சிவகாசியில் குறைந்த பட்டாசு விற்பனை:
இந்தியாவில் விற்பனையாகும் பட்டாசுகளில் 80 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுபவை தான். ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் இரண்டு மாதங்கள் விற்பனையாகும். தீபாவளிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து பட்டாசு ஆர்ட்டர் கொடுத்துவிட்டுச் செல்வார்கள். வருடா வருடம் பட்டாசுகளின் விலையும் கணிசமாக உயரும். ஆனால், இந்த ஆண்டு பட்டாசுகள் விலையும் உயர்த்தப்படவில்லை. இருந்த போதிலும், கொரோனா பேரிடர் காரணமா வழக்கத்துக்கு மாறாகப் பட்டாசு விற்பனை 50 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நடந்து வருவதாகச் சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்
சிவகாசியில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. இங்கு ஆண்டுக்குப் பல நூறு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுகிறது. எப்போதும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கும் வர்த்தகம், இந்த வருடத்தைப் பொறுத்தவரை கொரோனா பேரிடர் காரணமாக மந்தமாகவே நடைபெற்று வருகிறது. அதோடு, பல்வேறு மாநிலங்கள் அடுத்தடுத்து பட்டாசு விற்பனை, மற்றும் வெடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தடை விதித்த மாநிலங்கள்:
டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காற்று மாசுபாடு காரணமாக அந்த மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், பட்டாசு வெடிக்கவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்த மாநிலங்களிலிருந்து பட்டாசு ஆர்டர் கொடுத்தவர்கள் கொடுத்த முன்பணத்தைத் திரும்பக் கேட்டு வருவதாகப் பட்டாசு நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். சிவகாசியில் மிக மோசமான நிலை நிலவுவதால் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த பல்வேறு பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளது. அதோடு, இந்த நிறுவனங்களை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
பசுமை தீர்ப்பாய தடை உத்தரவு:
நாடு முழுவதும் காற்று மாசு அதிகம் இருப்பதால், நவம்பர் 09-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்தியா முழுவதும் காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள், மாநகரங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடைவிதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவை மாநில அரசு கண்டிப்புடன் நடைமுறைப் படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. காற்று மாசுபாடு உயர்ந்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பட்டாசு வெடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் இவ்வாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சீன பட்டாசுகள் சட்டவிரோதமாக இந்தியா கொண்டுவரப்பட்டு கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரக பட்டாசுகளை விடச் சீன பட்டாசுகள் 30 சதவிகிதத்திற்கு விலை குறைந்தவை. இந்த வருடம் இந்திய அரசு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கவில்லை. சீன பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது நிலவும் கொரோனா பேரிடர் சூழல் காரணமாக, பொதுமக்கள் நேரிடையாக கடைகளுக்குச் சென்று பட்டாசுகளை வாங்குவதை விட, ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த வருடம் பெரும்பாலான விற்பனை ஆன்லைனில் நடைபெற வாய்ப்புள்ளதாக ஆன்லைன் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால், கடைகளில் விற்பனைக்கு வைத்திருப்பவர்களின் வியாபாரம் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளதாகவும் கடை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில், மக்கள் பட்டாசு வெடித்தால் தான், அந்த தொழிலாளர்கள் வீட்டில் அடுப்பெரியும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
source https://www.vikatan.com/government-and-politics/politics/many-states-ban-the-sale-of-fireworks-workers-worried-about-that
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக