Ad

சனி, 21 நவம்பர், 2020

திரைக்கு வெளியேயும் வென்றுவிட்டாள் `பொம்மி'... மஞ்சுவுக்கும் நீலாம்பரிக்கும் நடந்தது என்ன?

சூரரைப் பலரும் போற்றுகிறார்கள். செல்வமும் செல்வாக்கும் இல்லாத ஒரு கிராமத்து இளைஞன், சிவப்பு நாடாக்களையும் சதி வலைகளையும் முறித்துக்கொண்டு பறக்கிற கதை இது. நாயகன் மாறன் போற்றுதலுக்கு உரியவன்தான். தமிழ் சினிமா நாயகர்கள் இதற்கு முன்பும் பல முறை போற்றப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த முறை நாயகனுடன் சேர்த்து நாயகியும் போற்றப்படுகிறாள். அதுதான் சிறப்பு.

பொம்மி... தமிழ் சினிமாவின் குறிஞ்சி!

மாப்பிள்ளையைப் பார்க்க, பெண் புறப்பட்டு வருகிற காட்சியோடுதான் படம் தொடங்குகிறது. நாயகிக்கான தனி அடையாளம் அங்கேயே தொடங்கிவிடுகிறது.

பறக்கும் கனவுடன் ஒவ்வொரு கதவாக நாயகன் தட்டிக்கொண்டிருக்கும்போது, குடும்பம் மனைவியின் வருமானத்தில்தான் நடக்கிறது. ஒரு காட்சியில் எச்சிலைக்கூட்டி விழுங்கிக்கொண்டு மனைவியிடம் கடன் கேட்கிறான் கணவன். பல குடும்பங்களில் பல கணவன்மார்கள் மனைவியிடம் கடன் வாங்கியிருப்பார்கள். என்றாலும் உத்தியோகம் இல்லாத கணவன், மனைவியிடம் காசு கேட்கிற காட்சியை இதற்கு முன்பு தமிழ்த்திரை பரீட்சித்துப் பார்த்திருக்கிறதா தெரியவில்லை. இப்போது அப்படியான காட்சி திரையேறியபோது, ஆகாயமும் பூமியும் அதனதன் இடத்திலேயே இருந்தன. ரசிகர்கள் எந்த ஒவ்வாமையையும் வெளிப்படுத்தவில்லை. மாறனோடு பொம்மியும் இணைத்துப் போற்றப்படுகிறாள். இந்த இடத்துக்கு தமிழ் சினிமா அத்தனை சுலபமாக வந்து சேர்ந்துவிடவில்லை.

`பொம்பள' பன்ச் டயலாக்குகள்! 

பொதுவாகத் திரையில் பெண் கதாபாத்திரங்கள் இரண்டு வட்டத்துக்குள்தான் நிறுத்தப்படுவார்கள்.

அமைதியான, அடக்கமான `நல்ல' பெண்.

மற்றும் `திமிர்ப்பிடித்த' பெண்.

`திமிர்ப்பிடித்த' பெண் கேரக்டர் என்றால், அவரை ஹீரோ அடக்கி வெற்றிகொள்வதுதான் கதை என்பதை எளிதாகச் சொல்லிவிடலாம்.

`மன்னன்' விஜயசாந்தி,

`சிங்காரவேலன்' குஷ்பு,

`படையப்பா' ரம்யாகிருஷ்ணன்...

உங்கள் நினைவுகளில் இந்த வரிசை ஹீரோயின்கள் இன்னும் பலர் எழக்கூடும்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான `படையப்பா'வில் நாயகன் பேசிய வசனம் இது:

`அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.'

வசனம் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. அது பஞ்ச் டயலாக் ஆனது. அதில் வியப்படைய ஒன்றுமில்லை. தமிழ்த்திரையின் `திமிர்ப்பிடித்த' பெண் வட்டத்துக்குள் நீலாம்பரி நிற்கவைக்கப்பட்டது, இதுபோன்ற ஹீரோயிஸ டயலாக்குகளுக்குத்தானே? `பெண்கள் ஆண்களுக்கு அடங்கியிருக்க வேண்டும்' என்ற பொதுபுத்திக்கு எளிதாகத் தீனிபோட்டு கைதட்டல்கள் வாங்க, நீலாம்பரிகள் இயக்குநர்களுக்கு அவ்வப்போது தேவைப்படுகிறார்கள்.

சூரரைப்போற்று

திரையரங்குகளில் உடைக்கப்பட்ட பெஞ்சுகள்! 

என்றாலும் இந்த விதியை மீற, அவ்வப்போது சில இயக்குநர்கள் முயன்றார்கள். அவர்களுள் ஒருவர் ருத்ரைய்யா. அவரின் நாயகி மஞ்சு, சுதந்திரமானவள். 1978-ம் ஆண்டு மஞ்சு திரைக்கு வந்தாள். அவளை ரசிகர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில், `அவள் அப்படித்தான்'. புரியாவிட்டால்கூடப் பரவாயில்லை, அவர்களை அவள் கலவரப்படுத்தவும் செய்தாள்.

ஒரு காட்சியில் தன் பாஸை மஞ்சு கன்னத்தில் அறைந்துவிடுவாள். படம் வெளியானது தீபாவளி நாளில். பெரிய நடிகர்களின் பெயர்களைப் பார்த்த ரசிகர்கள், மதுரை கல்பனா திரையரங்கை நிறைத்திருந்தனர். மஞ்சுவின் திமிரை ஒரு கட்டம் வரை சகித்துக்கொண்டும் இருந்தனர். ஆனால், அவள் ஓர் ஆண்மகன் மீது, அதுவும் தங்கள் அபிமான நட்சத்திரத்தின் மீது கை நீட்டினால்... அவர்கள்தான் எப்படிப் பொறுப்பார்கள்? அரங்கில் பெஞ்சுகளை உடைத்தார்கள். படம் சுருண்டுகொண்டது.

மாற்றத்தை ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்?!

மஞ்சுவின் காலத்தில்தான் பெண்கள் படிக்கக் கிளம்பியிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக வேலைக்குப்போகத் தொடங்கியிருந்தார்கள். என்றாலும், இவையெல்லாம் ஆண்களின் அனுமதி கிடைத்ததாலேயே. அந்தக் காலகட்டத்தில், ஒரு பெண் சுதந்திரமாக நிற்பதெல்லாம் செரித்துக் கொள்ளக்கூடியதாய் இல்லை... அது திரையாக இருந்தாலும். எனவே, மஞ்சு அன்றைய காலகட்ட ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாதவளாக இருந்தாள்.

நீலாம்பரியின் காலத்தில் பெண்கள் பரவலாக வேலைக்குப்போகத் தொடங்கிவிட்டார்கள். சொந்தமாகச் சம்பாதிக்கவும் செய்தார்கள். குரல் உயர்த்தினார்கள். கோபப்பட்டார்கள். அதனாலேயே, `அதிகமா கோபப்படுற பொம்பள' டயலாக்குகளுக்கு அதிக வரவேற்பும் கிடைத்தது.

மஞ்சுவிற்கான தண்டனை திரைக்கு வெளியே வழங்கப்பட்டது. ரசிகர்கள் வழங்கினார்கள். நீலாம்பரிக்கான தண்டனை திரைக்குள்ளேயே வழங்கப்பட்டது. படையப்பா வழங்கினார்.

மஞ்சுவும் நீலாம்பரியும் ஒன்றா என்றால், நிச்சயமாக அவர்கள் நேர்கோட்டில் வைக்கப்பட வேண்டிய ஒப்புமை அல்ல. அடிப்படையில் இருவரும் மாறுபடுகிறவர்கள். இருவேறு விதமாகப் படைக்கப்பட்டாலும், `ஒரு பொம்பள இப்படி இருக்கக் கூடாது' என்ற பொது புத்தியை வினையாற்ற வைக்கும் புள்ளியில் அவர்களையும், அவர்களுடன் தமிழ் சினிமாவின் பயணத்தையும் இணைத்துப் பார்க்கலாம்.

காலம் மாறி வருகிறது. மஞ்சுவை ஏற்றுக்கொள்ளாத, நீலாம்பரிக்கு சாபமிட்ட சமூகம், இப்போது `பொம்மி'யைப் போற்றுகிறது. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். மாறன் ஒரு காட்சியில், `என் மனைவி நல்லா சம்பாதிக்கிறாங்க; நான் உட்கார்ந்து சாப்பிடலாம்' என்று பேசுவதாக ஒரு வசனம் வரும். இது தமிழ்த் திரைக்குப் புதிது.

ரம்யா கிருஷ்ணன்

திரையை விட்டு இறங்கி, இப்போது கொஞ்சம் நிஜத்துக்கு வருவோம்.

பெண்கள் வேலை, தொழில் என்று போகத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் ஊதியம் பல குடும்பங்களுக்கு அவசியமாகவும் இருக்கிறது. ஆயினும், பெண் கணவனைவிடக் குறைவாகச் சம்பாதிக்க வேண்டும். அதுவே நன்று.

தற்காத்து, தற்கொண்டான் பேணி, பொருளீட்டி, வீடு பெருக்கி, விளக்கேற்றி, துணி மணிகள் துவைத்து, சின்ன குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்து, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லி, பெரியவர்களையும் பேணி, சோர்வு இல்லாதவளாக இருப்பவளன்றோ பெண்?

இல்லத்தரசன், வீட்டச்சன்... பெட்டிக்கோட் ஹஸ்பண்ட்! 

பெண்கள் மட்டும் சம்பாதிக்கிற வீடுகளில் கணவன்மார்களுக்கு முன்பொரு பெயர் இருந்தது. அது அகராதியில் இடம் பெறவில்லை. அந்தப் பெயர் ஆண்களுக்குள்ளேயே புழக்கத்தில் இருந்தது. இதை நான் அறிய நேர்ந்தது 1995-ல். ஹாங்காங்கில் ஒரு விருந்தின்போது, ஒரு நண்பர் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஓர் இளம் பெண்ணை எனக்கு அறிமுகம் செய்வித்தார். பெண்ணின் கணவரும் உடன் இருந்தார். அந்த இளைஞர் சமீபத்தில்தான் ஹாங்காங் வந்திருப்பதாகச் சொன்னார். தம்பதி அகன்றதும் நண்பர் என்னிடத்தில் கிசுகிசுப்பாக, `பெட்டிக்கோட் ஹஸ்பண்ட்' என்றார். எனக்குப் புரியவில்லை. அந்த இளைஞருக்கு வேலை இல்லையாம், மனைவியின் சம்பாத்தியத்தில்தான் ஜீவிக்கிறாராம். அப்படியான கணவர்களுக்கு அதுதான் பெயராம்.

வீட்டை நிர்வகிக்கும் பெண்ணுக்குத் தமிழ் கூறும் நல்லுலகில் `இல்லத்தரசி' என்று பெயர். `இல்லத்தரசன்' என்று தேடினால் சொல் வங்கியில் கிடைக்காது. ஏனெனில், ஆண் வீட்டை நிர்வகிப்பதை தமிழர்களால் நினைத்துப் பார்க்க முடியாது. ஆகவே அப்படியொரு சொல்லுக்கு அவசியம் நேரவில்லை. மலையாளத்திலும் வீட்டம்மை உண்டு. வீட்டச்சன் இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் வீட்டச்சன் உண்டு. முன்பு House husband என்று சொன்னார்கள். பின்னாளில் Stay-at-home-dad எனும் சொல்லால் பதிலீடு செய்தார்கள்.

அபர்ணா பாலமுரளி

அமெரிக்காவே ஆனாலும் வொர்க்கிங் வுமன் குற்றவுணர்வு கொள்ளத்தான் வேண்டும்! 

2015-ம் ஆண்டில் அப்படி ஒரு Stay-at-home-dad திரைக்கு வந்தார். படம் Intern. கதை கணவனைப் பற்றியதல்ல, மனைவியைப் பற்றியது. அவள் பெயர் ஜூல்ஸ். ஸ்டார்ட் அப் நிறுவனமாக அவள் தொடங்குகிற ஆன்லைன் ஆயத்த ஆடை நிறுவனம் கிடுகிடுவென்று வளரும். கணவன், வீட்டையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வான். ஒரு காட்சியில் கணவனுக்கு ஏதோ வேலை வந்துவிடும். ஜூல்ஸ் பிள்ளைகளை அழைத்துவரப் பள்ளிக்குப் போவாள். அங்கு காத்திருக்கும் பிற வீட்டம்மைகளோடு அவளுக்குப் பேசுவதற்குப் பொதுவாக எந்தச் செய்தியும் இராது. ஒரு கட்டத்தில், தான் குடும்பத்தைக் கவனிக்கவில்லையோ என்று உள்ளுக்குள் குமைவாள். அதாவது, சுற்றி இருப்பவர்கள் அப்படியான குற்ற உணர்வு அவளுக்கு வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இத்தனைக்கும் கதை நடக்கும் காலத்தில் அமெரிக்காவில் சுமார் 20 லட்சம் Stay-at-home-dad இருந்தார்கள். அங்கேயே அதுதான் நிலை.

பொம்மியைப் போற்றத் தொடங்கியிருக்கிறோம்! 

ஆணாதிக்க மனோபாவம் இன்றும் நம் வீடுகளில் இருக்கிறதுதான். ஆனால், காலம் காலமாக இறுகிப்போய்க் கிடக்கும் அதன் அடுக்குகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கப்பட்டு வருகின்றன. சுதா, பொம்மியைப் படைத்தது அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை வைத்துதான். மாறிவரும் இந்தச் சூழலில் மாறனும் பொம்மியும் தமிழ்த் திரையில் புதிய காற்றாக வீசுகிறார்கள்.

அபர்ணா பாலமுரளி

Also Read: `சூரரைப் போற்று' பொம்மியின் அந்த கேள்விகளுக்கும் பதில்களுக்கும்... நன்றி சுதா கொங்கரா!

படத்தில் ஒரு கட்டத்தில் மாறனுக்கும் பொம்மிக்கும் பிணக்கு வரும். அப்போது மாமனார் வீட்டார் மாறனைக் குத்திக் காட்டுவார்கள்... மனைவியின் சம்பாத்தியத்தில் வயிறு வளர்ப்பவனென்று. ஆனால், மாறனும் பொம்மியும் அதனால் பாதிக்கப்படுபவர்களாகப் படைக்கப்படவில்லை. பிணக்கு நீங்கியதும் இலக்கை நோக்கி ஓட்டத்தைத் தொடர்வார்கள். இப்போது ஓடுதளத்தின் இருபுறமும் ரசிகர்கள் கரவொலி எழுப்புகிறார்கள். அவர்கள் சூரனைப் போற்றுகிறார்கள். சூரம்மாவைப் போற்றுகிறார்கள். பாலினம் ஏதும் பாராது, சூரரைப் போற்றுகிறார்கள்!

- மு.இராமனாதன்


source https://cinema.vikatan.com/women/why-bommi-character-from-soorarai-pottru-movie-should-be-celebrate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக