Ad

வியாழன், 5 நவம்பர், 2020

``கூட்டத்தைப் பார்த்ததும் டான்ஸ் ஆடிட்டேன்!” - `மூக்குத்தி அம்மன்' அனுபவம் பகிரும் எல்.ஆர்.ஈஸ்வரி

நயன்தாரா நடிப்பில், ஆர்.ஜே பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கியிருக்கும் படம் `மூக்குத்தி அம்மன்’. எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம் விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பின்னணிப் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, இந்தப் படத்தில் பக்திப் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் யூடியூபில் வெளியாகி டிரெண்டிங்கில் உள்ளது.

`ஈஸ்வரி அம்மா மீண்டும் பாடியிருப்பதைக் காண்பதில் ஆச்சர்யமான மகிழ்ச்சி’ என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். `மூக்குத்தி அம்மனுக்கு பொங்க வைப்போம்’ எனத் தொடங்கும் இந்தப் பாடலில் பணியாற்றிய அனுபவம் குறித்து, எல்.ஆர்.ஈஸ்வரியிடம் பேசினோம்.

`` `மூக்குத்தி அம்மன்’ படத்தில் திருவிழாவில் வரும் அம்மன் பாடல் ஒன்றை நான் பாடணும்னு முடிவெடுத்த ஆர்.ஜே பாலாஜி என்னை அணுகினார். `பாடுவதற்காகத்தானே இந்த ஜென்மம் எடுத்திருக்கேன். பாடத் தயார்’னு சொன்னேன். இசைத்துறைக்கு வந்த தொடக்கம் முதலே திரைப்படத்தின் கதை கேட்கும் பழக்கம் எனக்கு இல்லை. நம்பி அழைக்கும் இசையமைப்பாளர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப பாடுவதே என் நோக்கம். அதன்படி, கடந்த ஆண்டு இறுதியில் பாடல் ரெக்கார்டிங் போனேன். பாலாஜி தம்பியும், புதிய இசையமைப்பாளரான கிரிஷ் தம்பியும் பாடல் சூழலை விளக்கி என் விருப்பம்போல பாடச் சொன்னாங்க. பல்வேறு விதங்களில் அந்தப் பாடலைப் பாடினேன். `உங்களுக்குப் பிடித்ததை இறுதியாகப் பயன்படுத்திக்கோங்க’ன்னு சொன்னேன். சில மணிநேரத்தில் பாடல் ஒலிப்பதிவு முடிஞ்சுடுச்சு.

மூக்குத்தி அம்மன்

`இந்தப் பாடலின் காட்சியமைப்பிலும் நீங்களே பாடுவதுபோல நடிக்கணும்’னு பாலாஜி வலியுறுத்தவே, கடந்த ஜனவரில் நாகர்கோவிலில் நடந்த ஷூட்டிங்ல கலந்துகிட்டேன். குதூகலம்னா எனக்கு ரொம்பவே இஷ்டம். மொத்தப் படக்குழுவும் ஆரவாரம் செஞ்சு என்னை உற்சாகப்படுத்தி வரவேற்க, கூட்டத்தில் நானும் குழந்தையாகி நடனமாடி மகிழ்ந்தேன். தினேஷ் மாஸ்டர் சிறப்பா கோரியோகிராபி செய்திருந்தார். இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் எனக்கு வாழ்த்து சொல்றாங்க.

நான் பார்த்து வளர்ந்த, பாகுபாடுகள் பார்க்காத பிள்ளை ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு வாழ்த்து சொல்லியிருப்பது மகிழ்ச்சியா இருக்கு. தியேட்டரில் பக்திப் பாடல்களுக்கு மக்கள் நடனமாடி ஆரவாரம் செய்வாங்க. அந்த உற்சாகமும் பரவசமும் வீட்டில் இருந்து ஓ.டி.டி தளத்துல படம் பார்க்கும்போது இருக்காது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்தான், சிறிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு” என்பவர், திரையிசையில் 62 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.

எல்.ஆர்.ஈஸ்வரி

இசைத்துறை சாராத குடும்பத்தில் பிறந்தவர், கேள்வி ஞானத்தை மெருகேற்றிக்கொண்டு பின்னணிப் பாடகியானர். அந்த அனுபவம் குறித்துப் பேசுபவர், ``சின்ன வயசுல ரேடியோவில் ஒரு பாடலைக் கேட்டால் அப்படியே பாடுவேன். இசைக்காக எந்தப் பயிற்சியும் எடுத்துக்கலை. என் ஏழு வயசுல அப்பா காலமாகிட்டார். படிக்க வாய்ப்பு கிடைக்கலை. இசை கத்துக்க வசதியில்லை. இந்தப் போராட்ட நிலையில்தான், கே.வி.மகாதேவன் அவர்களின் இசையமைப்பில் `நல்ல இடத்து சம்பந்தம்’ படத்தின் வாயிலாகப் பாடகியானேன். பயத்துடன் பாடிய அந்த ரெக்கார்டிங் அனுபவம் இன்னும் நினைவிருக்கு.

`பாசமலர்’ படத்துல பாடிய `வாராய் என் தோழி வாராயோ’ பாடல்தான் எனக்கு அடையாளம் கொடுத்துச்சு. பிறகு, எம்.எஸ்.விஸ்வநாதன் உட்பட பல ஜாம்பவான்கள் இசையில் வரிசையா நிறைய வெற்றிப் பாடல்கள் அமைஞ்சது. லூர்துமேரி ராஜேஸ்வரிதான் என் முழுப்பெயர். அதைச் சுருக்கி, `எல்.ஆர்.ஈஸ்வரி’ன்னு என் பெயரைப் பிரபலப்படுத்தியது திரையிசைத் திலகம் ஏ.பி.நாகராஜன் அவர்கள். `இந்தப் பொண்ணு பெரிய பாடகியா வரும்’னு பல மேதைகள் சொன்னதும் நடந்துச்சு. `சிவந்த மண்’ படத்துல `பட்டத்து ராணி’ பாடல் ஒலிப்பதிவில் 150 இசைக் கலைஞர்கள் வேலை செய்தோம். ஒருவர் சிறு தவறு செஞ்சாலும், மறுபடியும் முதல்ல இருந்து பாடலைப் பதிவு செய்யணும்.

எல்.ஆர்.ஈஸ்வரி

தொழில்நுட்பம் வளராத அந்தக் காலத்துல, அந்தப் பாடல் உட்பட கடினமான நிறைய பாடல்களை நேர்த்தியுடன் உருவாக்கினோம். அந்தப் பாடலின் இந்தி வெர்ஷனைப் பாட முடியாமல் சிரமப்பட்டதாகவும், `நீங்க பாடின கடினமான பாடல்களை உங்களைத் தவிர வேறு யாரும் பாட முடியாதுபோல. கிரேட்’னு லதா மங்கேஷ்கர் பலமுறை சொல்லி என்னை வாழ்த்தியிருக்காங்க. இப்படி நிறைய பசுமையான அனுபவங்கள் கிடைச்சிருக்கு. ஒருகட்டத்துல எனக்கு கிளப் பாடல்கள்தாம் அதிகம் கிடைச்சது. எது கிடைச்சாலும் அதை நிறைவா ஏத்துப்பேன். அந்த வகை பாடல்களை நான் பாடலைன்னா, நிச்சயம் வேறொரு பாடகி பாடியிருப்பாங்க. நஷ்டம் எனக்குத்தானே? அதனால, கிடைச்ச வாய்ப்புகள் எதுவானாலும் நிறைவாகப் பாடினேன்.

`புது மனிதன்’ படத்துல பாடகியாவே சின்ன ரோல்ல நடிச்சது மறக்க முடியாத அனுபவம். ஆர்.எம்.வீரப்பன் சார் மூலம்தான் அந்த வாய்ப்பு கிடைச்சுது. டிசம்பர் 31-ம் தேதி மாலையில் ஷூட்டிங் தொடங்குச்சு. எஸ்.ஜானகி பாடின பாடலை நான் பாடுற மாதிரி நடிச்சிருப்பேன். அடுத்த நாள் காலை வரை ஷூட்டிங் நடந்துச்சு. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சத்யராஜ் ஏற்பாடு செய்யவே, நள்ளிரவில் கேக் வெட்டி புதிய வருடத்தை வரவேற்றோம். நடிப்பு எவ்வளவு கஷ்டம்னு அந்த அனுபவத்தில்தான் தெரிஞ்சுகிட்டேன். பிறகு, எந்த நடிப்பு வாய்ப்பையும் ஏத்துக்கலை” என்று சிரிக்கிறார் எல்.ஆர்.ஈஸ்வரி. இவர் பாடிய `எலந்தப் பயம்’, `காதோடுதான் நான் பாடுவேன்’, `அடி என்னடி உலகம்’, `துள்ளுவதோ இளமை’ உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் இன்றளவும் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

மூக்குத்தி அம்மன்

இவரின் பாடல்கள் ஒலிக்காமல் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் நடப்பதில்லை. இதுகுறித்துப் பேசுபவர், ``அந்த வாய்ப்புகள் அதிகம் கிடைச்சது இப்பவும் எனக்கு ஆச்சர்யமான பெருமிதம்தான். கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த நான், இந்து மதப் பக்திப் பாடல்கள் தவிர, உருது மொழியில் இஸ்லாம் பாடல்களைக்கூட சிறப்பா பாடுவேன். எல்லாக் கடவுளையும் வணங்குவேன். இசைக்கும், பிறர் மீது அன்பு செலுத்தவும் எந்த மத வேறுபாடுகளும் கிடையாது. அதனாலதான், 1990-களில் நிறைய ஆல்பங்களில் அம்மன் பாடல்களைப் பாடினேன். கச்சேரிக்கு வெளியூர் போகும்போதெல்லாம் அந்தப் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் எல்லா அம்மன் கோயில்களிலும் ஒலிப்பதைக் கேட்டு பரவசப்பட்டிருக்கேன். இந்தக் கொடுப்பினை எத்தனை பேருக்குக் கிடைக்கும்னு தெரியலை.

இந்த நிலையில், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு திரையிசையில் இருந்து கொஞ்சம் விலகியிருந்தேன். திடீர்னு `ஒஸ்தி’ படத்துல `கலாசலா’ பாடல் வாய்ப்பு கிடைச்சது. சர்ப்ரைஸா அந்தப் பாடல் பெரிய ஹிட்டாகி, 14 விருதுகள் கிடைச்சது. `இந்த வயசுல இப்படியொரு வரவேற்பா?’ன்னு ஆச்சர்யப்பட்டேன். பிறகு, அவ்வப்போதுதான் சினிமாவில் பாடறேன். இப்போ `மூக்குத்தி அம்மன்’ பாடல் மூலம் மறுபடியும் மக்கள் மனசுல இடம் பிடிச்சிருக்கிறது மகிழ்ச்சியா இருக்கு. என்னால பிறருக்கு எந்தக் கஷ்டமும் வராத வகையில், ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்கறேன்” என்கிறார் நிறைவுடன்.



source https://cinema.vikatan.com/music/lreswari-shares-mookuthi-amman-movie-working-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக