இந்தியாவில் மனித–யானை எதிர்கொள்ளல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் மனித–யானை எதிர்கொள்ளல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவையில் இரண்டு மனிதர்கள், ஒரு யானை, மனித–யானை எதிர்கொள்ளலில் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இருவர் காயமடைந்துள்ளனர். மனித–யானை எதிர்கொள்ளலைத் தடுப்பதற்காக வனத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் உள்ள வனச்சரகங்கள் வாரியாக, தினசரி யானைகள் நடமாட்டம் குறித்த தகவல்களை வனத்துறை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், இதைத் தடுப்பதற்காக தற்போது மூன்று குழுக்களை வனத்துறை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பயிர்சேதம் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்கும் விதமாக, ஆல்பா (22நபர்கள்), பீட்டா (26 நபர்கள்) மற்றும் காமா (23 நபர்கள்) என மூன்று சிறப்பு வன எல்லை இரவு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை வனக் கோட்டத்தில் பணிபுரியும் யானை விரட்டும் காவலர்கள் இந்தக் குழுக்களில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு குழுவிலும் இரண்டு அல்லது மூன்று துணைக் குழுக்கள் இருக்கின்றன.
இந்த துணை குழுக்கள் தொம்பிலிபாளையம், முள்ளங்காடு, நரசிபுரம், மருதமலை, வரப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வெள்ளியங்காடு, சமயபுரம், மேட்டுப்பாளையம் டிப்போ மற்றும் அம்மன்புதூர் (சிறுமுகை) ஆகிய இடங்களில் இருந்து பணியாற்றுவார்கள். ஒவ்வொரு துணை குழுவுக்கும் யானை விரட்டுவதற்காக ஒரு வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழு தினமும் மாலை 4 மணியிலிருந்து மறுநாள் காலை 7 மணி வரை அந்தந்த பகுதிகளில் காட்டின் எல்லைக்கு வெளியே ரோந்துப் பணிகளை மேற்கொள்வார்கள்.
காட்டைவிட்டு யானைகள் வெளியே வந்துள்ளன என தகவல் அறிந்தவுடன் அந்த பகுதிக்கு உடனடியாக இவர்கள் சென்று யானைகளை மீண்டும் காட்டிற்குள் திருப்பி அனுப்புவார்கள். இவர்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/tamilnadu/coimbatore-forest-department-created-new-team-to-prevent-human-elephant-conflict
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக