Ad

புதன், 4 நவம்பர், 2020

சென்னை:`அக்காவுக்கு ஜூஸ்; மாமாவுக்கு விஷம்!' - சொத்துக்காக கொலை... சகோதரிகள் சிக்கிய பின்னணி

சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (47). பூ வியாபாரி. இவரின் மனைவி மீனாட்சி (40). கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 -ம் தேதி தர்மலிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழ்ந்துள்ளார். அடுத்து ஜனவரி 13-ம் தேதி மீனாட்சியும் இறந்தார். இந்தத் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. அதனால், மீனாட்சியின் அக்காள் லதா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு லதாவிடம் தர்மலிங்கத்தின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில நாள்களில் மீனாட்சி உயிரிழந்தார். அவரின் சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாலமுருகன், மைதிலி

இதற்கிடையில் தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், இருவரின் மரணத்திலும் சந்தேகம் இருப்பதாகக்கூறி மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டன. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருவரும் விஷத்தால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மயிலாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மயிலாப்பூர் போலீஸார் கூறுகையில், ``மீனாட்சிக்கு லதா, மைதிலி (37) என இரண்டு தங்கைகள். மைதிலியின் கணவர் பிரவீன் குமார், கோவையில் பிசினஸ் செய்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு சரவணன் என்கிற பிஷாக் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கோவையில் பிரவீன்குமார் தங்கியிருந்ததால் பூக்கடையில் வேலைபார்த்த பாலமுருகன் (29) என்பவருடன் மைதிலிக்கு பழக்கம் ஏற்பட்டது.

இந்தப் பழக்கத்தை மீனாட்சியும் தர்மலிங்கமும் கண்டித்துள்ளனர். அதனால், ஆத்திரமடைந்த மைதிலியும் பாலமுருகனும் இருவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். தர்மலிங்கத்துக்கு மது அருந்து பழக்கம் உள்ளது. அதனால் சில மாதங்களாக மதுவில் மெல்ல, மெல்லக் கொல்லும் விஷத்தைக் கலந்து கொடுத்துள்ளனர். அதைப்போல மீனாட்சிக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். தர்மலிங்கம் உயிரிழந்தபோது, அவர் மது போதைக்கு அடிமையானவர் என்பதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார் என்றே உறவினர்கள் கருதினர். அடுத்த சில நாள்களிலேயே மீனாட்சி உயிரிழந்ததும் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

லதா

தர்மலிங்கத்தின் சகோதரர் குமார், கொடுத்த புகாரின்பேரில் மீனாட்சியின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்தபோதுதான் விஷத்தால் அவர் உயிரிழந்த தகவல் தெரியவந்தது. ஆனால், யார் கொலை செய்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை. தர்மலிங்கமும் மீனாட்சியும் இறந்தபிறகு அவர்களின் வங்கி கணக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக 17 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. அதைக் கவனித்து, பணம் எடுத்தவர்கள் குறித்து விசாரித்தோம். அப்போது மைதிலியும் அவரின் ஆண் நண்பர் பாலமுருகனும் பணத்தை எடுத்ததைக் கண்டுபிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது விஷம் கொடுத்ததை ஒப்புக் கொண்டனர். அதனால் பாலமுருகன், மைதிலி ஆகியோரை ஓராண்டுக்குப் பிறகு கைது செய்து சிறையில் அடைத்தோம். இந்த வழக்கில் இன்னும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது என தர்மலிங்கத்தின் சகோதரர் குமார் தெரிவித்தார். அதுதொடர்பாக விசாரித்தபோது மைதிலியின் கணவர் பிரவீன்குமார் அவரின் மகன் சரவணன் ஆகியோரை கைது செய்தோம். அவர்கள் ஜாமீனில் உள்ளனர்" என்றனர்.

இதையடுத்துதான் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மலிங்கம், மீனாட்சி கொலை தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கை மயிலாப்பூர் போலீஸாரிடமிருந்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் டி.எஸ்.பி. கண்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீஸார் இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, மீனாட்சியின் இன்னொரு தங்கையான லதாவுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 3 ஆண்டுகளுக்குப்பிறகு லதாவை போலீஸார் கைது செய்தனர்.

கொலை

Also Read: ``தம்பியின் மரணத்துக்கு பழிக்குப்பழி; மதுபானம் வாங்கிக் கொடுத்து கொலை" - சென்னையில் நடந்த கொடூரம்

இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்குப்பிறகு மீனாட்சியின் தங்கை லதாவைக் கைது செய்துள்ளோம். அவரிடம் விசாரித்தபோது, ``எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அக்காளுக்கு குழந்தைகள் இல்லாததால் என்னுடைய குழந்தைகளை தத்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால், அவர்கள் என் குழந்தைகள் மீது அன்பாக இருந்தனர். ஆனால் முறைப்படி தத்தெடுக்கவில்லை. அக்காளும் மாமாவும் இறந்தபிறகு அவர்களின் பெயரிலிருந்த சொத்துக்கள், பணத்தை குடும்பத்தினர் பராமரித்து வருகின்றனர். அக்காள் மீனாட்சிக்கு நான், 13 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். அந்தப் பணம் அக்காளின் வங்கி கணக்கில் உள்ளது. அதற்காக அவர், எனக்கு 5 லட்சம் ரூபாய்க்கான செக்கை கொடுத்திருந்தார். அக்காள் இறந்தபிறகு அவரின் வங்கி கணக்கிலிருந்து 5 லட்சம் ரூபாயை எடுத்தேன். அதனால்தான் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டேன்' என்று கூறியுள்ளார்.

லதா கூறியது போல மீனாட்சியின் வங்கி கணக்கில் 13 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்படவில்லை என்பதை போலீஸார் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினர். அதனால், லதாவை கைது செய்தோம். மருத்துவமனையில் மீனாட்சி சிகிச்சையிலிருந்தபோது தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால், அக்காளுக்கு ஜூஸை கொடுத்ததாக லதா விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்துள்ளார். லதாவுக்கு உதவிய இன்னொருவரைத் தேடிவருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-sisters-in-mylapore-couple-murder

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக