கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் கோழிப்போர்விளையில் செயல்பட்டு வருகிறது. இங்கு வாகனங்கள் பதிவு செய்வது, வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் என அனைத்திற்கும் லஞ்சம் கொடுத்தால்தான் நடக்கும் என்ற நிலை உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீஸார் கோழிப்போர்விளையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது சிலர் காம்பவுண்ட் சுவரில் ஏறிக் குதித்து தப்பி ஓடினர். சிலர் தங்கள் கையில் இருந்த பணத்தை அங்கு போட்டுவிட்டு ஓடினர். அங்கிருந்த ஒரு புரோக்கரிடம் இருந்து மட்டும் ரூ.57,000 கைப்பற்றப்பட்டது. மேலும் ரெய்டின் முடிவில் கணக்கில் வராத ரூ.86,590 கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் லஞ்சப் பணத்தை வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியில் வாகன ஆய்வாளரிடம் ரூ.1.69 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளது நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை.
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வாகன ஆய்வாளராக இருப்பவர் பெருமாள். இவர் வாகன பதிவு போன்றவைகளுக்கு லஞ்சமாக பணம் வசூல் செய்ததாகவும், அந்த பணத்துடன் மார்த்தாண்டத்தில் இருந்து திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Also Read: மார்த்தாண்டம்:`பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள் விற்பனை?’ - சர்ச்சையில் சிக்கிய போலீஸ்
அப்போது அந்த வழியாக வந்த பெருமாளின் காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அவரது காரில் ஒரு லட்சத்து அறுபத்தி ஒன்பதாயிரம் ரூபாய் லஞ்சப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கான கணக்குகள் எதுவும் ஆய்வாளரிடம் இல்லை. லஞ்சப் பணத்தில் பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுக்களாகவே இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும் ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எதெற்கெடுத்தாலும் லஞ்சம் என்ற நிலையை மாற்ற உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
source https://www.vikatan.com/news/crime/money-seized-from-marthandam-rto-office-vehicle-inspector
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக