Ad

செவ்வாய், 3 நவம்பர், 2020

அதிர வைத்த `புல்லட் கும்பல்'; பாராட்டு பெற்ற அயர்லாந்து இளைஞர் - சிசிடிவி சுவாரஸ்யங்கள்! #CCTV

கடந்த பகுதியிலேயே சிசிடிவி கேமராக்கள் குறித்துப் பல விஷயங்களைப் பார்த்திருந்தோம். அந்தப் பகுதியைப் படிக்காதவர்கள் இந்த பத்தியின் கீழுள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்.

Also Read: `காவல்துறையின் நண்பன்; குற்றவாளிகளின் எதிரி' - சிசிடிவியும் சுவாரஸ்ய க்ரைம்களும்! #CCTV

முதல் பகுதியில், `குற்றங்கள் பலவும் சிசிடிவி கேமராக்கள் மூலம்தானே கண்டுபிடிக்கப்படுகின்றன... இனி காவலர்களுக்கு என்ன வேலை?' என்று கேள்வியெழுப்புபவர்களுக்கு உதாரணமாக காவல்துறையினர் ஓர் பிரபல வழக்கை முன்வைக்கிறார்கள் என்று முடித்திருந்தோம். அது என்ன வழக்கு என்பது குறித்துப் பார்ப்பதற்கு முன்பாக காவல்துறையினர் முன்வைக்கும் சில விஷயங்களைப் பார்த்துவிடலாம்.

தமிழக காவல்துறை

``சிசிடிவி-யின் உதவியோடு பல வழக்குகள் தீர்க்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், சென்னை, கோவை உள்ளிட்ட சில பெருநகரங்களில் மட்டுமே அதிக அளவிலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த நகரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்குத்தான் சிசிடிவி கேமராக்கள் பேருதவி புரிகின்றன. அதே சமயத்தில், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மிகச் சில வழக்குகள் மட்டுமே சிசிடிவி காட்சிகளின் உதவியோடு தீர்க்கப்படுகின்றன. சிறிய நகரங்களில் பதியப்படும் வழக்குகளில் காவல்துறையினர் தங்களது சமயோஜிதத்தைப் பயன்படுத்தித்தான் குற்றவாளிகளைக் கண்டறிகிறார்கள். சிசிடிவி இருந்தால் மட்டுமே ஒரு வழக்கு முடிந்துவிடாது திறமையாகச் செயல்பட்டு, தெளிவான விசாரணைகளை மேற்கொண்டால் மட்டுமே ஒவ்வொரு வழக்கையும் முடிக்க முடியும். அதற்கு உதாரணமாக `புல்லட் கும்பல்' வழக்கை எடுத்துக் கொள்ளலாம்'' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்த சிலர்.

அது என்ன `புல்லட் கும்பல்' வழக்கு என்கிறீர்களா? சமீபத்தில், உணவு டெலிவரி செய்பவர்களைப் போல உடை அணிந்து வந்து ராயல் என்ஃபீல்டு பைக்குகளைத் திருடிய கும்பலைக் காவல்துறை வளைத்துப் பிடித்ததே. அதே வழக்குதான். அந்த வழக்கில் பல ட்விஸ்ட்களுக்கு பிறகே குற்றவாளியை அடைந்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

புல்லட் கும்பல் வழக்கில், முதல்கட்டமாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் குமாரின் புல்லட் வாகனம் எழும்பூரிலிருந்து காணாமல் போனது. அது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் குமார். அதையடுத்து சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் தனிப்பிரிவு காவல்படை ஆகியவற்றில் பணிபுரியும் மூன்று காவல்துறை அதிகாரிகளின் புல்லட்கள் அடுத்தடுத்து காணாமல் போயின. இதையடுத்து காணாமல் போன புல்லட்கள் தொடர்பாகப் பதிவான வழக்குகள் குறித்து சென்னை காவல்துறையினர் ஆராய்ந்தனர். ஆராய்ந்தவர்களுக்கு, அதிர்ச்சிதரும் புள்ளிவிவரம் ஒன்று கிடைத்தது.

ஆம்! இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், சென்னை கிழக்கு மண்டலக் காவல்துறையின் கட்டுபாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் 68 புல்லட் வாகனங்கள் காணாமல் போயிருந்தன. சுதாரித்துக் கொண்ட சென்னைக் காவல்துறை, `இதற்கு மேல் ஒரு புல்லட்கூட மாயமாகக்கூடாது. அதற்குள்ளாகக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்' என்ற சபதத்தோடு தனிப்படை அமைத்தது. வாகனங்கள் திருடு போன பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பலவற்றையும் சோதனை செய்தும் தனிப்படை காவல்துறையினருக்கு சிறிய துப்புகூட கிடைக்கவில்லை.

இந்தநிலையில், தனிப்படையில் பணியாற்றிய அபிராமபுரம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் சரவணகுமாருக்கு எழும்பூரில் திருடப்பட்ட புல்லட் வாகனம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் கிடைத்தன. அதில், பல்சர் பைக்கில் வரும் இளைஞர்கள் இருவர், புல்லட்டின் லாக்கைச் சில நொடிகளில் லாகவமாக உடைப்பதும், தொடர்ந்து மற்றோர் இளைஞர் அதை ஓட்டிச் செல்வதும் பதிவாகியிருந்தன. புல்லட் கும்பல் சிக்கிவிட்டது என்று நினைத்தவருக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளில் புல்லட்டை காணவில்லை. மாறாக இரண்டு தெருக்கள் தாண்டியிருக்கும் சிசிடிவி கேமரா பதிவில் பார்த்தபோது அதே இளைஞர்கள் மீண்டும் பல்சரில் சென்றுகொண்டிருந்தார்கள். இரண்டு தெருவுக்கு இடைப்பட்ட தூரத்தில் மாயமாகியிருந்தது புல்லட். பல்சரில் சென்ற இளைஞர்கள் முகக்கவசமும் தலைக்கவசமும் அணிந்திருந்ததால் அடையாளம் தெரியவில்லை. அந்த பல்சரின் எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில் அது கும்மிடிப்பூண்டியில் காணாமல் போன வாகனம் என்பது மட்டும் தெரிய வந்தது.

சிசிடிவி

தொடர்ந்து தனிப்படை காவலர்களுக்கான வாட்ஸப் க்ரூப்பில் இது குறித்துப் பதிவு செய்தார் சரவணகுமார். பிற இடங்களில் திருடப்பட்ட புல்லட்டுகளும் இதே போலத்தான் திருடப்பட்டுள்ளன என்பது வாட்ஸப் க்ரூப்பில் மற்ற பகுதி காவலர்களுடன் நடந்த உரையாடலில் தெரியவந்தது. இதையடுத்துதான், திருடப்பட்ட புல்லட்கள், அடுத்தடுத்த சில தெருக்கள் தள்ளி எங்கேயோ பதுக்கிவைக்கப்படுகின்றன என்பதை யூகித்தார்கள் காவலர்கள்.

இந்தநிலையில், ஒருநாள் இரவு புல்லட் வாகனம் திருடப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள தெருவுக்குச் சென்றார் காவலர் சரவணகுமார். அங்கே கன்னாபின்னாவென்று நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு நடுவே நின்று கொண்டிருந்தது திருடு போன ஒரு கறுப்பு புல்லட். உடனே வாகனத்தைக் கைப்பற்றினால் திருடர்கள் தப்பிவிடுவார்கள் என்பதால் அவர்களுக்காகக் காத்திருந்தார் சரவணகுமார். நள்ளிரவு ஆகிவிட்டது புல்லட்டை எடுக்க யாரும் வரவில்லை. ஆனால், நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தவருக்கு, ஓர் அவசர அழைப்பு. உடனே அங்கிருந்து கிளம்பினார் சரவணகுமார்.

வேலையை முடித்துவிட்டு மீண்டும் அதிகாலையில் வந்து பார்த்தால், அந்த புல்லட் மாயமாகியிருந்தது. உடனே அந்தப் பகுதியின் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தார் சரவணகுமார். அதில், அந்த புல்லட் எழும்பூர் வழியாகப் புதுப்பேட்டைக்குள் நுழைந்திருந்தது. ஆனால், அடுத்தடுத்த சில காட்சிகளில் வழக்கம்போல புல்லட்டை காணவில்லை. புல்லட்டில் சென்ற இளைஞர், இன்னொருவருடன் பல்சர் பைக்கில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. புல்லட்டை தினமும் இரவு ஒவ்வொரு ஏரியாவுக்கு மாற்றி வருகிறார்கள் என்பது அப்போதுதான் சரவணகுமாருக்குப் புரிந்தது.

Also Read: `அறை முழுவதும் பணத்தைச் சிதறவிட்ட மர்ம நபர்!'- செங்கல்பட்டு டோல்கேட் கொள்ளைக் காட்சிகள் #CCTV

தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கண்காணித்ததில், அதிகாலையில் பல்சர் பைக்கில் வந்த அதே உடல்வாகு கொண்ட இளைஞர்கள், புதுப்பேட்டையிலிருந்து புல்லட்டை எடுத்துக்கொண்டு கலங்கரை விளக்கம் வழியாக நொச்சிக்குப்பம் சர்வீஸ் சாலையில் செல்லும் காட்சிகள் கிடைத்தன. இரண்டு நாள்கள் கழித்து அதே கறுப்பு புல்லட் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதில் வந்த இளைஞர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதையும் கேமரா காட்சிகளில் பார்த்தார் சரவணகுமார்.

உடனடியாக இது குறித்து தனிப்படைக்குத் தகவல் அனுப்பினார் சரவணகுமார். அந்த டவர் லொகேஷனில் பதிவான செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டன. பூஞ்சேரியில் அந்த புல்லட் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் பதிவான சிக்னல்களை வைத்து விசாரணை நடந்தது. அதில் பைக் நிறுத்தப்பட்டிருந்த லொகேஷனில் துல்லியமாகச் சிக்கியது இளைஞர் ஒருவரின் செல்போன் எண். அதன் ஜி.பி.எஸ் லொகேஷனைப் பின்தொடர்ந்த போலீஸார், கோயம்பேட்டில் வைத்து அந்த இளைஞரை வளைத்தனர்.

அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் இன்னும் சில பேர் சிக்கினர். அவர்களிடமிருந்து 26 புல்லட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிதனமாக சிசிடிவி காட்சிகளைப் பார்த்து திறமையாகச் செயல்பட்ட தலைமைக் காவலர் சரவணகுமாரைச் சென்னைக் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டினார்.

இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் உதவி செய்திருந்தாலும் தலைமைக் காவலர் சரவணகுமார் மற்றும் தனிப்படை காவலர்களின் முயற்சிதான் குற்றவாளிகள் சிக்கியதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும், ``சிசிடிவி காட்சிகளை வைத்துக் கொண்டு யார் வேண்டுமானாலும் குற்றவாளிகளைப் பிடித்துவிட முடியாது. காவல்துறையால் மட்டுமே அது சாத்தியம். காவல்துறை என்பது இந்தியா முழுவதும் செயல்படும் மிகப் பெரிய நெட்வொர்க் என்பதால் எங்கு எது நடந்தாலும் எங்களால் எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்'' என்பதையும் பதிவு செய்கிறார்கள் காவல்துறையினர்.

சிசிடிவி-யே துணை!

எங்கிருந்து வேண்டுமானாலும் நம் வீட்டைப் பாதுகாக்க சிசிடிவியே துணை நிற்கும் என்பதற்கு உதாரணமாக அடுத்து வரும் சம்பவத்தைச் சொல்லலாம்!

சென்னை போரூரில் தனி வீடு ஒன்றில் வசித்து வருபவர் சண்முக சுந்தரவள்ளி. தனியாக வசித்து வரும் இவர், வீட்டைப் பூட்டிக் கொண்டு, அண்ணா நகரில் உள்ள தன் மகள் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். சுந்தரவள்ளியின் மகன் அருள்வேல் அயர்லாந்து நாட்டில் வசித்து வருகிறார். தன் தயாரின் பாதுகாப்புக்காக வீட்டில் சிசிடிவி கேமாராக்கள் பொருத்தியிருக்கிறார் அருள்வேல். அவ்வப்போது தனது செல்போனில் சென்னை வீட்டின் சிசிடிவி காட்சிகளைக் கண்காணிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அருள்வேல். அன்று அம்மாவும் வீட்டில் இல்லை என்பதால் செல்போனை எடுத்து சிசிடிவி காட்சிகளைப் பார்த்திருக்கிறார். வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் சுற்றித் திரிந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்வேல், உடனடியாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

CCTV

Also Read: பினராயி விஜயன் அலுவலக சிசிடிவி பதிவைக் கேட்கும் என்.ஐ.ஏ! - ஸ்வப்னா வழக்கில் திருப்பம்

ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் உடனே சுந்தரவள்ளியின் வீட்டுக்குச் சென்று மர்ம நபரைக் கைது செய்தனர். அயர்லாந்திலிருந்து கொண்டே சிசிடிவி-யின் மூலம் தன் சென்னை வீட்டை பாதுகாத்துள்ள இளைஞருக்குச் சென்னை காவல்துறையினர் பாராட்டுகளைப் பரிசாக்கினர்.

அடுத்த பகுதியில் `நெகிழ வைக்கும் சிசிடிவி கிராமங்கள்' பற்றிய கதையோடு உங்களைச் சந்திக்கிறோம்!


source https://www.vikatan.com/social-affairs/crime/story-about-cases-solved-with-the-help-of-cctv-cameras

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக