Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

சென்னிமலை: `போலி சமூகநீதி... தி.மு.க-வை விரட்டுவதே பா.ஜ.கவின் நோக்கம்!' - எல்.முருகன்

தமிழக பா.ஜ.க சார்பில், அதன் மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் கடந்த 6-ம் தேதியிலிருந்து தமிழகத்தில் வேல்யாத்திரை நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் திருச்செந்தூரில் நிறைவுபெறும் இந்த வேல்யாத்திரை, நேற்று ஈரோட்டிற்கு வந்தது. ஈரோட்டில் பிரசித்திபெற்ற சென்னிமலை முருகன் கோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு எல்.முருகன் வேல் யாத்திரையைத் தொடங்கினார். அவருக்கு பா.ஜ.கவினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

சென்னிமலை முருகன் கோயிலில் எல்.முருகன்

அப்போது பேசிய எல்.முருகன், “முருகன் என்பது ஒரு சொல் அல்ல. நமது வாழ்வின் ஒளி. பல்லாயிரம் ஆண்டுகள் நாம் தொழுது வந்த இந்தக் கடவுளை, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் விடமாட்டோம். திருத்தணியில் ஆரம்பித்த வேல்யாத்திரை அறுபடை வீடுகளுக்கும் செல்லும். சென்னிமலையில் பாலதேவராயரால் அரங்கேற்றம் செய்யப்பட்ட கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு பின்னணியில் உள்ள திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகமூடியைக் கிழித்து பொதுமக்களுக்கு காட்டவே இந்த யாத்திரை மேற்கொள்கிறோம்” என்றார்.

மேடையில் பேசிய எல்.முருகன்

தொடர்ந்து பேசியவர், “நமது தாய்மார்கள் நவராத்திரி விரதம் இருந்து பூஜை செய்யும் நேரத்தில், பெண்களை கேவலமாகப் பேசியவர்களுக்கு ஸ்டாலின் வக்காலத்து வாங்குகிறார். அவர்கள் கட்சியில் ஒரு கோடி இந்துக்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் அனைவரும் இப்போது கேள்வி கேட்கத் தொடங்கி விட்டனர். அதனால்தான் யாத்திரைக்கு வரவேற்பு கூடியுள்ளது.

எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றதாக தகவல். இன்றைக்கு வரை இதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதலும் தெரிவிக்கவில்லை. அவர்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நமது சகோதரிகளுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்?...நாளைக்கு இவர்கள் ஆட்சிக்கு வந்தால் சுதந்திரமாக இருக்க முடியாது”.

வேல்யாத்திரையில் கலந்து கொண்ட பா.ஜ.கவினர்

“பட்டியலின சகோதர்களுக்கும் தி.மு.க, எதிராகதான் உள்ளது. அவர்களை அவமரியதையாக பேசுகின்றனர். இதுதான் அவர்களது சமூகநீதி. உண்மையான சமூகநீதி, சமத்துவம் பா.ஜக.,விடம்தான் உள்ளது. போலி சமூகநீதி, சமத்துவம் பேசுகின்ற தி.மு.க.,வை தமிழகத்தில் இருந்து விரட்டுவதே பா.ஜ.க.,வின் ஒரே நோக்கம். கறுப்பர் கூட்டத்தை நம் காவிக்கூட்டம் ஓட ஓட விரட்டும். நம் பண்பாட்டை, மரபுகளை இழிவுபடுத்துவோருக்கு தக்க பாடத்தை புகட்டுவோம். தமிழகம் ஆன்மிக பூமி, தெய்வீக பூமி என்பதை வெளிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் அடுத்து வரும் ஆட்சியை பா.ஜ.க.,தான் தீர்மானிக்கும். எத்தனை தடை வந்தாலும் இந்த யாத்திரை டிசம்பர் 7-ம் தேதி திருச்செந்தூர் வரை சென்று சேரும்” என்றார்.

Also Read: அரசுத் தரப்பில் எதிர்ப்பு! - நாம் தமிழர் கட்சியின் வேல் நடைப்பயணத்துக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்

எல்.முருகன் பேசி முடித்துவிட்டு யாத்திரைக்கு புறப்பட முயல எல்.முருகன், துணைத்தலைவர்கள் அண்ணாமலை, நரேந்திரன் உள்ளிட்ட 1,000- க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.



source https://www.vikatan.com/news/politics/tamilnadu-bjp-president-lmurugan-speaks-in-chennimalai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக