Ad

வியாழன், 5 நவம்பர், 2020

ஏழு தமிழர் விடுதலை விவகாரம்: ஆளுநர் மீதான உச்ச நீதிமன்ற அதிருப்தி கண்டுகொள்ளப்படுமா?

மருத்துவப்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில், ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டி, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாகக் குரல் எழுப்பியதுபோல, அதே மருத்துவக் கல்வியில், அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களின், 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டுக்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் ஆதரவு தெரிவித்தது போல, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்கவேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, தமிழ் உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரும் தற்போது ஓரணியில் திரண்டிருக்கின்றனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

எழுவர் விடுதலைக்காக, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் தொடர்ச்சியாக போராடி வந்தாலும், ஏழு பேரையும் விடுவிக்கலாம் என்று தமிழக அரசின் பரிந்துரை விவகாரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருப்பதே தற்போது மீண்டும் கோரிக்கைக்கு வழிவகுத்திருக்கிறது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் இது தொடர்பாக ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அந்த நகலை அனுப்பி வைத்துள்ளார். அதேபோல, சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக ஆளுநருக்குப் பரிந்துரைக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியிருக்கிறார். தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஜனவரியன்றே இதுகுறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதாக இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், தமிழக ஆளுநர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டெல்லிக்குச் சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'உச்சநீதிமன்றத்தின் அதிருப்தியைத் தொடர்ந்து இந்த விவகாரம் என்னாகும்?'

முன்னாள் நீதிபதி அரி பரந்தாமனிடம் பேசினோம்,

''சட்டப்படி, கேபினட்டில் எடுத்த முடிவை மறுக்கும் அதிகாரம் கவர்னருக்குக் கிடையாது. அதுகுறித்து மாற்றுக் கருந்து இருந்தால் கவர்னர் தெரிவிக்கலாம். அப்படித் தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கு தமிழக அரசு விளக்கம் தந்தால் போதுமானது. இந்த விவகாரத்தில் அப்படி மாற்றுக் கருத்துத் தெரிவிக்க, பரிசீலனை செய்ய இனி எதுவுமே இல்லை.

அரி பரந்தாமன்

2014-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்து, மத்திய அரசிடம் கருத்துக் கேட்டார். அப்போதிருந்த மன்மோகன் சிங் அரசாங்கம் உடனடியாக உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கியது. ஒன்றிரண்டு மாதங்களில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் தொடுத்த அந்த வழக்கை பா.ஜ.க அதைவிட உக்கிரமாகக் கையாண்டது. அதற்காக, மூன்று பேர்கொண்ட அமர்வு, ஐந்து பேர்கொண்ட சிறப்பு அமர்வாக அமைக்கப்பட்டது. சி.பி.ஐ விசாரணை செய்ததால், மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடுமையாகச் சண்டை போட்டது.

2016-ம் ஆண்டில் ஐந்துபேர்கொண்ட அமர்வு விசாரணை செய்து 'மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்' என தீர்ப்பளித்தது. மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்தது. அதேவேளை, மாநில அரசுக்கு அதிகாரம் இல்லாமல் இல்லை, அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரம் ஆர்டிக்கிள் 161-ன் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கவேண்டிய அவசியமில்லை என வழிகாட்டியது. அதன்படி, 2018-ம் ஆண்டில் அரசமைப்புச் சட்டத்தின் இறையாண்மை அதிகாரத்தில் விடுதலை செய்ய முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு. அதில்தான் இன்னும் கவர்னர் முடிவெடுக்காமல் இருக்கிறார். ஏற்கெனவே, கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நளினி உள்பட நான்கு பேருக்கு, தூக்குத் தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் பாத்திமா பீவிக்கு அனுப்பப்பட்டது. அதை அவர் நிராகரித்தார். உடனடியாக நான்குபேரும் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றனர். நீதிமன்றம் ஒரே மாதத்தில் கவர்னரின் உத்தரவை ரத்து செய்தது. அப்போது, கேபினட்தான் முடிவு செய்யவேண்டும், கவர்னருக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அமைச்சர் ஜெயக்குமார்

சென்ற ஆண்டு, குருநானக்கின் 550-வது பிறந்த நாளுக்காக, பீம்சிங் என்ற காங்கிரஸ் முதல்வரைக் கொலை செய்த, காலிஸ்தான் தீவிரவாதிகளை ஆயுள் தண்டனையிலிருந்து விடுதலை செய்தனர். அடுத்ததாக, மாகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகியோர் 16 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமென அக்டோபர் 13, 1964-ல் விடுவிக்கப்பட்டனர். மகாத்மா காந்தி வழக்கில் ஆயுள் தண்டனை16 ஆண்டுகள், ராஜீவ் காந்தி வழக்கில் 28 ஆண்டுகளா?

தவிர, ராஜிவ் வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள் சிலரே, பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதை வெளியில் வந்து தெரிவித்திருக்கின்றனர். இதற்கு மேலும் ஏழு பேரையும் காத்திருக்க வைப்பது என்பது சரியல்ல. தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களின் விடுதலை இவ்வளவு தாமதப்படுத்தப்படுகிறது. தற்போது ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் இவ்வளவு தாமதம் நடக்குமா?'' என்று கேள்வியெழுப்புகிறார் அவர்.

Also Read: எழுவர் விடுதலை விவகாரம்... மறுத்த ஆளுநரும் மறைந்துள்ள அரசியலும்!

''எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருப்பதால்தான், கவர்னர் இவ்வளவு தாமதப்படுத்துகிறாரா?''

அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினோம்,

''ஏழு பேர் விடுதலை விவகாரத்தில், அம்மா எடுத்த முடிவுதான் எங்கள் முடிவு. அம்மா வழியில், கேபினட்டில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பினோம். அவரிடம் பலமுறை வலியுறுத்தியிருக்கிறோம். உச்சநீதிமன்றமும் தற்போது அதுகுறித்து ஒரு கருத்துச் சொல்லியிருக்கிறது. அதனால், ஆளுநர் விரைவாக நல்ல முடிவை அறிவிப்பார் என்கிற நம்பிக்கை இருக்கிறது'' என்றவரிடம்,

'7.5 இட ஒதுக்கீடு விவகாரத்தில், தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவுபோல், இந்த விஷயத்திலும் எதிர்பார்க்கலாமா?' என்று கேட்க,

''சமூக நீதி காக்கப்பட்ட வேண்டும், மருத்துவக் கவுன்சிலிங்கை தொடர்ச்சியாகத் தாமதப்படுத்த முடியாது என்கிற அடிப்படையில் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, எடுத்த முடிவு அது. இந்த விஷயத்தை அதனுடன் ஒப்பிடமுடியாது. ஆனால், நாங்களும் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்கிற விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்'' என்றார் அவர்.

வானதி சீனிவாசன்

கடைசியாக, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து பா.ஜ.கவின் தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனிடம் பேசினோம்,

''மிகவும் குறிப்பிட்டு பா.ஜ.க இந்த விஷயத்தில் எந்த நிலைப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. ஆனால், வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொண்டு மிக நீண்ட காலம் தண்டனையைக் கழித்துவருகிறார்கள். விசாரணை செய்த அதிகாரிகளும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருவது மக்கள் மனதில் அவர்களின் மீது ஒரு சிம்பதியை உருவாக்கியிருக்கிறது. அதனால், மனிதநேயத்தோடு இந்த வழக்கை வித்தியாசப்படுத்தி அணுகவேண்டும் என்றே நாங்களும் நினைக்கிறோம். ஆனால், வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றங்களின் தீர்ப்புகளுக்கும் நாம் மரியாதை கொடுத்தாகவேண்டும். கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என்பதையே நாங்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்'' என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-rajiv-gandhi-case-convicts-release

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக