Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

`அடுத்து சிக்கப்போகும் ஊழல் அதிகாரி யார்?’ -ரெய்டுக்குத் தயாரான வேலூர் விஜிலென்ஸ்

வேலூரில், ஊழல் செய்யும் அதிகாரிகளின் பட்டியலை ரகசியமாகத் தயாரித்து அதிரடியாக சோதனை நடத்திவருகிறது, லஞ்ச ஒழிப்புத்துறை. அக்டோபர் 13-ம் தேதி, மண்டல மாசுக்கட்டுப்பாடு வாரிய இணை தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வத்தை வளைத்து பிடித்தபோது, அவரது வீட்டிலிருந்து கட்டுக்கட்டாகப் பணம், கொத்துக் கொத்தாகத் தங்க நகைகள், நூறு கோடி மதிப்பிலான நிலப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் லஞ்ச ஒழிப்புத்துறையின் பிடியில், திருவலம் பேரூராட்சியின் செயல் அலுவலர் வெங்கடேசன் சிக்கினார். இல்லாத கம்பெனிகளிலிருந்து பேரூராட்சிக்குத் தேவையான பல்வேறு பொருள்களை வாங்கியதாகப் போலி பில்களை தயாரித்து லட்சக்கணக்கான ரூபாயை முறைகேடாக சுருட்டியதாக வெங்கடேசன்மீது புகார்கள் குவிந்தன.

பன்னீர்செல்வத்தின் பங்களா - கைப்பற்றப்பட்ட பணம்

இதையடுத்து அவர், சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ‘இரும்பு பிடித்த கையும், சிரங்கு வந்த கையும் சும்மா இருக்காது’ என்பதைப் போல், சிபாரிசு மூலம் மீண்டும் திருவலத்துக்கே வந்துவிட்டார் வெங்கடேசன். கொரோனா காலத்திலும் போலி பில்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய வெங்கடேசனின் ஆட்டத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அக்டோபர் 29-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்தது. திருவலம் பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், வெங்கடேசனிடமிருந்து கணக்கில் வராத 52,000 ரூபாய் ரொக்கப் பணமும், முறைகேட்டில் ஈடுபட்டதற்கான நிறைய ஆவணங்களும் சிக்கின.

Also Read: `இனி லஞ்சம் வாங்க மாட்டேன்; ஒருமுறை மன்னிச்சு விட்டுடுங்க!’ - கதறிய அதிகாரி

விசாரணையின்போது, செயல் அலுவலர் வெங்கடேசன் கண்ணீர் விட்டு கதறி அழுதார். `தெரியாமல் தப்பு பண்ணிட்டேன். இனி லஞ்சமே வாங்க மாட்டேன். இந்த ஒருமுறை மட்டும் மன்னிச்சு விட்டுடுங்க சார்...’ என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்மீது கரிசனம் காட்டவில்லை. இதையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வெங்கடேசன்மீது வழக்கு பதிவு செய்து துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைக்கு ஆவணங்களையும் அனுப்பியிருக்கிறது, லஞ்ச ஒழிப்புத்துறை.

வெங்கடேசன்

இந்த ரெய்டு நடந்த அதே நாள் இரவில், வேலூரிலுள்ள மூன்று டாஸ்மாக் கடைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அரசு விடுமுறைக்கு முந்தைய நாளில், பிளாக் மார்க்கெட்டில் மதுபானங்களை மொத்தமாக விற்பதும், நிர்ணயித்த விலையைவிடக் கூடுதல் விலைவைத்து விற்பனை செய்வது போன்ற முறைகேடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. மூன்று டாஸ்மாக் கடைகளிலிருந்தும் கணக்கில் வராத 61,000 ரூபாய் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அடுத்த ரெய்டுக்கும் தயாராகிவிட்டது. `இந்த முறை யார் சிக்கப்போகிறார்களோ என்றுதான் தெரியவில்லை’ என்று ஊழல் அதிகாரிகள் பலர் கலக்கமடைந்துள்ளனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/vellore-dvac-prepares-for-next-raid

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக