Ad

வியாழன், 5 நவம்பர், 2020

சிவகாசி: `ராஜாஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்கத் தடை!’ - ரூ.150 கோடி விற்பனை பாதிக்கும் அபாயம்

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. புத்தாடைகள், பட்டாசுக் கடைகளில் விற்பனை களை கட்டி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல், காற்று மாசுபாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி, அம்மாநில முதல்வர்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளனர். ராஜஸ்தானில் 7-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும், ஒடிசாவில் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையிலும் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு விற்பனை

இந்த இரண்டு மாநிலங்களுக்கும் சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசுகள், சிவகாசியிலிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள தடையால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். பட்டாசு விற்பனை மீதான தடையை நீக்கிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரண்டு மாநில முதல்வர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து டான்பாமா சங்கத்தின் (தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்) தலைவர் கணேசனிடம் பேசினோம், ”விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும், பெரியதுமாக 1,070 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு உள்ளே 3 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருட்கள் உற்பத்தியில் 5 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டாசு

1,070 பட்டாசு ஆலைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ரூ.3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் உற்பத்தி செய்துட்டு வர்றோம். ஆனால், கொரோனா ஊரடங்கினால் இந்தாண்டு 30 சதவீத உற்பத்திக் குறைவால், ரூ. 800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கொரோனாவைக் காரணம்காட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் வேதனையை அளிக்கிறது. இந்த அறிவிப்பால் ரூ.150 கோடி வரை விற்பனை பாதிக்கப்படும். கொரோனா பாதிப்பிற்கும் பட்டாசு வெடிப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.

தடைசெய்யப்பட்ட ரசாயன மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு விற்பனையை மட்டுமே தடை செய்ய வேண்டும். அரசு விதிகளின்படி குறைவான உமிழ்வு, குறைந்த டெசிபெல் திறன் கொண்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசு உற்பத்தியை செய்து வருகிறோம். உற்பத்திக்குப் பிறகும் தகுந்த சோதனை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பட்டாசு தொழிலாளர்களுக்கு தீபாவளிதான் ஆறுதலாக உள்ளது.

பட்டாசு

கொரோனாவைக் காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தடை அறிவிப்பு தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எங்களின் பட்டாசு விற்பனைக்கு இரண்டு மாநில அரசுகளும் அனுமதி அளிக்க வேண்டும்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/fire-crackers-sales-and-explosion-banned-by-rajasthan-and-odisha150-crore-rupees-sale-affect

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக