பிக்பாஸ் வீட்டில் நேற்று நிகழ்ந்த சம்பவங்கள் இன்று இடம் வலமாக மாறி இடம்பெற்றன. ஆம்... நேற்று ஆரிக்கு நிகழ்ந்த அதே விஷயங்கள் இன்று பாலாஜிக்கு நிகழ்ந்தன. ஏறத்தாழ ஒட்டுமொத்த வீடே பாலாஜிக்கு எதிராக நின்று வாக்குவாதம் செய்தது. "உன் கிட்ட பர்சனலா சொன்ன ஒரு விஷயத்தை அங்க போய் சொல்லுவியா?” என்பது போல் கேபியிடம் வருத்தப்பட்டார் பாலாஜி. நேற்று ஆரிக்கு இவர் செய்த துரோக அம்பு பூமராங் போல இன்று இவருக்கே திரும்பி வந்தது. ‘வாழ்க்கை ஒரு வட்டம்டா’ என்று விஜய்ணா சொன்னது இதைத்தான். அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.
எனக்கு ஒரு விஷயம்தான் புரியவில்லை. பிக்பாஸ் விளையாட்டு என்பது அடிப்படையில் மனித உணர்வுகளை வைத்து ஆடப்படும் சூதாட்டம். இந்த விளையாட்டின் அடிப்படை தெரிந்தவர்களுக்கு கூட இந்த விஷயம் தெரியும். எனில் இதில் கலந்து கொள்கிறவர்கள் நிச்சயம் ஏராளமாக ஹோம்ஒர்க் செய்திருப்பார்கள். (நாமினேஷன்னா என்னங்கய்யா?! என்று கேட்ட கஞ்சா கருப்பு போன்ற வெள்ளந்திகள் விதிவிலக்காக இருக்கலாம்).
பொதுவாக இதர விளையாட்டுப் போட்டிகளில் உடல் திறமையும் மூளை திறமையும் பயன்படுத்தப்படும். ஆட்டம் முடிந்ததும் ஒருவரையொருவர் கைகுலுக்கிக் கொண்டு பிரிந்து சென்று விடலாம். ஆனால் பிக்பாஸ் விளையாட்டு பிரத்யேகமானது. அங்கு மனித உணர்வுகளுக்கிடையே மோதல் ஏற்படும்படியான நெருக்கடியும் அழுத்தமும் தரப்படும். அதற்கேற்ப சூழல் உருவாக்கப்படும். ஆட்டம் முடிந்தும் கூட பிரிந்து செல்ல முடியாது. அங்கேதான் கூடி வாழ்ந்தாக வேண்டும்.
இவை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு நிச்சயம் தெரியும்; தெரிந்திருக்க வேண்டும். எனில் நெருக்கடி தரும் டாஸ்க்குகள் முடிந்த பிறகு – பிக்பாஸின் தந்திரத்தை உணர்ந்து – இவர்கள் இயல்பு சூழலுக்கு திரும்பலாம். ஆனால் டாஸ்க்கில் நிகழ்ந்த உணர்வு மோதலை வீட்டிற்குள்ளும் சென்று தொடர்கிறார்கள். பிக்பாஸின் சூழ்ச்சிக்கு எளிதில் இரையாகிறார்கள்.
இவர்கள் சற்று புத்திசாலித்தனமாக விளையாடினால் பிக்பாஸிற்கே சற்று தண்ணி காட்டலாம். வேடன் விரித்த வலையை ஒன்றாக இழுத்து பறந்து தப்பித்த புறாக்களின் கதை நினைவிருக்கிறதா? அது போல. அவை தனித்தனியாக இருந்த போது தப்பிக்க முடியவில்லை.
முதலில் சுரேஷூம் இப்போது பாலாஜியும் ஓரளவிற்கு அந்தப் பாணியைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் பெரும்பான்மையான நபர்கள் இப்படி இல்லை. உணர்ச்சிகளுக்கு எளிதில் அடிமையாகிறார்கள். புத்திசாலியான ஆரி கூட சமயத்தில் இதற்கு இரையாகி விடுகிறார். பாலாஜியின் தூண்டுதலின் பேரில் நேற்று அவர் மாட்டிக் கொண்டது சரியான உதாரணம்.
ஓகே... நாம் என்னதான் வெளியில் நின்று லாஜிக் பேசினாலும் ஒரு நெருக்கடியான சூழலுக்குள் ஸ்மார்ட்டாக இருக்கும் கெத்து என்பது சில பேரால்தான் முடிகிறது. இந்த நிதானமும் சாமர்த்தியமும் பல பேருக்கு கைகூடாது. ‘இதோ இவரிடம் இப்போது வாக்குவாதம் செய்யப் போகிறோம்.. நாம் உணர்ச்சிக்கு அடிமையாகி கோபப்படாமல் வெளியே வர வேண்டும்’ என்றுதான் முன்பே நன்கு யோசித்து திட்டமிட்டுத்தான் செல்வோம். ஆனால் அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுவோம். அதனால் நமக்குத்தான் இழப்பு ஏற்படும். இப்படியாக பிக்பாஸ் வீட்டில் நிகழும் சம்பவங்களின் மூலம் நமக்கும் படிப்பினை இருக்கிறது. (ஆரம்பிச்சுட்டான்யா!).
51-ம் நாளில் நடந்தது என்ன?
அதிர்ஷ்ட அட்டையை இழந்த நிஷாவின் மீது ரமேஷ் கோபத்தைக் காட்டினார். '‘உனக்காகத்தானே விட்டுக் கொடுத்தேன்'’ என்று சோமுவும் வருத்தப்பட்டார். பிறகு வந்த ரியோவும் அர்ச்சனாவும் அதையே செய்தார்கள்.
நிஷாவிற்கு அட்டையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஒருபக்கம் வலுவாக இருந்தது. ‘மக்கள் மீது நம்பிக்கையுள்ளது’ என்று அவர் சொன்னதெல்லாம் வாய்ப்பேச்சில் மட்டுமே. உள்ளுக்குள் அவருக்குள் உதறல் இருக்கிறது. என்றாலும் அனிதாவின் தூண்டுதலுக்கு எளிதில் இரையாகி ஏமாந்தார். நிஷாவிற்காக ரமேஷூம் சோமுவும் செய்த தியாகம் வீணாகி விட்டது. குரங்கு அப்பத்தைப் பங்கு போட்ட கதையாகி விட்டது.
‘வாயை மூடு வேலு’ என்கிற அதே டோனில் ‘அன்பு மட்டும்தான் ஜெயிக்கும்... நம்பு’ என்று அர்ச்சனா ஆவேசமான குரலில் நிஷாவிற்கு ஆறுதல் சொன்ன போது அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. ‘அன்பு மட்டும்தான் அநாதை’ என்று கடந்த சீசனில் சொன்ன முகேன், டைட்டிலை ஜெயித்ததால் அர்ச்சனாவும் அதே ரூட்டை பின்பற்ற முயல்கிறார் போலிருக்கிறது.
என்னமோ தமிழ்நாட்டிலேயே இவர்தான் ‘அன்பு’ என்கிற உணர்ச்சிக்கு ஹோல்சேல் ஏஜென்ட் போல ‘அன்பு.. அன்பு’ என்று கூவும் போது அந்த வார்த்தையின் மீதே நமக்கு வெறுப்பு வந்து விடும் போல. இதே நாளில் பிறகு நடந்த சம்பவத்தில், பாலாஜியிடமும் ‘அன்பாலதான் உன்னை அடிப்பேன்’ என்று கூவியது, வேறு ஏதோ ஒன்றால் அடிப்பேன் என்பது போல்தான் ஒலித்தது. அன்பு என்கிற வார்த்தையை இத்தனை ஆங்காரமாக சொல்ல அர்ச்சனாவால்தான் முடியும்.
‘"இங்க எல்லாம் பொய்யா இருக்குடா.. எப்படி இருந்தாலும் குத்தம் சொல்றாய்ங்கடா.. உங்க மேல நம்பிக்கையில்லையா.. ன்னு திருப்பித் திருப்பி கேட்கறாங்க.. நான் உனக்காக விளையாடறேன்னு கேள்வி கேட்கறாங்க" என்று ரியோவிடம் கதறி அழுத நிஷாவைப் பார்க்க ஒரு பக்கம் பரிதாபமாகவே இருந்தது. "என்னிடமிருந்து விலகி இரு. பாசம் காட்டாதே. மக்கள் அதை குறையாக சொல்கிறார்கள்" என்று ரியோவே பலமுறை ஆலோசனை சொல்லியும் அவருக்குப் புரியவில்லை. (இது ரத்தபூமி நிஷாக்கா... அப்படித்தான் இருக்கும்.)
'‘ஏங்க்கா அழறீங்க... நீங்கதானே எனக்கு விட்டுக் கொடுத்தீங்க?” என்று அனிதா சென்று விசாரிக்கச் சென்ற போது அழுத முகத்தை துடைத்து கெத்தாக மாற்றிக் கொண்ட நிஷா ‘மக்கள் மேல நம்பிக்கையிருக்கு’ என்கிற புராணத்தைப் பாடினார். அது இந்த வார இறுதியில் தெரிந்துவிடும். அனிதா நிஷாவிடம் பேச வந்தவுடன் அர்ச்சனாவும் சோமுவும் வேறுபக்கம் திரும்பி சிரித்துப் பேசினார்கள். எனில் சோமு அனிதாவுடனான நட்பை ஏறத்தாழ முறித்துக் கொண்டார் என்றுதான் தோன்றுகிறது அல்லது விவஸ்தையில்லாமல் மறுபடியும் சமாதானத்திற்கு வரக்கூடும்.
‘நிஷாக்கா வருத்தமா இருக்காங்க... நான் வேணுமின்னா திருப்பிக் கொடுத்துர்றேன் பிக்பாஸ்’ என்று சம்பிரதாயத்திற்கு கேமரா முன்பு வேண்டிக் கொண்டிருந்தார் அனிதா. தனிப்பட்ட நட்பு வேறு... விளையாட்டு வேறு... என்பதை இவர்கள் துல்லியமாக வரையறுத்துக் கொண்டால் இத்தனை சிணுங்கல்களும் டிராமாக்களும் இருக்கவே இருக்காது.
“நீங்க சனத்திற்கு விட்டுக் கொடுத்திருக்கணும்" என்று அனிதாவிடம் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. (பாசம். பாசம்). பாலாஜியுடன் நெருங்கியதில் இருந்து அனிதாவும் இப்போது ஒரு மினிராஜதந்திரியாகி விட்டார். “ஆக்சுவலி என் ஸ்ட்ராட்டஜி என்னன்னா... முதல்ல என்னைக் காப்பாத்திக்கணும்.. சாமை இந்த வாரம் நாமினேஷன்ல வரவைக்கணும்" என்று அனிதா விளக்கம் தந்து கொண்டிருக்க ‘அடேங்கப்பா...’ என்று பாலாஜியை மனதிற்குள் வியந்திருக்கலாம்.
ஆரி, சாமை நாமினேட் செய்யும் போது சாமின் தாய்மையைக் குறித்து ஏதாவது பேசியிருப்பார் போலிருக்கிறது. ‘அவன் எப்படி என்னை கொஸ்டின் பண்ணலாம்?’ என்று சம்யுக்தா அர்ச்சனாவிடம் கண்கலங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இதே சம்யுக்தா ‘வளர்ப்பு’ என்கிற வார்த்தையை சனத்திடம் தன்னிச்சையாக சொல்லி மறுநாளில் மாட்டிக் கொண்டார்.
இடையில் ஒரு விஷயம். ஆண், பெண் நட்பு – பெண்களின் திருமணத்திற்குப் பிறகும் – இயல்பாகத் தொடர்வது பாலின சமத்துவதற்கான அறிகுறி என்று முன்பு எழுதியிருந்தேன். சோமிற்கும் அனிதாவிற்கும் இடையிலான நட்பைக் குறித்து அவ்வாறு சொல்லியிருந்தேன். ஆனால் சோமுவும் ரமேஷூம் பெண் போட்டியாளர்களை மிகச்சரளமாக அடிக்கடி ‘டி’ போட்டு பேசுவது நெருடலாக இருக்கிறது. இளம் பார்வையாளர்களுக்கு இது தவறான முன்னுதாரணமாக ஆகி விடக்கூடாது.
**
51-ம் நாள் விடிந்தது. எனக்கு மிகவும் பிடித்த ‘Chennai city gangster’ என்கிற ரகளையான பாடல் ஒலித்தது. மக்கள் சண்டை போடும் மூடில் இருப்பதால் அதை அப்படியே மெயின்டெய்ன் பண்ணுவோம் என்கிற உத்தேசத்தில் இந்த வார லக்ஷுரி பட்ஜெட் டாஸ்க்கை விவகாரமான வடிவத்தில் அறிவித்தார் பிக்பாஸ்.
பிக்பாஸ் கால் சென்டர் என்பதுதான் அந்த டாஸ்க். ‘Why blood... Same blood’ என்பது அதன் தலைப்பு. வீடு இரண்டு அணிகளாகப் பிரிந்து கால் சென்டர் ஊழியர்களாகவும், திருப்தியடையாத வாடிக்கையாளர்களாகவும் மாறும். வாடிக்கையாளர்கள், கால்சென்டர் ஊழியர்களை வரைமுறையில்லாமல் கன்னாபின்னாவென்று என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கலாமாம். ஊழியர்கள் அதற்கு நிதானமாகப் பதில் சொல்ல வேண்டும்.
ஊழியர் தாமாகவே இணைப்பைத் துண்டிக்கும்படி வாடிக்கையாளர் கேள்விகள் கேட்டால் அவர் ஜெயித்து விட்டார் என்று பொருள். அது இயலாத பட்சத்தில் அவர் இந்த வார எவிகஷன் பிராசஸ் பட்டியலில் தானாக இடம் பெற்று விடுவார். எனவே போட்டியாளர்கள் இந்த நெருக்கடி காரணமாக உக்கிரமான கேள்விகளை கேட்பார்கள் என்பது பிக்பாஸின் பிளான். போட்டியாளர்களின் இடையே உள்ள பழைய விரோத குப்பைகளை மீண்டும் கிளறி கொளுத்தி விட்டு அதில் குளிர்காயலாம் என்பதும் பிக்பாஸின் கணக்கு. அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
ஊழியர்கள் பொறுமையாகப் பதில் சொல்லி விட்டு தங்களின் ஸ்டார் ரேட்டிங்கை கேட்க வேண்டும். அதற்கேற்ப அவர்களுக்கு தகுதிகள் கிடைக்கும்.
இந்த இடத்தில் உண்மையான கால் சென்டர் ஊழியர்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும். மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் அவர்கள் என்று தோன்றுகிறது. வாடிக்கையாளர்கள் கொட்டும் அத்தனை ஆத்திரங்களையும் உணர்ச்சிகளையும் மென்று முழுங்கி இயந்திரக்குரலில் நிதானமாக பதில் சொல்ல வேண்டும். அவர்களை அதிகம் துன்புறுத்தக்கூடாது என்கிற முதிர்ச்சியுள்ள வாடிக்கையாளர்கள் மிகச்சிலரே.
மீண்டும் பிக்பாஸ் டீமின் அசாதாரண உழைப்பை பாராட்ட ஒரு வாய்ப்பு. ஊழியர்களின் நேர்த்தியான உடை முதற்கொண்டு கால் சென்டர் செட்அப் வரை அத்தனை ரகளையாக அசத்தியிருந்தார்கள். Hats off.
முதல் அழைப்பே வில்லங்கமான ஜோடியாக அமைந்தது. பாலாஜி Vs அர்ச்சனா. சிலவற்றிற்கு தடுமாறினாலும் வளைத்து வளைத்து அர்ச்சனா கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அசராமல் பதில் சொல்லி அசத்தினார் பாலாஜி.
பாலாஜியின் மீது நிறைய விமர்சனங்களை ஒருபக்கம் நான் வைத்தாலும் ஏன் சில சமயங்களில் பாராட்டுகிறேன் என்பதற்கான உதாரணக் காட்சி இது. ஏனெனில் நிஜ வாழ்க்கையில் நாம் எம்.ஜி.ஆர் பட ஹீரோ மாதிரி நேர்மையாக இருக்க முயலலாம். அதுதான் சரியும் கூட. ஆனால் சில சூழ்நிலைகளில் குயுக்தியும் சமயோசிதமும் தந்திரமும் மட்டுமே வெல்லும். பிக்பாஸ் விளையாட்டு அப்படிப்பட்டது. When in Rome Be A Roman என்றொரு பழமொழி இருக்கிறது. சகிப்புத்தன்மையை சோதிப்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை. எனவே அதற்கேற்ப தன் வியூகங்களை வகுக்க வேண்டும். ‘இந்த வீடே பொய்யா இருக்கு’ என்றால் நிஷாக்கா போல் அழுது கொண்டு நிற்க முடியாது.
இந்த உரையாடலில், அர்ச்சனாவின் நிழலில் இருப்பவர்களாக சோம் மற்றும் ரியோவை பாலாஜி குறிப்பிட்டது சரி. ஆனால் கேபியையும் இந்த வரிசையில் சேர்த்தது முரண். ஏனெனில் கேபி ஆரம்பத்திலிருந்தே பாலாஜியுடன்தான் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆனால் பாலாஜியே ‘தங்கச்சி’ என்று இவரை கழற்றி விட்டு ஷிவானியுடன் கூடவே சுற்றிக் கொண்டிருந்ததால் ‘எங்கு செல்வது’ என்று தெரியாமல் ஆஜீத்துடன் நட்பாக இருந்தார் கேபி. ஆனால் வலுவான குழுவின் பாதுகாப்பு வேண்டும் என்பதால் இப்போதுதான் அர்ச்சனாவின் வளையத்திற்குள் நுழைய ஆரம்பித்திருக்கிறார் போல.
நிலைமை இப்படியிருக்கும் போது ரமேஷையும் நிஷாவையும் சொல்லாமல் கேபியின் பெயரை பாலாஜி இணைத்தது முரண். இதே கேள்வியை கேம் முடிந்ததும் கேபி முன்வைத்த போது பாலாஜியால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. ‘கேம் முடிஞ்சிடுச்சி’ என்று தந்திரமான பதிலைச் சொல்லி தப்பிக்கவே முயன்றார்.
அர்ச்சனாவிற்கும் பாலாஜிக்குமான இந்த உரையாடல் நெடுநேரம் நீண்டது. ‘அன்பால அடிப்பேண்டா... அன்புதான். அன்புதான்’ என்று ஆவேசமாக கத்திய அர்ச்சனா ஒரு கட்டத்தில் ஷிவானியையும் உள்ளே இழுத்தார். இந்த வலையில் பாலாஜி சிக்கி ஆத்திரப்பட்டு இணைப்பை துண்டிக்கலாம் என்று எதிர்பார்த்தார். ‘உங்க கையில் ஒரு பெயரை கீறி வெச்சிருக்கீங்களே.. அதைக் காட்டுங்க’ என்று கேட்கும் அளவிற்குச் சென்றார். முதலில் தயங்கிய பாலாஜி, பிறகு அதை கேமரா முன்பு காட்ட வந்த போது ‘உங்க நேர்மையைச் சோதிக்கவே யாம் இந்த திருவிளைாடலை நிகழ்த்தினோம்’ என்றார் அர்ச்சனா.
பாலாஜியின் கையில் இருந்த பெயர் என்ன என்பது வெளிப்பட்டது போல் தெரியவில்லை. ‘வரைமுறையின்றி கேள்விகள் கேட்கலாம்’ என்கிற விதியை அர்ச்சனா அதன் எல்லை வரை இழுத்துச் சென்றது போல் இருந்தது.
“கேபி பேரை ஏன் இதுல கொண்டு வந்தீங்க?” என்று அர்ச்சனா கேட்டதற்கு ‘அன்பைக் காரணம் காட்டி என்னை தடுமாற வைத்தது போல் கேபியையும் இழுத்து விட்டீர்கள்’ என்பது போல் பாலாஜி பதில் சொன்னார். ‘Gossip bed’ என்று சுச்சி ஒரு ரகசியத்தை வெளியிட்டது போக, ‘love bed’ என்றும் இருக்கிறதாம்.
‘அன்புதான் என் ஸ்ட்டராட்டஜி. அன்பாலதான் உன்னை அடிப்பேன்’ என்று ஆவேசமாக தன் உரையாடலை முடித்தாலும் ‘தன் ஜூனியர்களை தண்டிக்கிறேன் பேர்வழி என்று தானே ஜெயில் கம்பியில் முட்டி மூக்குடைந்த வடிவேலுவின்’ காமெடிக் காட்சிதான் நினைவிற்கு வந்தது. இந்த டாஸ்க்கில் அர்ச்சனா தோற்றுப் போனார்.
‘அப்பாடா’ என்று தண்ணீர் குடித்து வெளியே வந்த பாலாஜி, வீட்டின் உள்ளே இன்னொரு வாக்குவாதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. முன்பே குறிப்பிட்டபடி, ‘ஏன் என் பேரை இழுத்தீங்க?’ என்ற கேபியின் கேள்விக்கு பாலாஜியால் பதில் சொல்ல முடியவில்லை. ‘ஆஜீத் கேப்டன்சியைப் பத்தி ஏன் மாத்தி மாத்தி பேசினீங்க?’ என்று அடுத்த அஸ்திரத்தை கேபி ஏவி விட, பாலாஜிக்கு இது புரியாமல் சம்பந்தப்பட்ட ஆஜீத்தை அழைக்க ‘நீ சும்மா இரு அஜ்ஜூ’ என்று கேபி சலித்துக் கொண்டது ‘வாயை மூடு வேலு’ என்கிற அர்ச்சனாவின் குரல் போலவே கேட்டது.
அர்ச்சனாவிற்கு சோம் என்கிற பொம்மை கிடைத்ததைப் போல அதன் அடுத்த தலைமுறையில் ஆஜீத் என்கிற பொம்மையை கைப்பற்ற கேபி நினைக்கிறாரோ என்று தோன்றுகிறது. (இளம் அர்ச்சனா. இளம் சோம்... நல்ல காம்பினேஷன்.) ‘என் பேர் வரும் போது நான் பதில் சொல்லாம எப்படி இருக்க முடியும்?’ என்று மெலிதான குரலில் ஆட்சேபித்த ஆஜீத், பிறகு கேபி தனியாக அழைத்து பேசிய போது மடங்கிப் போனார். (பெண்கள்தான் சக்தியின் வடிவம் என்பது மறுபடி மறுபடி நிரூபணமாகிறது).
‘இந்தப் பச்சைப் புள்ளைக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் நெனக்கலையே’ என்கிற முகபாவத்துடன் இடதுகையால் கேபியை ஹேண்டில் செய்தார் பாலாஜி. அர்ச்சனா குழுவில் தன்னை இன்னமும் பலமாக ஐக்கியப்படுத்திக் கொள்ள பாலாஜியை மூர்க்கமாக கேபி எதிர்க்கிறாரோ என்று தோன்றுகிறது.
"நான் பண்ணது டிராமான்னு நீ சொல்லியிருக்கக்கூடாதுடா" என்று சோம் பாலாஜியிடம் வருத்தப்பட்டார். (அர்ச்சனாவை நாமினேட் செய்த சோம் அதற்கு சொன்ன காரணம் நகைப்பாக இருந்தது என்று நேற்றே எழுதியிருந்தேன்.) ஒருவருக்கொருவர் சென்ட்டியுடன் விட்டுக் கொடுக்க இது விக்ரமன் திரைப்படம் கிடையாது. விளையாட்டு வேறு. நட்பு வேறு என்கிற துல்லியமான வரையறை வேண்டும். அதை இரண்டு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
"என்னை இனிமேல் அக்கா என்று கூப்பிடாதே" என்று ஒரு கட்டத்தில் ஆவேசமாக பாலாஜியிடம் சொன்னார் அர்ச்சனா. ‘அன்பாலதான் உன்னை எப்போதும் அடிப்பேன்’ என்று சில நிமிடங்களுக்கு முன்பு சொன்ன அர்ச்சனாவின் முகமூடி உடனே கிழிந்து போனது இந்தத் தருணத்தில்தான். அவர் பாலாஜியின் மீது உண்மையாகவே அன்பு செலுத்தியிருந்தால், பாலாஜியின் கீழ்மைகளை பெருந்தன்மையுடன் கடந்திருக்க வேண்டும் அல்லது பிறகு நிதானமாகப் பேசி புரிய வைத்திருக்க வேண்டும். அன்பு அதிகாரமாக ஆகும் போது அன்பு என்கிற விஷயம் காணாமல் போகிற விபத்து ஏற்பட்டு விடுகிறது.
இந்த டாஸ்க் விதியின் படி ‘நான் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறேன்’ என்கிற போர்டை கழுத்தில் மாட்டிக் கொண்ட அர்ச்சனா "பாலாஜி... உங்களின் அந்தரங்க தகவலை அம்பலப்படுத்துவது என் நோக்கமில்லை'’ என்று சொன்னதோடு நிறுத்தாமல் தன் மகள் மீதும் தன் தாய் மீதும் சத்தியம் செய்ததெல்லாம் ஓவர். "நான் உன் அம்மா மாதிரிடா'’ என்று சொன்ன போதும் மகள் மீது சத்தியம் செய்யும் அபத்தத்தை முன்பு செய்தார் அர்ச்சனா. இது ஒரு விளையாட்டு என்பதை மறந்து விட்டு ஏன் இப்படி ஆழமான உணர்ச்சிகளுக்குள் சென்று விடுகிறார்கள் என்று தெரியவில்லை.
"யார்லாம் ஹீரோவாகணுமோ. என்னை எதிர்த்துக்கங்க" என்று அலப்பறை செய்த பாலாஜி, "கேங்கா சேர்ந்து வர்றீங்களா?'’ என்றார். ‘குரூப்பிஸம்’ என்கிற வார்த்தையைக் கேட்டாலே கொலைவெறியாகி விடும் ரியோ இதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்க இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்தது. பாலாஜி வாக்குவாதத்தில் இதுவரை ஈடுபடாதது பிக்பாஸ் மற்றும் கமலிடம் மட்டுமே. அதையும் என்றாவது செய்து விடுவார் போலிருக்கிறது.
அடுத்த அழைப்பும் வில்லங்கமாகவே அமைந்தது. சாம் vs சனம். "உங்க வாய்ஸ் ரொம்ப அழகா இருக்கு" என்று சாம் ஆரம்பத்தில் ஐஸ் வைத்தும் சனம் அதற்கு மசியவில்லை. " ‘கலீஜ்’ என்று என்னை எப்படிச் சொன்னீர்கள்?" என்று ஆரம்பத்திலேயே அதிரடியைக் கிளப்பினார் சனம். "நீங்க என்னை நாமினேட் செய்து காரணம் சொன்ன விதம் அப்படி இருந்தது" என்றார் சாம். (கலீஜ் என்றால் சென்னை வழக்கில் அழுக்கு என்று பொருள். ஆனால் அரபியில் வளைகுடா என்று அர்த்தம் – சும்மா தகவலுக்கு).
"நீங்க கேப்டன் ஆன கதை எனக்கு தெரியாதா?” என்று சனம் பழைய கதையை இழுக்க '‘உங்க வளர்ப்பு அப்படி’' என்று இதற்கு பதில் சொல்லும் போது வார்த்தையை விட்டு விட்டார் சாம். சாமிடம் உள்ளார்ந்த மேட்டிமைத்தனம் இருக்கிறதோ என்கிற சந்கேத்தை இது போன்ற வார்த்தைகள் எழுப்புகின்றன. "உங்களைப் பார்த்து பாலாஜியே பயப்படறாரு. நான் எம்மாத்திரம்?” என்று சாம் பிறகு பதுங்க முயன்றார். உரையாடலைத் துண்டிக்க இயலாததால் அர்ச்சனாவைப் போல சனமும் கழுத்தில் போர்டு மாட்டி இந்த வார எவிக்ஷன் பட்டியலில் இணைந்தார்.
"உங்களை நாமினேட் பண்ணவங்க எல்லோரையும் ‘வளர்ப்பு சரியில்லை’ன்ற மாதிரி எப்படி சொல்வீங்க... எங்க அப்பா அம்மாவை உங்களுக்குத் தெரியுமா?'’ என்று வெளியில் வந்த சாமிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார் ஆரி. '‘நீங்க மட்டும் என்னோட தாய்மையை குறை சொல்லலாமா?’' என்று பதிலுக்கு சாம் மல்லுக்கட்ட, நான் அந்தப் பொருளில் எதையுமே சொல்லவில்லை என்றார் ஆரி. ரம்யாவும் ஆரியிடம் இதைப் பற்றி விசாரித்தார்.
அந்தச் சமயத்தில் சாமிற்கு ஆதரவான வக்கீலாக வந்த பாலாஜி, "அவங்க வளர்ப்பு சரியில்லை என்று சொல்லவில்லை. வளர்ப்பு அப்படி என்றுதான் சொன்னார்'’ என்பது போல் செக்ஷனில் ஒரு பிரிவைச் சுட்டிக் காட்டி சமாளித்து சாமை பாதுகாப்பாக அழைத்து சென்றார். வார்த்தைகள் வேறுபட்டாலும் அர்த்தம் அதேதான்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பிற்கும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டு ‘வளர்ப்பு’ என்பது பெற்றோரைக் குறிக்கவில்லை... சக ஹவுஸ்மேட்ஸ்களின் ஆலோசனையைத்தான் குறிக்கிறது என்பது போல் விளக்கம் அளித்து ஓய்ந்தார்கள். பரஸ்பர மன்னிப்பு காட்சி முடிந்த பிறகு, தமிழ் சினிமா போலீஸ் மாதிரி கடைசியில் வந்த கேப்டன் ரியோ... ‘போ போ.. கூட்டம் போடாதீங்க’ என்று சூனாபானாவாக மாறி கூட்டத்தைக் கலைத்தார்.
ஆக ஆடுகளுக்குள் சண்டையிட்டு ஒன்றையொன்று முட்டிக் கொள்ள வைக்கும் பிக்பாஸின் நோக்கம் இன்று வெற்றிகரமாக நிறைவேறி விட்டது. இன்னமும் இரண்டு நாட்கள் நீடிக்கப் போகும் இந்த கால் சென்டர் டாஸ்க்கில் இன்னமும் என்னென்ன ரகளைகள் நடக்கும் என்று தெரியவில்லை. குறிப்பாக ரமேஷூம் ஷிவானியும் இந்த டாஸ்க்கை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைத்தால் இப்போதே சிரிப்பாக வருகிறது. பார்ப்போம்.
source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/call-centre-task-bigg-boss-tamil-season-4-day-51-highlights
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக