பொதுவாகவே மச்சினர்களை மாப்பிள்ளைகளுக்குப் பிடிப்பதில்லை. அதிலும் சேதுராமன் போல பொதுச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்களை மாப்பிள்ளைகள் துச்சமாக நினைப்பார்கள். சித்தார்த் மாதிரியான மாப்பிள்ளைகள் அவர்களை எப்படி நடத்துவார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் சேதுராமனிடம் வந்த சித்தார்த், ``நீங்க என்ன வேலை செய்யறீங்க? உங்க இயலாமையைச் சமூகத்தின் மீது சுமத்திட்டு, வெட்டியா பேசிட்டிருக்கீங்க. முதல்ல உழைச்சு, குடும்பத்தைக் காப்பாத்துங்க” என்கிறான்.
அடுத்து, ``எல்லோரும் பணத்துக்காக வேலை செய்தால், சமூகத்துக்காக வேலை செய்ய ஆட்கள் வேண்டாமா?” என்று சேதுராமன் கேட்பதில் நியாயம் இருக்கிறது!
பெரும்பாலான மனிதர்கள் பொருளாதாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்போது, சொற்ப அளவில் இருக்கும் சேதுராமனைப் போன்றவர்கள்தாம் பொதுப் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்கிறார்கள். எளியவர்கள் மீது அக்கறை கொள்கிறார்கள். அவர்களை இந்தச் சமூகம் உயரிய இடத்தில் வைத்துப் போற்ற வேண்டும். அவர்களை அரவணைக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் தங்களுக்காகப் போராடுவதில்லை. நம் அனைவருக்காகவும்தானே போராடுகிறார்கள்? தன்னலம் இல்லாத அவர்களின் சேவையை ஏனோ இந்தச் சமூகம் கண்டுகொள்வதில்லை.
கெளசல்யாவும் சித்தார்த்தும் சேதுராமன் மீண்டும் இந்த வீட்டுப் பக்கம் வராதவாறு பேசிவிட்டுச் செல்கிறார்கள். கெளசல்யாவின் கணவர், `உன்னை ஸ்கெட்ச் போட்டு என் பொண்டாட்டி கழட்டி விடுறா. கவனமா இரு சேது’ என்கிறார். இந்த வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் இவர்தான். ஆனால், எதையும் அழுத்தமாக எதிர்க்க அவரிடம் துணிச்சல் இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.
அவர்கள் பேசியதற்கு அபி மன்னிப்பு கேட்கிறாள். பெரியப்பா குடும்பமும் பின்னாடியே கெளசல்யாவின் குடும்பமும் ஊருக்குக் கிளம்புகின்றன.
ஊரில் புவனாவும் சேதுராமனும் பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொள்கிறார்கள். சேதுராமனின் சகோதரி புவனா. வீட்டை எதிர்த்து, காதல் திருமணம் செய்துகொண்டவர். நல்லபடியாக செட்டிலாகி பெங்களூரில் வசிக்கிறார். அபியைப் பற்றி விசாரிக்கிறார்.
``படிச்ச பெண்ணைக் கல்யாணம் பண்ணி, வீட்டில் உட்கார வச்சிருச்சு நம்ம குடும்பம். உன்னோட காதல் திருமணத்தால ஏற்பட்ட கோபம், அபி மேல விழுந்துருச்சு. இதுக்காக நீ ஃபீல் பண்ணாதே. உன் பார்ட்னரைத் தேர்ந்தெடுக்க உனக்கு உரிமை இருக்கு” என்கிறார் சேதுராமன்.
பழைய நினைவுகளுடன் தாய் வீட்டுக்கு வருகிறார் புவனா. அங்கே அவரின் அப்பா ருத்ரதாண்டவம் ஆடுகிறார். புவனாவின் அம்மாவால் கணவரை எதிர்த்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அபியின் அப்பா புவனாவுக்கு ஆதரவுக் கரம் நீட்ட, அவரையும் தடுக்கிறார் புவனாவின் அப்பா. சொத்துக்காக வந்திருக்கிறார் என்று புவனாவை அசிங்கப்படுத்தி, சொத்து முழுவதையும் அபிக்கு எழுதிக் கொடுக்கப் போவதாகவும் புவனா கையெழுத்துப் போட்டுவிட்டுச் செல்லும்படியும் கூறுகிறார்.
இனி என்ன நடக்கும்?
இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!
- எஸ்.சங்கீதா
source https://cinema.vikatan.com/web-series/vallamai-tharayo-daily-digital-series-readers-review-for-episode-22
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக