Ad

செவ்வாய், 10 நவம்பர், 2020

புதுக்கோட்டை: கடலில் பண்டல் பண்டலாக மிதந்த கஞ்சா பொட்டலங்கள்! - மீட்டு வந்து ஒப்படைத்த மீனவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கோட்டைப்பட்டினம் அருகே தெற்கு புதுக்குடியைச் சேர்ந்தவர் பாலமுருகன். தன் மீனவ நண்பர்களுடன் அவருக்குச் சொந்தமான பைபர் படகில் கடலுக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது கடலின் மேற்பரப்பில், ஒரு சணல் மூட்டை மிதந்து வந்துள்ளது. இதனைக் கண்ட மீனவர்கள் உடனே தெற்கு புதுக்குடி கடற்கரைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். இதையடுத்து இதுபற்றி, கடலோரப் பாதுகாப்புக்குழுவுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர பாதுகாப்புக் குழும இன்ஸ்பெக்டர் முத்துக்கண்ணு சாக்கு மூட்டைகளை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சணல் மூட்டை முழுவதிலும் 35கிலோ அளவுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்தையும் கைப்பற்றினர். இதேபோல், வடக்குப்புதுக்குடியைச் சேர்ந்த ஆரியசாமி மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, சணல் மூட்டை ஒன்று தென்படவே, அதுபற்றி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவே அந்த மூட்டையில் 14 பண்டல்களில் 34 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றினர். இதேபோல், துரைராஜ் என்ற மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்த போதும் ஒரு சணல் மூட்டை கிடைத்துள்ளது.

அதை எடுத்துக்கொண்டு கரை திரும்பினார். அதில், 35 கிலோ அளவிலான கஞ்சா பொட்டலங்கள் இருந்துள்ளது. இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 100 கிலோ மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் கடலில் இருந்து கிடைத்தது. அடுத்தடுத்து கடலில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது,'கடற்கரைப் பகுதியையொட்டி தான் கஞ்சா கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடந்த சில மாதங்களாகவே கஞ்சா விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். அதிரடி ரெய்டு போன்றவற்றால், பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது அடுத்தடுத்த நாள் கடலில் இருந்து மீனவர்கள் மூலம் மூட்டைகளில் கஞ்சா கிடைத்திருக்கிறது. இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்குக் கடத்தலில் ஈடுபடுபவர்களைப் பிடித்து வருகிறோம். கடத்த முயன்றவர்கள் போலீஸுக்கு பயந்து தூக்கி வீசி விட்டுச் சென்றார்களா, அல்லது கடத்த முயன்ற போது தவறி விழுந்ததா என்பது குறித்தும் தொடர் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/bundles-of-cannabis-floated-in-the-sea-fishermen-rescued-and-handed-over-to-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக