Ad

புதன், 4 நவம்பர், 2020

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு! - டெல்லி ஜந்தர்மந்தரில் அமைச்சர்களுடன் பஞ்சாப் முதல்வர் தர்ணா

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் சட்டப்பேரவையில் நான்கு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி, நேற்று பஞ்சாப் முதல்வர் உட்பட அமைச்சர்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கச் சென்றனர். ஆனால், குடியரசுத் தலைவர் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, டெல்லி ராஜ்காட்டில் தர்ணாவில் ஈடுபடப் போவதாகப் பஞ்சாப் முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த தர்ணாவில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.

தர்ணாவில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

இதனையடுத்து, டெல்லி ராஜ்காட்டில் நடக்க இருந்த தர்ணா பாதுகாப்பு காரணங்களுக்காக ஜந்தர்மந்தரில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், பஞ்சார் அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் பஞ்சாப் பவனிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஜந்தர் மந்தரை நோக்கி பேரணி நடத்த முயன்றபோது டெல்லி போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

Also Read: விலையேறிய வெங்காயமும், விளங்காத வேளாண் சட்டமும்..! #JanKiBaat

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகிறது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் போராட்டங்கள் பெருமளவில் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாகப் பஞ்சாபில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அங்கு சரக்கு ரயில்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அனல் மின்நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி சென்றடையவில்லை. அங்கு மின் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகப் பஞ்சாபில் கடுமையான மின்தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கிவிட்டது. அதோடு விவசாயிகளும் கிடைக்க வேண்டிய உரங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/protest/punjab-chief-minister-protest-at-delhi-jantar-mantar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக