மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனித்திறமையால் மட்டுமே உயர்ந்து, உலகமே கொண்டாடாடும் மாவீரனாக எழுந்து நிற்கும்போது, தன்னைத் தேடிவரும் அதீத புகழையும், பணத்தையும், இன்னபிற உலக இன்பங்களையும் சரியாகக் கையாளத்தெரியாமல் தடுமாறிய ஓர் இளைஞனின் கதைதான் டியாகோ மரடோனாவுடையதும்!
''பணம் கொட்டும் இயந்திரம்...'' 80-களில் டியாகோ மரடோனாவை கால்பந்து உலகம் இப்படித்தான் பார்த்தது. அவரைச் சுற்றி மட்டுமே கால்பந்து விளையாட்டு இயங்கியது. அமெரிக்கா, ஐரோப்பா என எல்லா நாடுகளின் டிவி நிறுவனங்களும் மரடோனா விளையாடுகிறார் என்பதை விளம்பரப்படுத்தியே டிவி உரிமங்களை வாங்கி பல நூறு கோடிகளைச் சம்பாதித்தன. லீக் அணிகளுக்கு இடையேயான ட்ரான்ஸ்ஃபர்கள் மரடோனா பெயரைச்சொல்லியே பல கோடிகளுக்கு ஊதிப்பெரிதாக்கப்பட்டன. ஸ்பான்ஸர்கள், விளம்பரதாரர்கள் என எல்லோருமே மரடோனாவைச் சுற்றியே வந்தார்கள். 90-களில் சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக எப்படியிருந்தாரோ, அதேபோல 80-களில் மரடோனா கால்பந்தின் கடவுளாக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டார்.
1995... அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் உள்ள பாம்பனொரா ஸ்டேடியம் 60 ஆயிரம் ரசிகர்களால் திமிறிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்த பல ஆயிரம் பேர் சட்டை அணிந்திருக்கவில்லை. உடல் முழுக்க மரடோனாவின் ஓவியங்கள், டாட்டூக்கள். மைதானம் முழுக்க ஒரேயொரு பெயர் மட்டுமே ஓங்கி ஒலிக்கிறது. ''மரடோனா... மரடோனா... டியாகோ'' என்கிற ரசிகர்களின் கூச்சல் விண்ணை முட்டுகிறது. டிவி வர்ணணையாளர்கள்கூட ''கடவுள் வந்துவிட்டார்... எங்கள் தெய்வம் வந்துவிட்டது'' என உற்சாகக் கூக்கிரலிடுகிறார்கள். வானத்தில் இருந்து ராட்சத பலூன் 'வெல்கம்பேக் மரடோனா' எனும் வார்த்தைகளோடு மைதானத்துக்குள் இறங்குகிறது. மக்கள் அலைகளின் நடுவே மரடோனா களத்துக்குள் வருகிறார். மார்புக்கும், காலுக்கும் இடையில் கால்பந்தை வைத்துக்கொண்டு அவர் செய்யும் வித்தைகளைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறது கூட்டம். ரசிகர்களிடையே ஏன் இவ்வளவு ஆரவாரம்?!
''டியாகோ மரடோனா மீண்டும் கால்பந்து விளையாடவரமாட்டார்... அவர் கதை முடிந்தது'' என உலகம் முழுக்க செய்திகள் பரவிய தருணத்தில் மீண்டும் களத்துக்குள் மரடோனா வந்த போட்டி இது. 1994-ல் அமெரிக்காவில் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பை தொடரில் போதை மருந்து உட்கொண்ட குற்றத்துக்காக பாதியிலேயே வெளியேற்றப்பட்ட மரடோனாவின் கதை முடிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், பல மாதங்கள் கழித்து மீண்டு வந்திருந்தார் மரடோனா. நெட்டுக்குள் பந்தை தலையால் முட்டி கோல் அடித்துவிட்டு மரடோனா ஓட, அவரைச்சுற்றி ரசிகர் கூட்டமும் ஓட ஆரம்பித்தது. ஆமாம், கோல் அடித்துவிட்டு மரடோனா மைதானத்தில் ஓடும் ஓட்டத்தைப்பார்க்க 15 மாதங்கள் காத்திருந்த மக்கள் வேறு என்ன செய்வார்கள்.... கடவுள் மீண்டும் களத்துக்குள் வந்துவிட்டார் என கொண்டாடினார்கள் அர்ஜென்டினா மக்கள். ஆனால், மக்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை!
அர்ஜென்டினாவில் மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மரடோனா. வீட்டுக்கு மூத்த மகன். இவருக்கு அடுத்து நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் என மொத்தம் ஏழு பேர். அப்பா, அம்மாவுக்கு சரியான வேலைகள் கிடையாது. பிறக்கும்போதே கடவுள் இயற்கையாகக் கொடுத்திருந்த கால்பந்து விளையாடும் திறமைதான் மரடோனாவை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் காப்பாற்றியது. 10 வயதிலேயே கிளப் அணிகளுக்கு விளையாட ஆரம்பித்தார். 5 அடி 4 அங்குல உயரம்தான். கால்பந்து வீரர்களுக்கே உரிய ஃபிட்னஸோ, உடல் அமைப்போ கிடையாது. ஆனால், தனித்திறமைகளால் உலகமே கொண்டாடும் கால்பந்து மாவீரானக எழுந்தார். குட்டையான உருவம் அவருக்கு சாதகமாக அமைந்தது. பந்தை தன்னுடைய கன்ட்ரோலிலேயே வைத்திருந்து, டிரிப்ளிங் என்று சொல்லப்படும் எதிரணி வீரருக்குப் போக்குக்காட்டி பந்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் லாவகம் அவருக்குக் கைகூடியிருந்தது. தான் விளையாட ஆரம்பித்த அத்தனை அணிகளுக்காகவும் கோல் மழை பொழிய மரடோனா அர்ஜென்டினாவின் தேசிய அணிக்குள் நுழைந்தார். அப்போது அவருக்கு வயது 16.
1978-ல் அர்ஜென்டினாவில் கால்பந்து உலகக்கோப்பை தொடங்குகிறது. ஆனால், அணியில் மரடோனா இல்லை. ''17 வயது என்பது மிகவும் சிறிய வயது. உலகக்கோப்பையில் ஆடக்கூடிய அளவுக்குப்பக்குவம் இல்லா வயது'' என அவரை அணியில் இருந்து நீக்கிவிட்டார் அப்போதைய பயிற்சியாளர். ஆனால், மரடோனா தளர்ந்துவிடவில்லை. அடுத்த ஆண்டே ஜப்பானில் நடைபெற்ற ஜூனியர் உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக மிகச்சிறப்பான ஆட்டம் ஆடி, தொடரில் மொத்தம் ஆறு கோல்கள் அடித்து, ரஷ்யாவை தோற்கடித்து அர்ஜென்டினாவை சாம்பியனாக்கினார். இந்தவெற்றி மரடோனாவை உலகம் முழுக்க புகழ்பெறவைத்தது. அர்ஜென்டினாவில் ஒரு சூப்பர் ஸ்டார் உதயாமாகியிருக்கிறார் என மீடியாக்கள் கொண்டாட ஆரம்பித்தன.
1982-ல் ஸ்பெயினில் நடந்த உலககோப்பைத் தொடரில் அர்ஜென்டினாவுக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மரடோனா. நடப்புச் சாம்பியனாக உலககோப்பைக்குள் நுழைந்த அர்ஜென்டினாவுக்குக்கும், இளம் வீரர் மரடோனாவுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. இத்தாலி, பிரேசில் என எல்லா அணிகளுமே மரடோனாவை மேன் மார்க்கிங் செய்து விளையாடின. எதிரணி வீரர்கள் மரடோனாவின் கோபத்தை தூண்டி விளையாடியதோடு, தொடர்ந்து அவரின் காலையே குறிவைத்து தாக்கினார்கள். விளையாடிய ஐந்து போட்டிகளிலுமே பல மஞ்சள் அட்டைகளைப் பெற்றார் மரடோனா. பிரேசிலுக்கு எதிரானப் போட்டியில் சிவப்பு அட்டைக்கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த உலகக்கோப்பைத் தோல்வி மரடோனாவுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகத்தை தட்டி எழுப்பிவிட்டது. 1986 உலகக்கோப்பைக்கு கேப்டனாகத் தலைமையேற்று மெக்சிகோவுக்கு வந்தார் மரடோனா. தன்னை மேன் மார்க்கிங் செய்து விளையாடிய வீரர்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்த உலகக்கோப்பையில் மட்டும் 5 கோல், 5 அசிஸ்ட் என உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்பக்கம் திருப்பினார். இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப்போட்டியில் இவரின் கையில்பட்டு பந்து கோல் போஸ்ட்டுக்குள் நுழைந்தது. இங்கிலாந்து மீடியா மரடோனாவை ''சாத்தான்'' என்றது. ஆனால், மரடோனாவோ ''அந்த நேரத்தில் அதை கோலாக்கியது என்னுடைய கை அல்ல... அது கடவுளின் கை'' என்று சொல்லி எதிராளிகளையும் ரசிகர்களாக்கினார். வெஸ்ட் ஜெர்மெனியை மரடோனா தலைமையிலான அர்ஜென்டினா அணி வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1990-ல் மீண்டும் கேப்டனாகத் தலைமையேற்று இத்தாலி உலகக்கோப்பைக்குப் போனார் மரடோனா. ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வேகம் மரடோனாவிடம் இல்லை. காரணம், கணுக்காலில் ஏற்பட்டிருந்த காயம். இந்த காயத்துடனேயே சமாளித்து ஆடி, அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்றார். 86-ல் எந்த அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனார்களோ, அதே வெஸ்ட் ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்து ரன்னர் அப் ஆனது அர்ஜென்டினா.
1994 உலகக்கோப்பைதான் மரடோனாவின் சர்வதேச கால்பந்து கரியரை முடிவுக்குக் கொண்டுவந்த தொடர். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பையில் மரடோனாவை சந்தேகக் கண்கொண்டு பார்த்துக்கொண்டேயிருந்தது அமெரிக்கா. இடதுசாரி அரசியலில் மரடோனா கொண்டிருந்த நாட்டம், ஃபிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட தலைவர்களோடு அவர் காட்டிய நெருக்கம் ஆகியவை அமெரிக்காவின் கண்களை உறுத்தியது. இந்த உலகக்கோப்பையில் கிரீஸுக்கு எதிராக விளையாடியப் போட்டிதான் மரடோனா அர்ஜென்டினாவுக்காக கடைசியாக விளையாடியப்போட்டி. போதைப்பொருள் எடுத்துக்கொண்டதாக மரடோனாவின் இரத்தப் பரிசோதன முடிவுகள் வர பாதியிலேயே உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார் மரடோனா. இங்கிருந்துதான் மரடோனாவின் வாழ்க்கை தடம் மாறத்தொடங்கியது.
2008-ல் அர்ஜென்டினாவின் பயற்சியாளராகப் பொறுப்பேற்றார். இவரது பயிற்சியின் கீழ்தான் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அர்ஜென்டினா விளையாடியது. அணியில் லயோனல் மெஸ்ஸி இருந்தார். குரூப் சுற்றில் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்த அர்ஜென்டினா, காலிறுதிப்போட்டியில் ஜெர்மனியிடம் 4-0 என மிகவும் அவமானகரமானத் தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வி மீண்டும் மரடோனாவை டிப்ரஷனுக்குள் தள்ளியது.
மரடோனாவின் பர்சனல் வாழ்க்கை பல சர்ச்சைகளை உள்ளடக்கியது. 24 வயதிலேயே நீண்டகாலத் தோழியைத் திருமணம் செய்துகொண்ட மரடோனாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. ஆனால், இத்தாலியில் வேறு ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஒரு மகன் அவருக்கு இருப்பதாக மீடியாக்களில் செய்திகள் வர ஆரம்பித்தன. நீண்டகாலம் இதை மறுத்துவந்த மரடோனா டிஎன்ஏ டெஸ்ட்டுக்கும் ஒத்துழைக்க மறுத்தார். இறுதியில் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற தருணத்தில் இத்தாலியில் தனக்கு ஒரு மகன் இருப்பதை ஒப்புக்கொண்டார். தன் தாயின்மீதும், தன் சகோதரிகள் மீதும் அளவற்ற அன்பை வைத்திருந்தவர். இவர்களிடம் மணிக்கணிக்கில் பேசுவதற்காகவே பல லட்சங்களை போன் பில்லாக கட்டிய வரலாறெல்லாம் உண்டு.
தென்அமெரிக்காவின் அரசியல் கோட்பாடு, அரசியல்வாதிகள், அமெரிக்க ஏகாதிபத்தியம்... இந்த சிக்கலுக்குள் சிக்க ஆரம்பித்ததில்தான் மரடோனாவின் பாதை மாறத்தொடங்கியது என்பது அர்ஜென்டீன கால்பந்து ஆர்வலர்களின் கருத்து. கொக்கெய்ன் போதைப்பொருளுக்கு அடிமையான மரடோனாவின் உடல்நிலை தொடர்ந்து பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. இதயப்பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர் கடந்த நவம்பர் 3-ம் தேதி மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவுக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்று சொல்லப்பட்ட சூழலில்தான் அவரது மரணம் நேற்று (25-11-2020) நிகழ்ந்திருக்கிறது.
சிலரின் கண்களுக்கு மரடோனா சாத்தானாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், கால்பந்தை நேசித்த அத்தனைப் பேருக்கும் அவர்தான் கடவுள். மாவீரர்களுக்கு மரணம் இல்லை. மாவீரர்கள் எப்போதும் மரிப்பதில்லை. வரலாற்றில் இருந்து மறைவதும் இல்லை!
source https://sports.vikatan.com/football/the-rise-and-fall-of-diego-maradona
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக