Ad

சனி, 21 நவம்பர், 2020

நாகை: `எத்தனை அடக்குமுறை வந்தாலும் பயணம் தொடரும்..!’ - மீண்டும் கைதான உதயநிதி

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநியின்  நினைவு இல்லம் உள்ளது. இங்கிருந்து எதிர்வரும்  2021  தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற  பிரசார பயணத்தை 20 -ம் தேதி மாலை  தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார்.

உதயநிதி ஸ்டாலின்

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ``தி.மு.க. மிசாவின் கொடுமைகளை சந்தித்த கட்சி. இந்த அடிமை ஆட்சியின் சலசலப்புக்கு அஞ்சாது.  எத்தனை அடக்குமுறை வந்தாலும் பயணம் தொடரும். கொரோனாவிலும்  கொள்ளையடித்த ஆட்சி இந்த அ.தி.மு.க. ஆட்சி.  அடுத்து மலரப் போவது தி.மு.க. ஆட்சிதான். 

இப்போதுள்ள அமைச்சர்கள்   கொள்ளையடித்த ஊழல் பட்டியல் தலைவர் கையில்  இருக்கிறது. அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அராஜக அநியாய அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப நாம் உறுதியாக இருக்க வேண்டும்" என்று பேசி முடித்து கீழே இறங்கியவுடன் போலீசார் அவரைக் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு முன்னாள் எம்.பி .ஏ.கே.எஸ். விஜயன், எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க பிரமுகர்கள் மீதும்  வழக்கு பதிந்து, அதன்பின் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் இன்று காலை வேளாங்கண்ணியிலிருந்து பிரசார பயணத்தை துவக்கிய உதயநிதி ஸ்டாலினுடன்  முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம், கே.என். நேரு போன்ற சீனியர்களும கலந்து கொண்டனர். வழிநெடுகிலும் தி.மு.க. வினர்  உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று உலக மீனவர் தினம் என்பதற்காக அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்திற்குச்  சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் ஒரு விசைப்படகில் ஏறி  சிறிது தூரம் கடலில் சென்று வந்தார். அங்கு தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். படகிலிருந்து இறங்கியவுடன் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்துள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்

கைதாகி வேனில் இருந்தபடியே பேசிய உதயநிதி ஸ்டாலின்,``தி.மு.க-வின் பிரசார பயணத்தை கண்டு அ.தி.மு.க. அரசு பயந்து இந்த நடவடிக்கை எடுக்கிறது. நேற்று கைது செய்தார்கள். இன்றும் கைது செய்கிறார்கள். பீகாரில் தேர்தல் நடந்தது. மோடி, அமித்ஷா போன்றோர்  ஆயிரக்கணக்கானோர் மக்கள்  மத்தியில் பேசினார்கள். எடப்பாடி பழனிசாமி மாவட்டம்தோறும பேசுகிறார். ஆனால் தி.மு.க.வுக்கு மட்டும்தான் அனுமதி  மறுக்கிறார்கள். இதனைக் கண்டு அஞ்சமாட்டோம். எத்தனை அடக்குமுறை வந்தாலும் எங்கள் பயணம் தொடரும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/udayanithi-stalin-arrested-for-second-time-for-conducting-rally-for-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக