Ad

புதன், 4 நவம்பர், 2020

புதுச்சேரி: `கடும் நிதி நெருக்கடியிலும் அரசு ஊழியர்களுக்கு இலவச பால், நெய்!’ - பாண்லே சர்ச்சை

அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள், அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என பல தரப்பினருக்கும் சம்பளம் வழங்க முடியாமல், மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க முடியாத அளவுக்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது புதுச்சேரி அரசு. தேவைக்கு அதிமான ஊழியர்கள் நியமனம், மோசமான நிர்வாகம் போன்ற காரணங்களால் அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வரிசையாக மூடு விழாவைச் சந்தித்து வருகின்றன.

பாண்லே

ஆனாலும், புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் பாலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாலும், அமுல் ஐஸ்கிரீம் நிறுவனத்துக்கு ஒரு சில தயாரிப்புகளை செய்து கொடுப்பதாலும்தான் தேவைக்கு அதிகமான ஊழியர்கள் இருந்தும் நஷ்டத்தை சந்திக்காமல் இயங்கிவருகிறது பாண்லே நிறுவனம். சமீபத்தில் அதன் இயக்குநராகப் பொறுப்பேற்ற சுதாகர் ஐ.ஏ.எஸ், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் பாண்லே நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பால், நெய் இலவசமாக வழங்குவது பற்றி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதில், பாண்லேவில் நிரந்தர ஊழியர்களாக 665 பேர், தற்காலிக ஊழியர்கள் 247 பேர் என மொத்தம் 912 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத ஊதியத்துடன் தினமும் 1 லிட்டர் பாலும், மாதம் 1/2 லிட்டர் நெய்யும் இலவசமாக வழங்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ரகுபதி, ``புதுச்சேரி அரசின் அனைத்து பொது நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கும்போது, பாண்லே ஒரு நிறுவனம் மட்டும்தான் லாபத்தில் இயங்குகிறது. 912 ஊழியர்களுக்கு தினமும் ஒரு லிட்டர் பால் இலவசமாக தருவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 32.83 லட்சம், மாதம் அரை லிட்டர் நெய் தருவதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 39.13 லட்சம் என ஆண்டுக்கு ரூ. 71.9 லட்சம் கூடுதலாகச் செலவாகிறது.

Also Read: புதுச்சேரி: `சட்டத்தைப் பின்பற்றாத மக்கள், இலவச சிகிச்சை கேட்பது ஏன்?’ - கொந்தளித்த கிரண் பேடி

இப்படி ஊழியர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இலவசப் பொருள்களைக் கொடுத்த அரசின் நெசவாலைகள், மளிகை பண்டகசாலையான அமுதசுரபி, பாசிக் போன்ற நிறுவனங்கள் தற்போது சம்பளம் வழங்க முடியாத அளவுக்கு நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. அப்படியான நிலைக்கு பாண்லேவைத் தள்ளிவிடக் கூடாது. பாண்லேவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி தற்போது 90,000 லிட்டராகக் குறைந்துவிட்டது. அதனை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இந்த இலவசங்கள் தேவையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதனால் அந்த நிதியைக் கொண்டு சிறப்பாக செயல்படும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை தரலாம். அத்துடன், பால், நெய்யை இலவசமாகத் தருவதற்கு பதில் மானிய விலையில் தருவதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆளுநருக்கு மனு அளித்திருக்கிறேன்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/puducherry-ponlait-company-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக