உலக நாடுகள் முழுவதிலும் தற்போது அதிகம் பேசப்பட்டுவரும் ஒரு விஷயம் `அமெரிக்க அதிபர் தேர்தல்.’ நவம்பர் 3-ம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவருக்குமிடையே கடும் போட்டி நிலவிவருவதால் அமெரிக்கத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்தநேரத்தில் அமெரிக்கத் தேர்தல் சுவாரஸ்யங்கள் குறித்தும், தேர்தல் கணிப்புகளும் குறித்தும் இங்கே அலசலாம்.
Also Read: `2015 கலகம்... பிரான்ஸ் முதல் சவுதி அரேபியா வரை’ - தொடரும் பதற்றம்!
எப்போதும் தேர்தல் செவ்வாய்க்கிழமைதான்... ஏன்?
1845-ம் ஆண்டுக்கு முன்னர் வரை அமெரிக்க அதிபர் தேர்தல்கள் ஏதோ ஒரு நாளில்தான் நடத்தப்பட்டுவந்தன. ஆனால், 1845-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அதற்குப் பிறகான அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அனைத்தும் நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு பிறகு வரும் செவ்வாய்க்கிழமையில்தான் நடத்தப்பட்டுவருகின்றன. அதென்ன முதல் திங்கட்கிழமைக்குப் பிறகு வரும் செவ்வாய்க்கிழமை... முதல் செவ்வாய்க்கிழமை என்று சொல்லலாமே என்கிறீர்களா? அங்குதான் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார்கள் அமெரிக்கர்கள். ஒருவேளை நவம்பர் மாதத்தின் முதல் நாளே செவ்வாய்க்கிழமையாக இருந்தால் அன்று தேர்தல் நடத்தப்பட மாட்டாது. நவம்பர் 1-ம் தேதியை கிறிஸ்தவர்கள், `சகல பரிசுத்தவான்கள் தினம்' (All Saint's Day) ஆக அனுசரிக்கும் காரணத்தால் அன்றைய தினத்தில் தேர்தல் நடக்காது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சமயத்தில் அமெரிக்கர்களில் பலரும் விவசாயிகள்தாம். நவம்பர் மாதம்தான் அறுவடை முடிந்து விவசாயிகளுக்குச் சற்று ஓய்வு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில், அதிக வெயிலும் இல்லாமல் அதிக குளிரும் இல்லாமல் இருப்பதும் நவம்பர் மாதத்தில்தான் என்பதால் அதிபர் தேர்தலை நவம்பர் மாதத்தில் நடத்தலாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டது.
சரி, ஏன் செவ்வாய்க்கிழமை என்கிற கதைக்கு இப்போது வருவோம்... அமெரிக்கர்களில் பலரும் கிறிஸ்தவர்கள்தான் என்பதால், அவர்கள் வழக்கப்படி சனி, ஞாயிற்றுக்கிழமைகள் ஓய்வெடுப்பதற்கும் வழிபடுவதற்கும் செலவழிப்பார்கள். அதன் காரணமாக அந்த இரண்டு கிழமைகள் தவிர்க்கப்பட்டன. புதன்கிழமைகளில் அமெரிக்காவிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும் சந்தைகள் நடைபெற்று வந்த காரணத்தால் அந்தக் கிழமையும் தவிர்க்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பிரதான நகரங்களில் மட்டுமே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் கிராமங்களில் வசிப்பவர்கள், வாக்களிப்பதற்குப் பல மைல் தூரம் பயணம் செய்து வர வேண்டியிருக்கும். அமெரிக்காவில், அந்தச் சமயத்தில் போக்குவரத்து வசதிகளும் அவ்வளவாக இல்லை என்பதால், பயணம் செய்து வந்து வாக்களித்துவிட்டுத் திரும்பிச் செல்லவே ஒரு நாளாகும். எனவே, வழிபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமையிலும் சந்தை காரணமாக, புதன்கிழமையிலும் பயணம் செய்ய முடியாது என்பதால் திங்கள், வியாழன் ஆகிய இரண்டு கிழமைகளும் தவிர்க்கப்பட்டன. பயணம் செய்வதற்கு திங்கட்கிழமைதான் ஏதுவாக இருக்கும் என்பதால், செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்தப் பாரம்பர்ய முறையை தற்போது வரை கைவிடாமல் பின்பற்றிவருகிறது அமெரிக்கா.
அதேபோல அதிபர் பதவியேற்புக்கான தேதியும் தீர்மானத்தில் இருக்கிறது. தேர்தல் நடைபெற்ற நாளின் இரவிலோ அல்லது அதற்கடுத்த நாளிலோ அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். இருந்தும் ஜனவரி 20-ம் தேதிதான் அவர் அதிபருக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகைக்குள் நுழைய முடியும்.
`அமெரிக்காவில் தேர்தல் அன்று பொது விடுமுறை கிடையாது. இதன் காரணமாகத்தான் அதிகம் பேர் வாக்களிக்க வருவதில்லை’ என்கிற கருத்தும் சொல்லப்படுகிறது. நவம்பர் 11-ம் தேதியை முதியோர் தினமாகக் கொண்டாடுகிறது அமெரிக்கா. அன்று அங்கு பொது விடுமுறை. அந்தத் தேதியில் தேர்தல் நடத்தப்பட்டால் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்கும் என்கிறார்கள் அந்நாட்டு இளைஞர்கள். ஆனால், முன்கூட்டியே வாக்களிக்கும் முறை பின்பற்றப்படுவதால், தேர்தல் தேதியில் மாற்றம் வேண்டாம் என்கிற கருத்துகளும் சொல்லப்படுகின்றன.
Also Read: ஆச்சரியங்களும் விநோதங்களும் நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்! - ஒரு விரிவான பார்வை #MyVikatan
முன்கூட்டியே வாக்குப்பதிவு?
அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் தேர்தல் தேதிக்கு முன்பாகவே வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. தேர்தல் அன்று வாக்களிக்க வர முடியாதவர்களுக்காக இந்த முறை கொண்டுவரப்பட்டது. வாக்குச்சாவடிகளிலோ, தபால் மூலமோ இந்த முறையைப் பயன்படுத்தித் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களிக்கலாம்.
இந்த ஆண்டுக்கான அதிபர் தேர்தலில், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி ஒன்பது கோடிக்கும் அதிகமானோர் இதுவரை வாக்களித்திருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை முன்கூட்டியே வாக்களித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. காரணம், கொரோனா அச்சம்... வாக்குப்பதிவு தினத்தன்று அதிக கூட்டம் சேரும் என்பதால், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையை அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு, முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் முறையைப் பயன்படுத்தி 36 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு 43 சதவிகிதத்துக்கு அதிகமானோர் இந்த முறையைப் பயன்படுத்தி வாக்களித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக டெக்ஸாஸ், ஃப்ளோரிடா உள்ளிட்ட பெரும் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதில் ஆர்வம்காட்டியதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கருத்துக் கணிப்புகள்!
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி பல ஊடகங்களும் கருத்துக் கணிப்புகள் நடத்தின. அவற்றில்ல் பெரும்பாலானவற்றில், `ஜோ பைடன்தான் வெற்றி பெறுவார்’ என்ற முடிவுகளே கிடைத்தன. தற்போது, தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக என்.பி.சி செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பு நடத்தியிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பில் 10 புள்ளிகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார் ஜோ பைடன்.
இந்தக் கருத்துக் கணிப்பில் ஜோ பைடனுக்கு ஆதரவாக 52 சதவிகிதம் பேரும், ட்ரம்ப்புக்கு ஆதரவாக 42 சதவிகிதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள். அமெரிக்காவிலுள்ள சில மாநிலங்கள் வாழும் மக்கள், பாரம்பர்யமாகவே ஒரு கட்சிக்கு மட்டும்தான் வாக்களிப்பார்கள். அப்படியில்லாமல் இரு கட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களிக்கும் மாநிலங்களாகத் திகழும் அரிசோனா, ஃப்ளோரிடா, ஜார்ஜியா, மிச்சிகன், நியூ ஹாம்ப்ஷயர், விஸ்கான்ஸின் உள்ளிட்ட 12 மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் ஜோ பைடனே முன்னிலையில் இருக்கிறார்.
Also Read: ட்ரம்ப்: அப்போ `மாஸ்க் போட மாட்டேன்'; இப்போ `காரில் சுற்றுவேன்' - கொரோனா சிகிச்சையிலும் அடாவடி!
முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தி வாக்களித்தவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ஜோ பைடன் முன்னிலைவகித்தாலும், தேர்தல் தேதியன்று வாக்களிக்க உள்ளவர்களில் பலரும் ட்ரம்ப்புக்கு ஆதரவாக இருப்பதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.
கடந்த 2016 அதிபர் தேர்தலில், ட்ரம்ப் அரியணை ஏறுவதற்குக் காரணமாக இருந்த மிச்சிகன், பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஃப்ளோரிடா, விஸ்காஸின் உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் தற்போது ஜோ பைடன்தான் முன்னிலையில் இருக்கிறார் என்பது ட்ரம்ப் தரப்புக்குச் சறுக்கலாக அமைந்திருக்கிறது. அதேநேரத்தில் கடந்த அதிபர் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளில் ஹிலாரி கிளிண்டன்தான் அதிபர் ஆவார் என்று சொல்லப்பட்ட நிலையில், அதிபராகி வெள்ளை மாளிகையில் கால் பதித்தார் ட்ரம்ப் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப், ஜோ பைடன் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது என்பதைத்தான் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் நமக்குச் சொல்கின்றன. ``எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியதாகத்தான் அமெரிக்க அதிபர் தேர்தல்கள் இருக்கும். நவம்பர் 4-ம் தேதி யார் அதிபர் என்பது தெரிந்துவிடும். எனவே, அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்'' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/international/why-us-elections-are-held-only-on-tuesdays
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக