அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில் ``மின்னிசோட்டா மக்களே, வெளியே வாருங்கள், வாக்களியுங்கள்’’ என்று ட்வீட் செய்திருக்கிறார். அமெரிக்கத் தேர்தல் ஒரு வாரத்துக்கு முன்பு முடிவடைந்து, ஜோ பைடன் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைபற்றயிருக்கும் நிலையில் ட்ரம்ப் மகன் எரிக் ட்ரம்ப்பின் ட்வீட் வைரலாகி, நெட்டிசன்களிடம் சிக்கிக்கொண்டது.
சமீபத்தில், நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் உலகையே தன் பக்கம் ஈர்த்தது. ட்ரம்ப், ஜோ பைடன் இருவரும் அதிபர் பதவிகளுக்குப் போட்டியிட்ட நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றினர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ``இந்தத் தேர்தல் அமெரிக்க மக்கள் மீது ஜனநாயகக் கட்சியினர் செய்த மோசடி" என்று கூறி தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார். ஜோ பைடன், ``ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவருவது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துவதோடு, இது அதிபர் பதவியின் பாரம்பர்யத்தைக் கெடுப்பதாகவும் இருக்கிறது’’ என்று கருத்து தெரிவித்தார்.
இந்தநிலையில், டொனால்டு ட்ரம்ப்பின் இரண்டாவது மகன் எரிக் ட்ரம்ப், தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் ஆன பிறகு, 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்குமாறு மின்னிசோட்டா மக்களைத் தூண்டும்விதமாகப் பதிவிட்டிருந்த ட்வீட், சமூக ஊடகங்களில் வைரலானது. அதனால் நெட்டிசன்கள் மத்தியில் கேலி, கிண்டல்களைச் சந்தித்துவருகிறார் எரிக் ட்ரம்ப்.
Also Read: அமெரிக்கா: `விரைவில் ட்ரம்ப் ஆட்சியின் இரண்டாம் அத்தியாயம்..!’ - மைக் பாம்பியோ சொல்வதென்ன?
நேற்று, எரிக் ட்ரம்ப்பின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்ட ட்வீட் ஒன்று, பகிரப்பட்ட சில மணி நேரத்துக்குள் நீக்கப்பட்டது. Minnesota `get out and vote’ என்ற எரிக் ட்ரம்ப்பின் ட்வீட் மின்னிசோட்டாவிலுள்ள மக்களை `வீட்டைவிட்டு வெளியேவந்து வாக்களிக்க’த் தூண்டும்விதத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அமெரிக்கத் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் கழித்து, ஜோ பைடன் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைக் கைப்பற்றிய நிலையில் அமெரிக்கத் தேர்தலில் வாக்களியுங்கள் என்ற எரிக் ட்ரம்ப்பின் ட்வீட், சில நிமிடங்களில் நீக்கப்பட்டாலும், நெட்டிசன்களால் கவனிக்கப்பட்டு விவாதப் பொருளாகியிருக்கிறது.
தேர்தல் நடைபெறும் நாளன்று, எரிக் டிரம்ப் மக்களை வாக்களிக்க வலியுறுத்தும்விதமாக இது போன்ற ட்வீட்களை வெளியிட்டார், அவரது மின்னிசோட்டா ட்வீட் அநேகமாக ட்விட்டர் பக்கத்தில் ஷெட்யூல் (Schedule) செய்யும்போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் என்ற யூகத்துக்கு வழிவகுத்திருக்கிறது. இருப்பினும் எரிக் ட்ரம்ப், தவறான நேரத்தில் பதிவிட்ட ட்வீட் காரணமாக நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/a-week-after-election-donald-trumps-son-urges-people-to-vote
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக