Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

திண்டுக்கல்: போலி பட்டா மூலம் நில அபகரிப்பு! - முன்ஜாமீன் பெற்ற சார்பதிவாளர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ளது ஒருதட்டு கிராமம். இங்கு வசித்துவந்த காமாட்சி என்பவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவியின் மகன் செல்லதுரை. மதுரை அலங்காநல்லூரில் வசித்துவந்த செல்லதுரை, தனக்கு குழந்தைகள் இல்லாததால், தனது தங்கை ராணிக்கு, தன் சொத்துகள் அனைத்தையும் எழுதி வைத்துள்ளார். அந்த சொத்துகள் அனைத்தும் நிலக்கோட்டையில் இருப்பதால், ராணியால் அதனை சரிவரக் கவனித்துக்கொள்ள முடியாத சூழல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மோசடி

இந்நிலையில், காமாட்சியின் முதல் மனைவியின் வாரிசுகள், செல்லத்துரையின் சொத்துகளை போலி பட்டா, ஆவணங்கள் தயார் செய்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அறிந்த ராணி, திண்டுக்கல் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

Also Read: அடுத்தடுத்த சிக்கலில் சார் பதிவாளர் சிவபிரியா!  - மலைக்க வைக்கும் நில மோசடி ஆவணங்கள்

அதன் அடிப்படையில், ஒருதட்டு கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் முத்துபாண்டி, நிலக்கோட்டை வட்டாட்சியர் ருக்மணி, நிலக்கோட்டை சார்பதிவாளர்கள் அருண்பிரசாத், சதாசிவம் மற்றும் டாக்மெண்ட் ரைட்டர்கள் பூர்ணசந்திரன், கோபால் மற்றும் காமாட்சியின் முதல் மனைவியின் மகன் கதிரேசன், மகள்கள் செல்வி, ராதா மற்றும் குடும்பத்தினர் என 15 பேர் மீது கடந்த ஜூலை 9-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆன நிலையில், இன்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ராணி புகார் மனு கொடுத்தார்.

புகார் மனு கொடுக்க வந்த ராணி

ராணியிடம் நாம் போசியபோது, ``எனக்கு என் அண்ணன் எழுதி வைத்த சொத்துகளை திட்டமிட்டே அபகரித்துள்ளனர். முதல்கட்டமாக நிலக்கோட்டையில் இருக்கும் 35 சென்ட் நிலத்தை போலி பட்டா, ஆவணங்கள் தயார்செய்து சென்னையில் உள்ள நபர்களிடம் விற்றுள்ளனர்.

அதன் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். காவல்துறையிடம் புகார் கொடுத்தும் எந்தப் பலனும் இல்லை. அனைவரும் அரசு அதிகாரிகளாக இருப்பதால் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். அனைவரையும் சஸ்பெண்டு செய்ய வேண்டும். என்னுடைய நிலத்தினை எனக்கு மீட்டு கொடுக்க வேண்டும்” என்றார்.

மோசடி

இதற்கிடையில், சில தினங்களுக்கு மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில், சார்பதிவாளர் அருண்பிரசாத் மற்றும் சதாசிவம் (தற்போது சேலம் மாவட்டப் பதிவாளர்) ஆகியோர், தங்களை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, ``விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதோடு முடித்துக்கொண்டனர்



source https://www.vikatan.com/government-and-politics/crime/nilakattai-registration-dept-officials-get-anticipatory-bail-in-illegal-land-registration-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக