் என்பதற்கான எந்தக் காரணங்களும் தேவையில்லை. ஏனென்றால் அது ஒரு ஃபேன்டஸி.

Groundhog Day திரைப்படத்தை எடுத்துக் கொண்டால், ஏன் அவன் அந்த டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறான் என்கிற காரணம் காட்டப்பட்டிருக்காது. அதே போல் டைம் லூப் படங்களைப் பொறுத்தவரை அந்தக் கால வளையத்தில் இருந்து மையப் பாத்திரம் தானாகவே விடுபட்டு அடுத்த நாளுக்கு வந்துவிடும். `மாநாடு' போன்ற சில திரைப்படங்களில் டைம் லூப்க்கான நோக்கம் காட்டப்பட்டிருக்கிறது. அது திரைக்கதையின் தேவையைப் பொறுத்ததுதானே தவிர கால வளையத்துக்குள் சிக்கிக் கொள்வதென்கிற ஃபேன்டஸிக்கு காரண காரியங்களே தேவை இல்லை” என்றவர் ஹாலிவுட்டில் மட்டுமல்ல உலகளவில் இந்த வகைமையில் பல திரைப்படங்கள் வந்திருப்பதைக் குறிப்பிடுகிறார்.

மகாபாரதம், சக்கரவியூகம், அபிமன்யூ... மற்றும் டைம் லூப்!

``ஹாலிவுட்டில்தான் இவ்வகைமையில் பல திரைப்படங்கள் வந்திருக்கிறது என்றாலும் Time Renegades, A Day போன்ற கொரியத் திரைப்படங்கள் டைம் லூப்பை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியிருக்கின்றன. இந்திய அளவில் வெளியான டைம் லூப் வகைமைத் திரைப்படங்களிலேயே சிறந்த முயற்சி என்று லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த `சுருளி’ திரைப்படத்தைச் சொல்வேன். அத்திரைப்படத்தில் ஒரே நிகழ்வு திரும்பத் திரும்பக் காண்பிக்கப்பட்டிருக்காது. நேர்கோட்டில் செல்லும் திரைக்கதையின் துணுக்குகளைக் கொண்டு இது திரும்பத் திரும்ப நிகழும் சம்பவம் என்பது பார்வையாளனுக்குக் கடத்தப்பட்டிருக்கும். டைம் லூப் படங்களிலேயே இது புது வகையான முயற்சி என்பதோடு தரமான திரைப்படம் என்று அப்படத்தினைக் கூறலாம்.

டைம் லூப் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், மகாபாரதக் கதையில் சக்கரவியூகத்துக்குள் செல்லும் அபிமன்யு திரும்ப வரும் வழி தெரியாமல் உள்ளேயே மாட்டிக் கொள்வான். மீண்டும் மீண்டும் அவன் சக்கரவியூகங்களை உடைத்து உள்ளே போய்க்கொண்டிருந்தானென்றால் அதுதான் டைம் லூப் என்கிற கால வளையம்” என்கிறார் கருந்தேள் ராஜேஷ்.

Psychology (representational image)

Also Read: Covid Questions: கொரோனாவிலிருந்து குணமான பிறகும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள்; நிஜமா, பிரமையா?

டைம் லூப் கதையைப் பொறுத்தவரை, நடந்த ஒன்று மீண்டும் நடக்கும்போது முதலில் அது 'தேஜாவு' என்று கருதப்படுகிறது. `தேஜாவு' என்பது புதிதாக நமக்கு நடக்கும் சம்பவம்/அனுபவம் ஏற்கெனவே நடந்தது போன்று தோன்றும் உளவியல் கூறு. அந்த `தேஜாவு' பற்றி விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் யாமினி…

`தேஜாவு' என்றால் என்ன?

``புதிதாக நடக்கும் ஓரு சம்பவம் ஏற்கெனவே நடந்தாக நாம் கருதிக் கொள்வதைத்தான் உளவியலில் `தேஜாவு' என்று கூறுகிறோம். இதனை மையப்படுத்தி உலக அளவில் நிறைய திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. `தேஜாவு' என்றாலே அதை உளவியல் ரீதியான பிரச்னை என்று நாம் நினைத்துக்கொள்ளத் தேவையில்லை. எந்த உளவியல் பிரச்னையும் இல்லாத இயல்பான மனிதர்களுக்குக் கூட எப்போதாவது, அல்லது வாழ்க்கையில் ஒன்றிரண்டு முறையாவது இந்த தேஜாவு ஏற்படும். அதனால் இதுகுறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை; இது இயல்பானதுதான்.

`தேஜாவு' எப்போது பிரச்னை ஆகும்?

அதுவே நரம்பியல் பிரச்னை கொண்டவர்களுக்கு ஏற்படும் `தேஜாவு' என்பது, சிகிச்சைக்குட்படுத்த வேண்டிய இயல்புக்கு மீறிய பிரச்னை. Epilepsy என்று சொல்லப்படக்கூடிய வலிப்பு நோய்களில், குறிப்பாக Temporal lobe epilepsy பிரச்னை கொண்டவர்களுக்கு வலிப்பு வரும் முன் மூளையில் நிகழும் அதீத மின் பாய்ச்சலினால் இந்த `தேஜாவு' ஏற்படும். Migraine என்கிற ஒற்றைத்தலைவலி பிரச்னை கொண்டவர்களுக்கும் தலைவலி வரும் முன் `தேஜாவு' வரலாம். நரம்பியல் தொடர்பான பிரச்னைகளின் விளைவாக `தேஜாவு' ஏற்படுவது மிகவும் குறைவானதுதான் என்பதால் அது குறித்து அச்சப்படத் தேவையில்லை. `தேஜாவு' வந்தாலே பிரச்னை என்றில்லை. திரும்பத் திரும்ப வந்தால்தான் பிரச்னை.

யாமினி

இயல்பான மனிதர்களுக்கு ஏன் `தேஜாவு' ஏற்படுகிறது என்பது குறித்த ஆராய்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இது நினைவுத்திறன் சார்ந்த பகுதியில் ஏற்படும் விளைவால் நிகழ்வது என்று சொல்லப்பட்டு வந்தது. இறுதியாக நடத்தப்பட்ட ஆய்வில் மூளையில் முடிவுகளை எடுக்கும் பகுதியில் இருந்துதான் இந்த `தேஜாவு' வெளிப்படுகிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. நம் உடலின் இயக்கம் சரியாக இருக்கிறதா என்று மூளை பரிசோதிக்கும் இடத்தில் ஏற்படும் தற்காலிக மாற்றத்தினாலேயே இந்த `தேஜாவு' ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவேதான் இப்பிரச்னை இளைஞர்களுக்கு அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மிக அரிதாக எற்படும் `தேஜாவு' அனுபவம், பிரச்னையில்லை. நரம்பியல் பிரச்னை தொடர்பாக வரும் `தேஜாவு'க்கென்று தனியே சிகிச்சை இல்லை. அந்த நரம்பு பிரச்னையை குணப்படுத்தினாலே `தேஜாவு' ஏற்படுவதும் நின்று விடும்” என்கிறார் யாமினி.

- ஜிப்ஸி



source https://www.vikatan.com/oddities/miscellaneous/the-difference-between-dejavu-and-maanaadu-time-loop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக