Ad

புதன், 4 நவம்பர், 2020

`காவல்துறையின் நண்பன்; குற்றவாளிகளின் எதிரி' - சிசிடிவி-யும் சுவாரஸ்ய க்ரைம்களும்! #CCTV

`Everything, Everywhere... We Are Watching' - இது `பிக் பாஸ்’ விளம்பரத்தில் வரும் வசனமல்ல... ஆனால், ஒரு விளம்பரத்தில் வரும் வசனம்தான் இது. இந்த விளம்பரத்தைத் திரையரங்குகளில்தான் அதிகம் பார்த்திருப்போம். ஆறு மாத காலத்துக்கு மேலாகத் திரையரங்குகள் அனைத்தும் மூடியிருப்பதால், திரையரங்கங்கள் எப்படியிருக்கும் என்பதே நம்மில் பலருக்கும் மறந்துபோயிருக்கும். ஆகவே, இந்த விளம்பரம் நினைவிருக்க வாய்ப்பில்லைதான். நினைவுபடுத்துகிறோம்...

`மூன்றாவது கண்' என்று தமிழக காவல்துறை சார்பாக சிசிடிவி கேமராக்கள் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரத்தில்தான் மேற்கண்ட வசனம் இடம்பெற்றிருக்கும். நடிகர் விக்ரம் நடித்திருக்கும் இந்த விழிப்புணர்வு விளம்பரப் படத்தில், இன்னொரு வசனமும் சொல்லப்பட்டிருக்கும். `இன்றைய காலகட்டத்துல, காவல்துறையினருக்கு சிசிடிவி ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு கருவி' என்பதுதான் அந்த வசனம். கடந்த சில நாள்களாக இந்த வசனத்தை நிரூபிக்கும் வகையில் நாடு முழுவதுமே பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

சிசிடிவி விளம்பரம்

ஆம்! சமீபகாலங்களில், சிசிடிவி உதவியோடு பல குற்றவாளிகளை அடையாளம்கண்டு கைதுசெய்திருக்கிறது காவல்துறை. அதிலும், சில வழக்குகளில் காவல்துறையைச் சேர்ந்தவர்களே குற்றவாளிகள் என்பதையும் காட்டிக் கொடுத்திருக்கிறது சிசிடிவி கேமராக்கள். சிசிடிவி உதவியோடு காவல்துறையினரால் தீர்த்துவைக்கப்பட்ட சில முக்கிய வழக்குகளைத் திரும்பிப் பார்ப்பதற்கு முன்பாக சிசிடிவி கேமராவின் வரலாற்றுச் சுருக்கத்தைத் தெரிந்துகொள்வோம்.

Closed Circuit TeleVision என்பதன் சுருக்கம்தான் சிசிடிவி. 1942-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டில் ஏவப்பட்ட V2 செயற்கைக்கோளை கண்காணிக்க முதன்முறையாக சிசிடிவி கேமாராக்கள் பொருத்தப்பட்டன. அந்தநாட்டைச் சேர்ந்த வால்டர் புரூச் (Walter Bruch) என்ற பொறியாளர்தான், `சிசிடிவி கேமராக்களின் தந்தை.’ 1942-ம் ஆண்டே சிசிடிவி கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், 1962-க்கு பிறகுதான் உலகின் முக்கிய நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்ததாம்.

அதிகபட்சமாக சிங்கப்பூர் விமான நிலையத்தில் 3,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன்மூலம் பாதுகாப்பான விமான நிலையமாக அது திகழ்கிறது. மிக முக்கியமான பாதுகாப்புக் கருவியாக உலகம் முழுவதுமே சிசிடிவி கேமராதான் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

சரி... இப்போது சிசிடிவி கேமராக்கள் உதவியோடு தீர்க்கப்பட்ட வழக்குகள் சிலவற்றைக் காண்போம்...

`8 தோட்டாக்கள்' படத்தில் காணாமல்போன போலீஸ் துப்பாக்கியைத் தனியாகத் தேடுவாரே கதாநாயகன்... அதேபோல காவல் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகளைத் தனிப்படை அமைத்துத் தேடியிருக்கிறார்கள் கும்பகோணம் காவல்துறையினர்.

சிசிடிவி

கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, காவல் நிலைய ஆயுதப் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன. பின்னர், நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டுமென்பதால், துப்பாக்கிகள் அனைத்தும் அறையைவிட்டு வெளியே எடுக்கப்பட்டன. அவற்றை எண்ணிப் பார்த்தபோது இரண்டு துப்பாக்கிகள் குறைந்திருக்கின்றன. காவல் நிலையத்தில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் துப்பாக்கிகள் திருடு போயிருக்க வாய்ப்பில்லை என்பதால், தனிப்படை அமைத்து குற்றவாளியைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார் கும்பகோணம் எஸ்.பி. தனிப்படை போலீஸாரின் விசாரணையில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் தீபக்தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட காவலர் தீபக்

Also Read: `11 பேர் தற்கொலைக்கு யார் காரணம்?' - அம்பலப்படுத்திய சிசிடிவி காட்சிகள்

இரண்டு துப்பாக்கிகளைத் திருடி கடலூரில் வசிக்கும் தன் நண்பரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் தீபக். பின்னர் இந்த வழக்கில் போலீஸார் தீவிரம்காட்டவே, `மாட்டிக்கொள்வோமோ...’ என்கிற பயத்தில் தன் நண்பனிடம் `சிசிடிவி கேமராக்கள் இல்லாத வழியாகத் துப்பாக்கிகளைக் கொண்டு வந்து காவல் நிலைய வாசலில் போட்டுவிட்டுச் சென்றுவிடு' என்று சொல்லியிருக்கிறார் தீபக். அதேபோல தீபக்கின் நண்பரும் செய்திருக்கிறார். `துப்பாக்கிதான் கிடைத்துவிட்டதே... இனிமேல் தப்பித்துவிடலாம்' என்று நினைத்திருக்கிறார் தீபக். ஆனால், சிதம்பரம் முதல் திருப்பனந்தாள் வரையுள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து துப்பாக்கியைப் போட்டுச் சென்றது யார் என்று கண்டுபிடித்தனர் காவல்துறையினர். தீபக்கின் நண்பரை விசாரித்தபோது தீபக்தான் திருடியிருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த விசாரணையில் கடைசி நேரத்தில் உதவியது சிசிடிவி காட்சிகள்தாம்.

Also Read: சிசிடிவி கேமரா... 2 சட்டை! - துப்பாக்கித் திருட்டில் நண்பருடன் கும்பகோணம் போலீஸ் சிக்கிய பின்னணி

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமுள்ள பல்வேறு மாநிலங்களிலும் காவல்துறையின் உற்ற நண்பனாக சிசிடிவி இருந்துவருகிறது. அதற்கு உதாரணமாக டெல்லியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்...

டெல்லி துவாரகா பகுதியில், ஒரே மாதிரியான நான்கு வழக்குகள் பதிவாகியிருந்தன. சாம்பல் நிற காரில் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை தந்ததாக ஒரு சிறுமி உட்பட நான்கு பெண்கள் சார்பில் துவாரகா காவல் நிலையத்தில் ஒரே மாதிரியான புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன. அந்தச் சாம்பல் நிற காரில் நம்பர் பிளேட்டும் இல்லை என்பதால் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமாராக்களை ஆராய்ந்து, ஒருவழியாக அந்த கார் டெல்லியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜனக்புரியை நோக்கிப் பயணமாவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர், மேலும், சில சிசிடிவி கேமராப் பதிவுகளின் உதவியோடு அந்த கார் நிறுத்தப்பட்டிருக்கும் வீட்டையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அந்த வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கைதுசெய்யப்பட்ட போலீஸ் எஸ்.ஐ புனீத்

சாம்பல் நிற காரில் பயணம் செய்து பெண்களுக்குத் தொல்லை கொடுத்தது ஒரு காவலர்தான் என்பது அந்த வழக்கில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. டெல்லி போக்குவரத்துக் காவல்துறையில் எஸ்.ஐ-ஆகப் பணிபுரியும் புனீத் கிரிவால்தான் (Puneet Grewal) குற்றவாளி. 200 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து, அதன் பின்னர் குற்றவாளியைக் கண்டுபிடித்த இந்த வழக்கு கடந்த மாதத்தின் க்ரைம் பிரிவு செய்திகளில், முக்கியச் செய்தியாக அமைந்தது.

Also Read: ஹரியானா: காரில் ஏற மறுத்த இளம்பெண்... பட்டப்பகலில் சுட்டுக் கொன்ற இளைஞர்! - என்ன நடந்தது?

ஹரியானாவில் கடந்த மாதம், பட்டப்பகலில் கல்லூரி வாசலில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் கொலை வழக்குகூட சிசிடிவி கேமாராப் பதிவுகள் வெளியான பிறகுதான் பரபரப்பான வழக்காக மாறியது. அந்தக் காட்சிகளைக் கொண்டுதான் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை எளிதாக வளைத்துப் பிடித்தது ஹரியானா காவல்துறை.

சிசிடிவி கேமராக்கள் அறிமுகமான பிறகு பிடிபடாமல் இருந்த பல திருட்டு கும்பல்கள் பிடிபட்டிருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் சொல்கின்றன. சென்னையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற 14 கொலை வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான வழக்குகளில், குற்றப்பத்திரிகையோடு சிசிடிவி காட்சிகளும் இணைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் சொல்கிறது காவல்துறை. கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் மட்டும் சிசிடிவி காட்சிகளின் உதவியோடு செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகளில் ஈடுபட்ட சுமார் 60 குற்றவாளிகளை மடக்கிப் பிடித்திருக்கிறது சென்னை காவல்துறை.

சிசிடிவி

புதிது புதிதாக உத்திகளைக் கண்டுபிடித்து விநோத குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான வழக்குகளில், காவலர்களின் வேலையை பாதியாகக் குறைத்திருப்பது சிசிடிவிதான் என்றே சொல்லலாம். அதேநேரத்தில், `குற்றங்கள் பலவும் சிசிடிவி கேமராக்கள் மூலம்தானே கண்டுபிடிக்கப்படுகின்றன... இனி காவலர்களுக்கு என்ன வேலை?' என்று கேள்வியெழுப்பவர்களையும் பார்க்க முடிகிறது. இந்த கேள்விக்கு பதிலளிக்கும்விதமாக, புத்திசாலித்தனமாகத் திருட்டில் ஈடுபட்ட கும்பல் குறித்த ஒரு பிரபல வழக்கை முன்வைக்கிறார்கள் காவல்துறையினர். அது என்ன வழக்கு... அடுத்த பகுதியில் காண்போம்..!

`அயல்நாட்டிலிருந்தே திருட்டைத் தடுத்த இளைஞர்... எப்படி?', `சிசிடிவி கிராமங்கள்' எனப் பல சுவாரஸ்ய தகவல்களோடு அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.


source https://www.vikatan.com/social-affairs/crime/interesting-crimes-solved-with-the-help-of-cctv-cameras

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக