Ad

சனி, 21 நவம்பர், 2020

அடியார்களே எழுப்பும் சிவாலயம்... திருப்பணிக்கு நீங்களும் பங்களிப்பு வழங்கலாம்!

தொண்டை நாட்டின் கோயில் மாநகரமாம் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில், தாமல் என்ற ஊரை அடுத்துள்ள கிராமம் சங்கரன்பாடி. இயற்கை வளமும் புராணச் சிறப்புகளும் கொண்ட இவ்வூரில், சிவபெருமானுக்குப் பழங்காலத்து இன்கா முறைப்படி பிரமீடு வடிவில் சிவாலயம் எழுப்பும் பணியில் இறங்கியிருக்கிறார்கள் அடியார் பெருமக்கள்.

"அருள்மிகு ஆத்மநாதர் எனும் திருப்பெயருடன் சிவபெருமான் லிங்கத் திருமேனியராக எழுந்தருளப் போகும் எங்கள் ஊர் கோயில், பிரமீடு வடிவ பீடமாக அமையும்’’ என்கிறார்கள் அடியார்கள்.

பிரமீடு பீடத்தில் முல்லைப் பந்தலின் கீழ் லிங்க மூர்த்தம்

சிவாலயம்

சுமார் 22 அடி உயரத்தில் பிரமீடு வடிவில் ஒரு பீடம் போன்று கற்கோயில் எழும்புகிறது. அதன் உச்சியில் முல்லைப் பந்தலின் கீழ் சிவலிங்கம் அமைக்கப்படுகிறது.

சிவலிங்கம் அமையும் பகுதிக்குக் கீழே பிரமீடு அமைப்பின் உள்புறத்தில் தியான மண்டபம் அமையும். தலைவனான ஈசனை அகத்தில் காண விரும்பும் ஆன்மாக்கள் தவத்தில் அமர்வதற்கு வசதியான இடம் எனும் அடிப்படையில் இப்படியான அமைப்பாம்.

மணி, மந்திரம், ஒளஷதம் மூன்றும் பிரதானமாகத் திகழும் நம் பழங்கால வழக்கப்படி மணியாலான லிங்கம், திருமுறைகள் ஒலிக்கும் மந்திர வழிபாடு, பல்வேறு மூலிகைகள் (ஒளஷதம்) இங்கு வளர்க்கப்பட்டு, அவற்றால் அர்ச்சனை அபிஷேகம் ஆகியவை நிகழும் வண்ணம் இந்தக் கோயில் திகழும் என்கிறார்கள்.

ஆலயம், தியான மண்டபம் மட்டுமன்றி, திருமுறை ஓதும் மேடை, பசு மடம், அடியார் தங்கும் குடில்கள், நந்தவனம், திருமுறை தேவாலயம், இலவச உணவு வழங்குமிடம் ஆகிய அனைத்தும் இங்கு அமையவுள்ளன.

அடியார்களுக்கே முதல் மரியாதை!

காலம், இனம், மொழி என்று எந்த வேறுபாடும் இன்றி நெற்றியில் நீறணிந்த எவரும் இங்கு வந்து ஈசனைத் தொழலாம். இங்கு அர்ச்சகர் இல்லை; நந்தி இல்லை; அம்பாள் இல்லை; கொடிமரம் இல்லை; சிவத்தைத் தவிர எதுவுமில்லை. திருப்பெருந்துறையைப் போலவே, இங்கும் அடியார்களுக்கே முதல் மரியாதை! குருந்த மரமும் திருமுறைகளும் மட்டுமே இங்கு சைவ சமய திரு அடையாளங்களாக விளங்கும் என்கிறார்கள் இந்த ஆலயத்தை உருவாக்கவிருக்கும் அடியார்கள். ஆக, இத்தலம் வட திருப்பெருந்துறையாகத் திகழும் என்பது அவர்களின் நம்பிக்கை.

`ஜோதிமலை இறைப்பணிக் கூட்டம்’ அமைப்பின் திருவடிக் குடில் சுவாமிகளின் ஆசியோடும், சிவனடியார் சரவணன் ஐயா முதலானோரின் வழிகாட்டுதலுடன் இந்தக் கற்கோயிலைச் சிவன டியார்களே முன்னின்று உருவாக்குகிறார்கள் என்பது குறிப் பிடத்தக்கது. கோயில் அமையும் இடத்தைச் சீர்செய்வது, கல் சுமப்பது, திருப்பணியில் ஈடுபடும் அடியார்களுக்கான உணவு சமைப்பது... என அனைத்துப் பணிகளையும் அடியார்களே செய்து வருகிறார்கள்.

சிவாலயம்

அற்புதத் திருப்பணியில் நீங்களும் இணையலாம்... எப்படி?

அடியார்கள் மேற்கொள்ளும் ஆலயப் பணியில் நம் வாசகர்களும் பங்கேற்கும் பெரும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் 29.11.2020 ஞாயிறு அன்று திருக்கார்த்திகை வருகிறது. தீபத் திருநாளான அன்று, அருள்மிகு ஆத்மநாதருக்குப் புது ஆலயம் அமையப்போகும் இந்த க்ஷேத்திரத்தில் விசேஷமான வழிபாட்டு வைபவங்களுக்கு அடியார்கள் தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

* இயற்கை முறையில் மாவளி சுற்றுதல்

* திருப்பதிக முற்றோதுதல்

* திருக்கயிலாய வாத்திய முழக்க வழிபாடு

* குழந்தைகளுக்கான பேச்சுப்போட்டி

* அருள்மிகு ஆத்மநாதருக்கு விசேஷ வழிபாடுகள்

என களைகட்டப்போகிறது சங்கரன்பாடி தலத்துத் திருக்கார்த்திகை திருவிழா!

தாமரைப்பூக்களால் ஆன புஷ்பலிங்க தரிசனம்

மேலும், வருடம்தோறும் திருவண்ணாமலையில் சக்திவிகடன் சார்பில், பக்தர்கள் தரிசனத்துக்காக க்ஷணிக லிங்கம் ஒன்று அமைக்கப்படும். அவ்வகையில் கடந்த வருடங்களில் முறையே தர்ப்பை லிங்கம், ருத்ராட்ச லிங்கம், மூலீகை லிங்கம் ஆகியவை அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

அவ்வகையில், இந்த வருடம் சங்கரன்பாடி தலத்தில் தாமரைப் பூக்களால் ஆன புஷ்பலிங்கம் அமைக்கப்படவுள்ளது. நம் தோஷங்கள், கவலைகள், தடைகள் அனைத்தையும் போக்கும் வல்லமை புஷ்ப லிங்கத்துக்கு உண்டு என்கின்றன ஞானநூல்கள். அவ்வகையில் தாமரைப்பூ சிவலிங்கம் மிக உன்னதமான பலனை வழங்கும்.

தீபம் ஏற்றுவோம் திருப்பணிக்குப் பங்களிப்போம்...

சிவாலயம்

நடப்புச் சூழலில், பெருந்தொற்று பாதிப்பைக் கவனத்தில் கொண்டு அரசு வழிகாட்டலின்படி உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நிகழவுள்ளது சங்கரன்பாடியின் திருக்கார்த்திகை வைபவம். அற்புதமான இந்த வைபவத்தில் வாசகர்களும் பக்தர் களும் நேரில் கலந்துகொள்ள இயலாத சூழலில், அவர்கள் தங்களின் பங்களிப்பைத் திருப்பணிக்கு வழங்கும் விதம் அவர்கள் சார்பில் 1,008 தீபம் ஏற்றவுள்ளார்கள் அடியார் பெருமக்கள்.

ஆக, இந்த அற்புத வைபவத்தில் வாசகர்களாகிய உங்களின் பங்களிப்பும் அவசியம் இணையட்டும். அழகான முறையில் அபூர்வமாக அமையவுள்ள இந்தச் சிவாலயத் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பங்களிப்பை பக்தர்கள் வழங்கலாம்.

அவ்வாறு வழங்கும் அன்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் சார்பில் - அவர்கள் நலன் வேண்டி, சங்கரன் பாடி தலத்தில் (1,008 தீபம் ஏற்றுதல் வைபவத்தில்) ஒரு தீபம் ஏற்றி வைக்கப்படும். மட்டுமன்றி, அவர்களின் வேண்டுதல்கள் - பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற ஆத்மநாதரிடம் விண்ணப்பம் செய்து திரு முறைகள் ஓதப்படும். விசேஷ பிரார்த்தனையும் அபிஷேகமும் செய்விக்கப்படும். நம் உள்ளம் ஒளிர - வாழ்க்கை மிளிர, சங்கரன்பாடி தலத்தில் தீபம் ஏற்ற நம் பங்களிப்பை வழங்குவோம்.

தீப சங்கல்ப விவரங்களுக்கு: 7397430999 | 9003803959



source https://www.vikatan.com/spiritual/temples/you-can-contribute-to-this-lord-siva-temple-to-be-built

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக