'KGF' படம் பற்றி யாராவது நம்மிடம் கேட்டால், பெரும்பாலும் முதலில் நமக்கு அந்தப் படத்தின் நாயகன் யாஷ் நினைவுக்கு வரமாட்டார், அந்தப் படத்தின் மாஸ் காட்சிகள் ஞாபகம் வராது. மாறாக, யாஷ் கேரக்டருக்கு 'காயம்பட்ட சிங்கத்தோடு மூச்சுக்காத்து' என பில்டப் கொடுக்கும் அந்தக் குரல்தான் முதலில் ஞாபகம் வரும். அதேமாதிரிதான் கிரிகெட் கமெண்ட்ரியும்! தோனி அடித்த சிக்சர் நியாபகம் வருவதற்கு முன் ரவிசாஸ்திரியின் "Dhoni finishes off in style! India lift the world cup after 28 years" என்ற அந்த குரல்தான் நியாபகத்துக்கு வரும்.
விரும்புகிறமோ இல்லையோ... புரிகிறதோ... புரியவில்லையோ... கமென்ட்ரி இருந்தால்தான் கிரிக்கெட் களைகட்டும். கமென்ட்ரி மட்டுமே கிரிக்கெட்டை உயிரோட்டத்துடன் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜெஃப்ரி பாய்காட், டோனி கிரெய்க், சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி எனப்பலரும் கோலோச்சிய கிரிக்கெட் கமென்ட்ரியில் இப்போது ஹர்ஷா போக்லேதான் மாஸ்டர். 'கிரிக்கெட்டின் குரல்' என ஒவ்வொரு இந்திய ரசிகனும் ஹர்ஷா போக்லேவைப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குரலில் அப்படி என்னதான் இருக்கிறது?
இது ஒன்றும் இந்தியாவின் செல்லக்குரலுக்கான தேடல் இல்லை. ஹர்ஷாவின் குரல் கேட்பதற்கு இனிமையாய் இருக்கிறது. ஆங்கில உச்சரிப்பில் செம்மையாக இருக்கிறார் என்பதற்காக இந்தக் குரல் மதிக்கப்படுவதில்லை. ஹர்ஷாவின் அந்தக் குரல் பெரிதாக எந்த வேற்றுமையும் பார்க்காது, தேவையற்ற வசவுகளை அள்ளித் தெளிக்காது. எந்த வீரரையும் தனிப்பட்ட முறையில் தாக்கியோ அந்த வீரரின் குடும்பத்தை கமென்ட்ரி பாக்ஸுக்கு இழுத்தோ அந்தக் குரலுக்கு விவாதம் செய்யத் தெரியாது. மொத்தத்தில் அந்தக் குரலுக்கு ஒரு அடிப்படை நாகரிகம் தெரியும்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல்-ல் கமென்ட்ரியில் ஈடுபட்டிருந்த முன்னாள் வீரரும் கமென்ட்ரியில் 20 வருடத்திற்கும் மேலான அனுபவமிக்கவருமான சுனில் கவாஸ்கர், கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நகைச்சுவை என்ற பெயரில் அனுஷ்கா ஷர்மாவை தேவையில்லாமல் பேச்சுக்குள் இழுத்து கோலியை விமர்சித்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. அனுஷ்கா ஷர்மா மிகுந்த மனவருத்ததுடன் சுனில் கவாஸ்கருக்குக் கண்டனம் தெரிவித்து ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, கவாஸ்கரை கமென்ட்ரியிலிருந்து நீக்க சொல்லி டீவிட்டுகள் தெறித்தன. தோனி மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட வீரர் என அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்காக தோனியை பாராட்டுகிறேன் என்ற பெயரில் சச்சினுக்கு மும்பையிலும் கோலிக்கு டெல்லி-பெங்களூருவிலும் மட்டுமே ரசிகர்கள் உண்டு என சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? அட்ரஸ் இல்லாத ஆள் சொன்னால் கூட ஏற்றுக்கொள்ளமாட்டோம். ஆனால், இதே கருத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டிக்கு இடையே கவாஸ்கர் தெரிவித்திருந்தார். இதற்கு மேலும், இடையிடையே பழைய ஜோக் தங்கதுரையாக மாறி அறுத்தார்.
இன்னொரு முக்கிய கமென்டேட்டரான சஞ்சய் மஞ்சரேக்கர் ஏற்கெனவே மும்பைக்கு சப்போர்ட் செய்து ஓடாக தேய்ந்து இப்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். ரவிசாஸ்திரி, அணில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் இவர்களையெல்லாம் கோச் ஆக்கிவிட்டாயிற்று.
இந்திய கிரிக்கெட் கமென்ட்ரியின் நிலை இதுதான். இங்கே கமென்ட்ரி செய்வதற்குப் பெரிதாக ஆள் இல்லை. இருக்கிற ஒரு சிலரும் தெரிந்தோ தெரியாமலோ பாரபட்சமாகவும் அநாகரீகமாகவும் பேசிக்கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில நல்ல வீரர்கள் நல்ல கமென்டேட்டர்களாக இருப்பதில்லை. வெறுமெனே பிட்ச் ரிப்போர்ட் மட்டுமே படித்துவிட்டு செல்பவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கிடையே இன்னமும் கமென்ட்ரி ஒரு கலை. அதற்குரிய மதிப்பு மரியாதையோடு செய்ய வேண்டும் என சின்சியராக செய்து கொண்டிருப்பவர் ஹர்ஷா மட்டுமே.
எல்லாவற்றையும் சரியாக செய்து, ஒவ்வொரு வீரரிடமும் சிறப்பாக வேலை வாங்கி தொடர்ந்து வெற்றிகளை பெற்று கொண்டிருக்கும் ஒரு கேப்டனிடம், போஸ்ட் மேட்ச் ப்ரசன்டேஷனை தொகுத்து வழங்கும் கமென்டேட்டர் என்ன கேள்வியை கேட்டுவிட முடியும்... இந்த வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்? உங்களின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? இவற்றைதான் பொதுவாக கேட்டு 'ஆல் தி பெஸ்ட்' எனக் கூறி முடித்துவிடுவார்கள். ஆனால், இந்த ஐபிஎல்-ல் ரோஹித் ஷர்மாவிடம் போஸ்ட் மேட்ச் ப்ரசென்டேசனில் "நீங்கள் இப்படி தொடர்ந்து வென்று கொண்டே இருக்கிறீர்களே... உங்கள் வீரர்கள் இன்னமும் வெற்றியின் மீது பசியோடுதான் இருக்கிறார்களா?" எனக் கேட்டிருப்பார் ஹர்ஷா போக்லே. சர்வதேச கிரிக்கெட் ஆடி நல்ல அனுபவமுள்ள ஒரு கிரிக்கெட்டர் கூட இப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்கமாட்டார். இந்த இடத்தில்தான் கிரிக்கெட் வேறு கிரிக்கெட் பற்றி பேசுவது வேறு என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருந்தார் ஹர்ஷா.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் அஷ்வினின் யூடியூப் சேனலுக்குப் பேட்டி கொடுத்திருந்த ஹர்ஷா, "ரேடியோவில் கிரிக்கெட் கமென்ட்ரி செய்யும் போது நீங்கள் ரசிகர்களின் கண்கள் போன்று செயல்பட வேண்டும். என்ன நடக்கிறதோ அதை பிரதானமாக பேசினால் போதும். ஆனால், தொலைக்காட்சியில் பேசும்போது ஆட்டத்தில் நிகழும் ஒவ்வொரு விஷயத்திற்கும் What, How, Why இந்த மூன்று கேள்விக்கான பதிலாக உங்கள் கமெண்ட்ரி இருக்க வேண்டும்" என்றார். உண்மைதான், இதை நாமே பல முறை கேட்டிருப்போம். இவ்வளவு கட்டுக்கோப்போடு இலக்கணம் வகுத்து கமென்ட்ரி செய்யும் ஹர்ஷாவின் சேட்டையான... குறும்பான சொற்றொடர்களுக்கும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
புஜாராவின் பேட்டிங் குறித்து இப்படியொரு கமென்ட். இதை புஜாராவே கேட்டுவிட்டு சிரித்திருப்பார். இங்கிலாந்துடனான டெஸ்ட் சீரிஸின் போது மைக்கேல் ஆதர்டன் "இது இங்கிலாந்து மைதானம். ஆனால் இந்தியாவுக்குத்தான் ஆதரவு அதிகம் இருக்கிறது. பிட்ச்சும் இந்திய ஸ்பின்னர்களுக்குத்தான் ஒத்துழைக்கிறது. எங்கள் நாட்டின் உபசரிப்பை பார்த்தீர்களா?" எனக் கேட்க, அதற்கு ஹர்ஷா போக்லே, "உங்களை எங்கள் நாட்டை பல காலம் ஆள விட்டிருக்கிறோம். குறைந்தபட்சம் நீங்கள் இதையாவது எங்களுக்கு செய்ய வேண்டாமா?" என கேட்க கமென்ட்ரி பாக்ஸில் ஒரே குதூகலம்தான். எப்படி மாஸ் ஹீரோக்களுக்கு வெறித்தனமான பிஜிஎம்-கள் கூடுதல் மாஸ் கூட்டுமோ, அதேபோல ஹர்ஷாவின் குரலும் பன்ச்சும் பல வீரர்களை மாஸ் ஹீரோக்களாக மனதில் பதிய வைத்திருக்கிறது. "விக்கெட் விழுந்த பிறகும் ரசிகர் கூட்டம் மொத்தமும் ஆராவாரமாக கூச்சல் போடுகிறது என்றால் சச்சின் மைதானத்திற்குள் வருகிறார் என்று அர்த்தம்" என இவர் கொடுத்த பன்ச் ரசிகர்களை விசிலடித்து கொண்டாட வைத்தது. 'Ladies and Gentlemen, fasten your seatbelts. We are ready for the take off' என ஏபிடிக்கு கமென்ட் கொடுத்து சிலிர்க்க வைத்திருக்கிறார்.
தொழில் போட்டியோ... பொறாமையோ என்னவோ... ஹர்ஷா இவ்வளவு பெர்ஃபெக்ட்டாக இருப்பதே சில சக கமென்ட்டேட்டர்களுக்கு பொறுக்காது. ஹர்ஷா மீது புகார் எழுதிப்போட்டு அவரை சில காலம் கமென்ட்ரி பாக்ஸிலிருந்து ஓரம் கட்டிய சம்பவங்கள் எல்லாம் நடைபெற்றிருக்கின்றன. ஸ்போர்ட்ஸ்க்கு எல்லைகள் கிடையாது என்றெல்லாம் பேசுவோம். ஆனால், ஒரு கமென்டேட்டர் நடுநிலையாக தனது சொந்த நாட்டு அணி செய்யும் தவறுகளை இங்கே பேசவே முடியாது.
உங்களுக்கு நாட்டு எல்லையில் நிற்கும் வீரருக்கு ஒத்த தேசப்பற்று இருக்க வேண்டும். உங்கள் அணி தவறே செய்தாலும் பிரபலமான வீரரின் புகழ்பாடி பூசி மொழுக வேண்டும். இதுதான் நவீன கமென்டேட்டர்களின் அடிப்படை தகுதி. ஹர்ஷா இதிலும் தனித்தவர்தான். இந்திய அணியை விமர்சித்ததால் ஓராண்டு கமென்ட்ரியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். அப்போது ஹர்ஷா போக்லே 'I tell the Story... I am not the story' என்று சொல்லியிருந்தார்.
ஆம், உங்களின் குரல்வழியாக பாரபட்சமற்ற விமர்சனங்களோடு கிரிக்கெட் கதைகள் பலவற்றையும் எங்கள் காதுகள் கேட்டு திளைக்கவேண்டும்!
கமான் ஹர்ஷா... வீ ஆர் வித் யூ!
மக்கள் என்ன சொல்கிறார்கள்?
அது சரி, தற்போதைய கமென்டேட்டர்களில் யார் அதிகமாக தங்களை ஈர்ப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்? விகடன் வாசகர்களின் முதல் சாய்ஸ் ஹர்ஷாதான்! கிட்டத்தட்ட 70% வாக்குகளை அவர் அள்ளியிருக்கிறார்.
இந்த poll குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்...
Also Read: தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளர்களில் உங்களை அதிகம் ஈர்த்தவர் யார்? #VikatanPollResults
source https://sports.vikatan.com/cricket/why-we-should-celebrate-harsha-bhogles-commentary
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக